lபுதுச்சேரியை கண்டுகொள்ளவில்லையா திமுக?

politics

புதுச்சேரி மாநிலத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகளும், 1 மக்களவைத் தொகுதியும் உள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும், திமுகவுக்கு கணிசமான அளவு செல்வாக்கு இருந்து வருகிறது. இதனிடையே நிர்வாக வசதியை காரணம் காட்டி புதுச்சேரி மாநில திமுக மூன்றாகப் பிரிக்கப்பட்டது.

12 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதுச்சேரி தெற்கு மாநில அமைப்பாளராக உருளைப்பேட்டை எம்.எல்.ஏ சிவா நியமிக்கப்பட்டார். வடக்கு மாநில அமைப்பாளராக எஸ்.பி.சிவக்குமார் நியமிக்கப்பட்டார். அவருக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 5 தொகுதிகளை உள்ளடக்கிய காரைக்கால் பகுதி மாநில அமைப்பாளராக நாஜீம் நியமிக்கப்பட்டார். மற்ற மாநில எல்லைகளில் உள்ள புதுச்சேரி பகுதிகளான ஏனாம், மாஹே போன்ற பகுதிகளில் திமுக கவனம் செலுத்தவில்லை.

இந்நிலையில் திமுக தலைமை முழுக்க முழுக்க தமிழகத்தில் ஆட்சியமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் புதுச்சேரியை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை என்று புலம்புகிறார்கள் புதுச்சேரி திமுகவினர். இதுதொடர்பாக புதுச்சேரி மாநில திமுக வட்டாரங்களில் பேசினோம்…

“தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் திமுகவில் ஒருவர் பதவியை ராஜினாமா செய்தாலோ அல்லது இறந்துவிட்டாலோ அவர்களுக்கு பதிலாக அந்தப் பதவிக்கு புதிதாக ஒருவர் விரைவாகவே நியமிக்கப்படுகிறார். ஆனால், புதுச்சேரியில் பல இடங்களில் பதவிகள் காலியாகவே இருக்கின்றன. உதாரணமாக, செயற்குழு உறுப்பினரான ராஜாராம் அதிமுகவுக்குச் சென்று சில ஆண்டுகள் ஆனபோதிலும், அந்தப் பதவி நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கிறது.

புதுச்சேரி தெற்கு மாநில திமுக அவைத்தலைவராக இருந்த சீத்தா வேதநாயகம் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். முக்கியமான இந்தப் பதவியில் இதுவரை வேறு யாரையும் நியமிக்கவில்லை. பொதுக் குழு உறுப்பினரான தட்சினாமூர்த்தி பாஜகவிற்கு சென்றபோதும், அந்த இடத்திலும் யாரும் நியமிக்கப்படவில்லை” என்று விவரித்தனர்.

மேலும், “ஒவ்வொரு பகுதியிலும் திமுகவுக்கு உறுப்பினர் சேர்க்கும் பணிகள் நடைபெற்றன. பல மாதங்கள் ஆன போதிலும் அவர்கள் யாருக்கும் இதுவரை உறுப்பினர் அட்டை வரவில்லை. சமீபத்தில் ஆன்லைன் மூலமாக உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டது. தமிழகத்தில் அதிகமானோர் அதில் சேர்ந்தாலும், புதுச்சேரியில் இணைபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. ஒரு காலத்தில் புதுச்சேரியில் திமுக ஆட்சிமைத்தது, அத்துடன் வலுவான நிலையில் இருந்து வந்தது. தற்போது, கொஞ்சம் கொஞ்சமாக கட்சி கரைந்து வருகிறது” என்று குற்றம்சாட்டுகிறார்கள். தமிழகத்துடன் புதுச்சேரியையும் திமுக தலைமை கவனிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது.

**வணங்காமுடி, எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *