விடுதலை செய்யத்தான் இத்தனை ஆண்டுகளா?: தீர்ப்பும் எதிர்வினைகளும்!

politics

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று (செப்டம்பர் 30) வழங்கிய தீர்ப்பு விவாதப் பொருளாக மாறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்த நீதிமன்றம், இவர்களுக்கு எதிராக சிபிஐ போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என தீர்ப்பில் குறிப்பிட்டது.

மேலும், “குவி மாடம் மீது ஏறியவர்கள், மசூதியை இடித்தவர்கள் சமூக விரோத சக்திகள். உண்மையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இடித்த கும்பலைத் தடுக்க முயன்றனர். அவர்களை இடிப்பதற்கு தூண்டவில்லை. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின் பின்னணியில் எந்த சதித் திட்டமும் இல்லை” என்ற கருத்தையும் நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் பதிவு செய்தார்.

தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, “கடந்த ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பாபர் மசூதியை இடித்தது தெளிவான சட்டவிரோதம் மற்றும் மிக மோசமான மீறல் என்று கூறியது. தற்போது, சிபிஐ நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் அரசியலமைப்பின் மாண்புக்கும் எதிரானது” என குற்றம்சாட்டினார். தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து சட்டம் மற்றும் அரசியலமைப்பின் மாண்புகளை காக்க வேண்டும் என உத்தரப் பிரதேச அரசுக்கும், மத்திய அரசுக்கும் வேண்டுகோள் வைத்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நவாப் மாலிக், “இது எதிர்பார்த்த ஒரு தீர்ப்புதான். ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் நாட்டின் ஊடகங்கள் கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆவணப்படுத்தின. எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. யூடியூபில் அதன் உள்ளடக்கங்கள் உள்ளன. ஆனால் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. அதனை நான் மதிக்கிறேன்” என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அயோத்தி நிலம் வழக்கின் தீர்ப்பில் அமைதி காத்த திரிணமூல் காங்கிரஸ், தற்போது, “தீர்ப்பில் மகிழ்ச்சியடையாதவர்களுக்கு மேல் நீதிமன்றங்களில் நிவாரணம் கிடைக்கும்” என்ற கருத்தைத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஊடகங்கள் பொதுவாக இந்தத் தீர்ப்பை சர்ச்சைக்குரியது என்று குறிப்பிட்டன. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 32 பேரும் விடுவிக்கப்பட்டது வெட்கக்கேடான செயல் என பாகிஸ்தான் அரசாங்கம் கண்டனம் தெரிவித்தது. அந்நாட்டு வெளியுறவுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “திட்டமிட்டு நடத்தப்பட்ட ரத யாத்திரையில் இருந்தவர்கள் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் மூலம் தூண்டப்பட்டதன் விளைவால் நடந்த செயல் ஊடகங்களில் வெளியானது. அதில், குற்றம்சாட்டப்பட்டவர்களின் முடிவை அறிய 28 வருடங்கள் ஆகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்திய நீதித்துறை நீதி வழங்குவதில் மீண்டும் தோல்வியுற்றது” என சாடியுள்ளது.

மேலும் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் பாதுகாப்பையும், அவர்களின் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு பாகிஸ்தான், இந்திய அரசை வலியுறுத்தியது.

ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதின் ஓவைசி செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்திய நீதித் துறையின் ஒரு கறுப்பு நாள். பாபர் மசூதி இடிப்பில் எந்த சதியும் நடைபெறவில்லை என்று தற்போது நீதிமன்றம் கூறுகிறது. தயவுசெய்து எனக்கு தெளிவுபடுத்துங்கள். தற்செயலாக அது நடக்கவில்லை என கூற இவ்வளவு நாள் ஆகுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “இது நீதிக்கான பிரச்சினை. பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர்கள் குற்றவாளிகளாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கான ஒரு பிரச்சினை. ஆனால், கடந்த காலங்களில் உள் துறை, மனிதவளத் துறை என அமைச்சர் பதவிகள் வெகுமதிகளாக வழங்கப்பட்டு அவர்கள் அழகு பார்க்கப்பட்டனர். ஏனெனில், பாஜக ஆட்சியில் இருக்கிறது” என்றும் ஓவைசி சாடினார்.

**தமிழகத்தின் எதிர்ப்பு**

திமுக தலைவர் ஸ்டாலின், “தொழுகை நடத்தும் இடத்தை அழிக்கும் நோக்கத்துடன், மொத்த மசூதியும் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த பின்னரும் குற்றச்சதியை நிரூபிக்க முடியாமல் சிபிஐ தோற்றிருக்கிறது.

அரசியல் சட்டத்துக்கு நெருக்கடி தந்த பாபர் மசூதி வழக்கில் நடுநிலையாகச் செயல்பட்டிருக்க வேண்டிய சிபிஐ, பாஜக அரசின் கூண்டுக்கிளியாகி, கடமை துறந்து, தோற்றிருப்பது நீதியின் பாதையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்” என்று விமர்சனத்தை முன்வைத்தார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “உச்ச நீதிமன்றமும், திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் என்றுதான் குறிப்பிட்டது. இந்தக் கொடூரச் சம்பவத்துக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், திட்டமிட்டு இச்சம்பவம் நடக்கவில்லை என்று அனைவரையும் விடுதலை செய்திருப்பது நீதியின் அரண்களை இடித்ததற்குச் சமமாகும்.நடுநிலையோடு இப்பிரச்சினையை அணுகுகின்றவர்களின் மனசாட்சி இந்தத் தீர்ப்பு அநீதியின் தீர்ப்பு என்றுதான் கூறும்” என குற்றம்சாட்டியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன், “பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஏற்கனவே தீர்மானித்ததையே தீர்ப்பாக வழங்கியுள்ளனர் என்னும் ஐயம் எழுகிறது. இது தீர்ப்பு என்பதைவிட தீர்மானிப்பு என்பதே சரி. பாபர் மசூதியை இடித்ததாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நிராபராதிகளென அவர்களை விடுதலைசெய்த சிபிஐ மீதான நம்பகத்தன்மை தகர்ந்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும் அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது” என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து பகிர்ந்துள்ளார்.

எனினும், தீர்ப்பை வரவேற்று பாஜகவின் முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *