zஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பை தவிர்த்தது ஏன்?

politics

அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்குமிடையே நடைபெற்ற மோதலை அடுத்து… இருவரும் தத்தமது வீடுகளில் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அரசு நிகழ்வுகளைக் கூட புறக்கணித்து தனது இல்லத்தில் தன் ஆதரவாளர்களை சந்தித்துப் பேசி வந்த பன்னீர்செல்வம் இன்று, அக்டோபர் 1 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து தனது நிலைப்பாடு பற்றி விளக்குவதாக இருந்தார்.

செயற்குழுக் கூட்டத்தில் தனக்கு நேரிட்ட அவமானம் குறித்து பன்னீர்செல்வம் கடுமையான வருத்தத்தில் இருந்ததால் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுவதற்கு தயாராக இருந்தார் அவர். இதுபற்றி பன்னீரின் வீட்டில் இருந்தே சிலர், “நாளை சிவாஜி நினைவிடத்தில் ஓ.பன்னீர் பத்திரிகையாளர்களை சந்திப்பார்’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தனர். இந்தத் தகவல் நேற்று பிற்பகல் முதல் பரவியது.

இந்த நிலையில் நேற்று மாலை பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்த கே.பி முனுசாமி இதுபற்றி அவரிடம் விரிவாகப் பேசியுள்ளார்.

நீங்க பிரஸ்மீட் நடத்தப் போறதா வெளியே தகவல் உலவிக்கிட்டிருக்கு. முதல்வர் வேட்பாளர் பற்றி கட்சி நலன் கருதி யாரும் வெளியே பேசக்கூடாதுன்னு நீங்க ரெண்டு பேரும் தான் கூட்டறிக்கை வெளியிட்டீங்க. இப்ப ஒருங்கிணைப்பாளராக இருக்கிற நீங்களே அதை மீறலாமா? அதனால இப்ப பத்திரிகையாளர்கள் கிட்ட எதுவும் பேச வேணாம். வைத்திலிங்கத்தோடு மறுபடியும் ஒருமுறை எடப்பாடியை பார்த்துவிட்டு மீண்டும் உங்களிடம் பேசுகிறேன்” என்று கூறிவிட்டுக் கிளம்பியிருக்கிறார் முனுசாமி..

அவர் சென்ற கொஞ்ச நேரத்தில் முன்னாள் அமைச்சரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செம்மலையும் பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளார். அவர் பன்னீரிடம், “நான் தர்ம யுத்தத்தில் உங்க கூடதான் இருந்தேன். முதலமைச்சரின் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அணிகள் இணைந்த பிறகு என்னை மதித்து கௌரவமாதான் நடத்துகிறார். உங்கள் கௌரவத்திற்கு எந்தக் குறையும் வராது என்று அவர் என்கிட்ட சொல்லி இருக்காரு. அதனால நீங்க இப்ப இத பத்தி வெளில அதிகாரப்பூர்வமாக பேசுறது நல்லா இருக்காதுண்ணே” என்று கூறியுள்ளார்.

இந்த பின்னணியில் தான் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாளையொட்டி அவரது மணிமண்டபத்தில் மரியாதை செலுத்திய ஓ பன்னீர்செல்வம். செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்துவிட்டார். செய்தியாளர் சந்திப்புக்கு அங்கே ஒரு மேடை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும்.. பன்னீர்செல்வம் செய்தியாளரை சந்திக்க வில்லை.

அதேநேரம் முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான் என்று அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் செயற்குழுக் கூட்டத்துக்குப்பின் பேசி வரும் நிலையில்… ஓ.பன்னீர் செல்வம் தன் நிலைப்பாட்டை அக்டோபர் 7 ஆம் தேதிக்குள் விளக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோர் பன்னீர் செல்வத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.

-**வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *