திமுகவுக்கு புதிய கொள்கை பரப்புச் செயலாளர்கள்!

politics

திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர்களாக திருச்சி சிவா, ஆ.ராசா, தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய மூவரும் செயல்பட்டு வந்தனர். ஆ.ராசா சமீபத்தில் நடந்த திமுக பொதுக் குழுவில் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு அமமுகவிலிருந்து திமுகவுக்கு வந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அவர் இன்று தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

சில ஆண்டுகளாக ஒருவருக்கு ஒரே பதவி என்ற முறை திமுகவில் கடைப்பிடிக்கப்படும் நிலையில், இருவரும் வகித்து வந்த கொள்கை பரப்புச் செயலாளர்கள் பதவிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (அக்டோபர் 1) வெளியிட்ட அறிவிப்பில், “திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்களாக பொறுப்பு வகித்து வந்த ஆ.ராசா எம்.பி துணைப் பொதுச் செயலாளராகவும், தங்க தமிழ்ச்செல்வன் மாவட்டப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டதால், அவர்கள் கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “அவர்களுக்குப் பதிலாக, கொள்கைப் பரப்பு செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா எம்.பி.யுடன், திமுக சட்டதிட்ட விதி: 18, 19-ன்படி, திண்டுக்கல் ஐ.லியோனி, சபாபதி மோகன் ஆகியோர் கொள்கைப் பரப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்” என்று அறிவிக்கப்பட்டது.

பிரபல பட்டிமன்ற நடுவரான திண்டுக்கல் ஐ.லியோனி திமுக மேடைகளில் தொடர்ந்து முழங்கி வருகிறார். நகைச்சுவை ததும்பும் வகையில் பேசுவதில் வல்லவரான இவர், திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் துணைத் தலைவராக பதவி வகித்துவந்தார். இதுபோலவே முனைவர் சபாபதி மோகன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தராக பணியாற்றியவர்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *