மாணவர்கள் தற்கொலைக்கு முதல்வரே முழுக் காரணம்: ஸ்டாலின்

politics

மாணவர்களின் தற்கொலைக்கு திமுகதான் காரணம் என்று சொன்ன முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

திமுக ஒவ்வோர் ஆண்டும் தந்தை பெரியார் பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாள், அண்ணா பிறந்தநாள் ஆகியவற்றை முப்பெரும் விழாவாகக் கொண்டாடி வருகிறது. அந்த வகையில் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நேற்று (செப்டம்பர் 15) மாலை முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவில் மா.மீனாட்சிசுந்தரத்துக்கு பெரியார் விருதையும், முனைவர் அ.இராமசாமிக்கு அண்ணா விருதையும், உபயதுல்லாவுக்கு கலைஞர் விருதையும், முன்னாள் அமைச்சர் தமிழரசிக்கு பாவேந்தர் விருதையும், இராஜகோபாலுக்கு பேராசிரியர் விருதும் வழங்கப்பட்டது. மீனாட்சி சுந்தரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் ஓய்வில் இருப்பதால் அவருக்கு பதிலாக அவர் மகன் விருதைப் பெற்றுக்கொண்டார்.

விழாவில் உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின், “கடந்த 9ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் பேசும்போது, நான் குறிப்பிட்டு சொன்னேன். இன்னும் ஏழே மாதத்தில் நாம்தான் ஆட்சி அமைக்கப் போகிறோம். இது நான் அல்ல, நீங்கள் அல்ல, நாட்டில் இருக்கும் மக்களே தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை நான் பொதுக்குழுவில் சொன்னேன்.

உடனே ஊடகங்கள் பெரிய அளவில் விவாதங்கள் நடத்தியது. இதை பெரிது பெரிதாக விளம்பரப்படுத்தினார்கள். விமர்சனம் செய்தார்கள். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. விவாதம் நடத்துவதற்கு எதுவும் இல்லை; மக்கள் மனத்தில் இருப்பதைத் தான் நான் சொன்னேன். கொரோனா வந்த பின் ஆட்சி என்று ஒன்று இங்கு இருக்கிறதா? கொரோனாவை விட கோமா நிலையில் இன்றிருக்கும் அதிமுக. ஆட்சி இருந்துகொண்டிருக்கிறது” என்று சாடினார்.

ஒரு உயிர்கூட போகாது என்று சொன்னது முதலமைச்சர். இன்று சட்டமன்றத்தில் கேட்டால் அது அரசின் கொள்கை என்று மாற்றிப் பேசுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர் மூன்று நாளில் கொரோனா சரியாகிவிடும் என்றார்கள். 10 நாளில் முடிந்துவிடும், கடைசியாக கடவுள் பார்த்துக்கொள்வார் என்று சொல்கிறார்கள். இன்று 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டார்கள். இதுதான் கொரோனாவை ஒழிக்கும் லட்சணமா, தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டிவிட்டது. இதுதான் பரவாமல் தடுக்கும் அழகா என்ற கேள்விகளை அடுக்கிய ஸ்டாலின்,

இது என்னுடைய புள்ளிவிவரம் இல்லை; அரசு தந்திருக்கும் புள்ளிவிவரம் . அதுவும் உண்மையா கிடையாது. இதிலும் பொய்க் கணக்கு. கொள்ளையடிப்பதிலும், கொரோனா கணக்கு காண்பிப்பதிலும் பொய்க் கணக்கு. இந்தக் கோட்டையில் அமர்ந்திருக்கும் கொடியவர்களை – கொரோனாவை விட கொடிய ஊழல்களை செய்பவர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டுமா வேண்டாமா… இதுதான் மக்களின் கேள்வி என்றார்.

மேலும், “கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்து போய்விட்டார்கள்.அரியலூர் அனிதாவில் தொடங்கி, பெருவலூர் பிரதீபா, கூனிமேடு மோனிஷா, திருப்பூர் ரீதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஷ்யா, பெரம்பலூர் கீர்த்தனா, கோவை சுபஸ்ரீ, அரியலூர் விக்னேஷ், மதுரை ஜோதிஸ்ரீ துர்கா, தர்மபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால் இவர்கள் யார்? எப்படி இறந்தார்கள்? தற்கொலை என்று கூட சொல்லமாட்டேன். கொலை நடந்துள்ளது. இவர்களை மத்திய – மாநில அரசுகள் சேர்ந்து கொலை செய்துள்ளனர். 13 பேர் கொலைக்கு யார் காரணம் என்றால் எடப்பாடி பழனிசாமிதான் இதற்கு முழுக் காரணம். இன்று மாலை பத்திரிகையினர். 13 பேர் கொலைக்கு யார் காரணம் என்றால் எடப்பாடி பழனிசாமிதான் இதற்கு முழுக் காரணம். இன்று மாலை பத்திரிகையில் தலைப்பு செய்தி என்ன தெரியுமா? 13 மாணவர்கள் தற்கொலைக்கு தி.மு.க.,தான் காரணம் என்று போட்டுள்ளார்கள். அது சட்டமன்றத்தில் பேசியது. இப்போது நான் சொல்கிறேன். கொலைக்கு காரணம் இந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சிதான்” என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின்,

நீட்டுக்கு எதிராக அனுப்பப்பட்டு தீர்மானம் என்னவாயிற்று என்று கடைசி வரையில் விவரம் தெரியவில்லை. விளக்கம் தெரியவில்லை. ஆனால் நீட் வந்துவிட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடியவில்லை, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் சக்தி இல்லை.சுற்றுச்சூழல் சட்டத்தை எதிர்த்து ஒரு கேள்வி கேட்டதுண்டா? இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கும் துணிச்சல், தெளிவு உங்களிருக்கிறதா? மாநிலத்துக்கு வந்து சேர வேண்டிய நிதியை கூட பெறமுடியாத ஒரு போக்கத்த பசங்களாக இந்த ஆட்சியில் அமர்ந்திருக்கிறீர்கள். குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கும் ஆற்றல் கிடைத்ததா உங்களுக்கு? முத்தலாக் சட்டத்தை எதிர்த்தீர்களா? மத்திய அரசுக்கு அடிபணிந்து கூனிக் குறுகி இன்றைக்கு ஒரு அடிமை ஆட்சியை தலையாட்டி பொம்மையாக நீங்கள் நடத்திக்கொண்டிருக்கிறீர்களே தவிர இந்த அடிமை ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டார்கள். அதைத்தான் இந்த முப்பெரும் விழாவில் நாமும் சபதம் எடுப்போம்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

**எழில்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *