மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

திமுகவுக்குச் செல்லும் செங்கோட்டையன் அண்ணன் மகன்?

திமுகவுக்குச் செல்லும் செங்கோட்டையன் அண்ணன் மகன்?

எம்.ஜி.ஆர் காலம் தொட்டு அதிமுகவில் முக்கிய தலைவராக வலம் வருபவர் செங்கோட்டையன். அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தபோது சசிகலா அணியில் இருந்த இவருக்கு அவைத் தலைவர், சட்டமன்ற அவை முன்னவர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன. தற்போது எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது குடும்பத்திலிருந்து ஒருவர் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக கொங்கு வட்டாரங்களில் விசாரித்தோம்...

செங்கோட்டையன் உடன் பிறந்த சகோதரர் காளியப்பனின் மகன் செல்வம். இவர் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் மாநிலச் செயலாளர், அகில இந்திய மருந்து வணிகர் சங்கத்தின் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை வகிக்கிறார். அத்துடன், செங்கோட்டையனுக்கு அரசியலில் ஆல் இன் ஆளாக இருந்து வந்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு நடந்த அரசிற்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூவத்தூரிலுள்ள ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர். அந்த ரிசார்ட்டில் தங்கினால் பாதுகாப்பானது என செங்கோட்டையன் மூலமாக சசிகலாவுக்கு தெரியப்படுத்தி அதனை ஏற்பாடு செய்தவர்தான் இந்த செல்வம். அதாவது, செல்வம் சார்ந்திருக்கும் மருந்து வணிகர் சங்க கூட்டங்கள் இந்த ரிசார்ட்டில்தான் நடைபெறும். அதன் மூலம் ஏற்பட்ட தொடர்பை பயன்படுத்தி ரிசார்ட்டை ஏற்பாடு செய்துள்ளார். இப்படி அதிமுக தரப்புக்கு ஒரு முக்கியமான நபராகவே இருந்துள்ளார்.

இந்த நிலையில் செல்வம் திமுகவில் இணைய இருப்பதாக செங்கோட்டையனுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. உடனே செல்வத்தை அழைத்துப் பேசியிருக்கிறார் செங்கோட்டையன். அவர் எவ்வளவு பேசியும் பிடிகொடுக்காத செல்வம், நான் திமுகவில் இணையப்போகிறேன். என்னை டிஸ்டர்ப் செய்யாதீர்கள் என்று தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார். இதனையடுத்து செல்வத்தின் சகோதரர், மாமனார் ஆகியோரிடம் செங்கோட்டையன் பேசியிருக்கிறார்.

“நான் அதிமுகவில் அமைச்சராகவும், முக்கிய தலைவராகவும் இருக்கும் நிலையில், தேர்தல் வரும் நேரத்தில் என்னுடைய குடும்பத்திலிருந்து ஒருவர் திமுகவுக்கு சென்றால் என்ன அர்த்தம். அப்படியென்றால் இது எனக்கு எதிராக செயல்படுவது போலதானே. செல்வமே என் பேச்சை கேட்கவில்லை என்றால் மற்றவர்கள் கேட்பார்களா...அவர்களுக்கு நான் என்ன பதில் கூற முடியும்” என்றெல்லாம் பல வகைகளில் பேசி சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.

ஆனால், தன்னுடைய முடிவில் உறுதியாக உள்ள செல்வம் விரைவில் திமுகவில் இணைய இருக்கிறார் என்கிறார்கள் கொங்கு வட்டாரத்தில்...

வணங்காமுடி எழில்

செவ்வாய், 15 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon