மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 செப் 2020

சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய முன்னாள் நீதிபதிகள்!

சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய முன்னாள் நீதிபதிகள்!

சூர்யாவுக்கு ஆதரவாக முன்னாள் நீதிபதிகள் 6 பேர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று முன்தினம் நீட் தேர்வு பயத்தால் மதுரை

ஜோதிஸ்ரீ துர்கா நாமக்கல் மோதிலால், தருமபுரி ஆதித்யா என 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குவதாக நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், “கொரோனா அச்சத்தால்‌ உயிருக்குப் பயந்து ‘வீடியோ கான்பிரன்சிங்‌’ மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது” என்று விமர்சித்திருந்தார். நீட் தேர்வுக்கு எதிரான சூர்யாவின் அறிக்கை தேசிய அளவில் கவனம் பெற்றது. எனினும், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் எழுதினார்.

இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சூர்யாவுக்கு ஆதரவுக் கரம் நீண்டு வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக முன்னாள் நீதிபதிகள் 6 பேர் களமிறங்கியுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், து.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு இன்று (ஆகஸ்ட் 14) கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், “மாணவர்கள் மரணம் காரணமாக சூர்யா தெரிவித்த கருத்துகளை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீட் தேர்வு காரணமாக 4 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதன் வெளிப்பாடாகவே, சூர்யா அவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த கருத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். ஆகவே, சூர்யா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இந்த விஷயத்தை பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதாக தெரிவித்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள், தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாம் எனவும் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

எழில்

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

திங்கள் 14 செப் 2020