மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 செப் 2020

அமமுகவினரை குறி வைக்கும் பாஜக

அமமுகவினரை குறி வைக்கும் பாஜக

தமிழக பாஜக தலைவராக முருகன் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு பிற கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வி.பி. துரைசாமி, கு.க. செல்வம் போன்ற பிரபலங்கள் ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பல்வேறு கட்சிகளில் இருந்து தொண்டர்களையும் நிர்வாகிகளையும் பாஜகவில் இணைப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் முருகன்.

அதன்படி முதல்வரின் மாவட்டமான சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து தொடர்ந்து பலரும் பாஜகவில் இணைந்து வருகிறார்கள்.

செப்டம்பர் 9-ஆம் தேதி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி சுமார் 300 பேர் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர்.

இதற்கு முன்னர் சேலம் அமுமுக கட்சியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட உட்பட சுமார் 2000 பேர் பாரதிய ஜனதாவில் கடந்த 4 ஆம் தேதி இணைந்தனர்.

செப்டம்பர் முதல் வாரத்தில் மட்டும் சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி தொகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஆயிரக்கணக்கில் பாஜகவில் இணைந்துள்ளனர். பாரப்பட்டி பகுதியில் குட்டி என்கிற சோலை குமரன் தலைமையில் அமமுகவினர் உள்ளிட்ட சுமார் 2000 பேர் பாஜகவில் இணைந்தனர். மேலும் பலர் பாஜகவில் இணையத் தயாராக இருப்பதாக சொல்லப்பட்டதை அடுத்து அவர்களிடம் பத்தாயிரம் பேர் களுக்கான உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பமும் வழங்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி சேலம் கிழக்கு பாஜகவின் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் மணிகண்டனிடம் பேசினோம்.

“தமிழகம் முழுதும் பாஜகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகி வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்திலும் குறிப்பாக சேலம் கிழக்கு மாவட்டத்தில் இளைஞர்கள்,பெண்கள், பொதுமக்கள் பலர் பாஜகவை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள்.

அமமுக மட்டுமல்ல, பாமக, திமுக என பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பாஜகவை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். கடந்த ஆறு ஆண்டுகளாக நடக்கும் மோடி ஆட்சியில் ஒரு ஊழலைக் கூட சுட்டிக் காட்ட முடியவில்லை. மேலும் மதச் சார்பின்மை என்ற பெயரில் பல கட்சிகள் பின்பற்றும் இந்து விரோத கொள்கைகளை மக்கள் மெல்ல மெல்ல உணர்ந்துகொள்ள ஆரம்பித்துவிட்டனர். அதன் அடிப்படையில்தான் தாங்களாகவே முன் வந்து பாஜகவில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். நாங்கள் களப் பணியாற்றுகையில் எங்களின் கூட்டங்களுக்கு தேடி வந்து மாற்றுக் கட்சியினர் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாற்றுக் கட்சியினர் மட்டுமல்ல சேலம் கிழக்கு மாவட்டத்தில் இதுவரை சுமார் 60 சிறு அமைப்புகள் கலைக்கப்பட்டு பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சேலம் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜகவே போட்டியிட வேண்டும் என்று தலைமைக்கு நாங்கள் கோரிக்கை வைப்போம். அந்த அளவுக்கு கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளோம்” என்கிறார் மணிகண்டன்.

பாஜகவில் சேருபவர்களில் பெரும்பாலானோர் அமமுகவைச் சேர்ந்தவர்களாக இருப்பதை அறிந்து, பாஜகவில் இணைந்த சில அமமுக பிரமுகர்களிடம் பேசினோம்.

“நாங்கள் எல்லாம் தினகரனை நம்பி வந்தோம். ஆனால் ஊரடங்கு தொடங்கிய மார்ச் இறுதி முதல், இப்போது வரை தினகரனை அறிக்கைகளில் பார்க்க முடிகிறதே தவிர, வேறு எந்த வடிவத்திலும் பார்க்க முடியவில்லை. அதிமுகவில் நேரடியாகவே ஆய்வுக் கூட்டங்களுக்கு வருகிறபோது முதல்வர் எடப்பாடி கட்சியினரை சந்திக்கிறார். அதுவும் சேலத்தில் அவர் அடிக்கடி கட்சியினரை சந்திக்கிறார்.

திமுகவில் காணொலியில் மூத்த நிர்வாகிகள் வரை அனைத்து நிர்வாகிகளுடன் ஸ்டாலின் பேசுகிறார். பாமகவும் இணையத்தில் பொதுக்குழு நடத்துகிறார்கள். ஆனால் அமமுக பொதுச் செயலாளர் தினகரன், இதுவரை ஒரு காணொலி கூட்டம் கூட நடத்தவில்லை. இதனால் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் சோர்ந்திருக்கிறார்கள். எங்களுக்கு அதிமுகவில் சேர்ந்தால் மரியாதை இருக்காது. அதனால்தான் பாஜகவில் சேர்ந்து வருகிறோம்” என்கிறார்கள்.

-ஆரா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

திங்கள் 14 செப் 2020