uவிஜய் சேதுபதி நடிக்கலாம்: ஆதரவுக் குரல்கள்!

politics

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்படும் 800 என்ற தலைப்பிலான தமிழ்த் திரைப்படத்தில், முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். படத்தின் டைட்டில் போஸ்டர் ரிலீஸானதிலிருந்து, விஜய் சேதுபதி அந்தப் படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு உருவாகிக்கொண்டிருக்கிறது.

இது விளையாட்டு சாதனைகள் பற்றிய திரைப்படம்தான் எனவும், அரசியல் எதுவும் இதில் இருக்காது என்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும் கூட தொடர்ச்சியான எதிர்வினை கருத்துக்களை சந்தித்துள்ளார் விஜய் சேதுபதி.

மூத்த திரைக்கலைஞரான இயக்குனர் பாரதிராஜா தொடங்கி வைரமுத்து, சீமான், விவேக் உள்பட திரைத் துறையிலிருந்தே பலரும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விஜய்சேதுபதி அத்திரைப்படத்திலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால் விஜய் சேதுபதி அத்திரைப்படத்தில் நடிப்பது அவரது சுதந்திரம் என்று ஆதரவுக் குரல்களும் எழுந்துள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், “800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து பேசிய அவர், ‘‘முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது என்பது பல விவகாரங்களை திசை திருப்பும் வகையில் உள்ளது. வேறு பல பிரச்சனைகள் இருக்கும்போது இதுகுறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது” என்று பேட்டியளித்தார்.

செய்தி மற்றும் விளம்பரத் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, “இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தொடர்பான திரைப்படத்தில் நடிப்பது நடிகர் விஜய் சேதுபதியின் தனிப்பட்ட உரிமை. ஆனால், மக்களின் உணர்வுகளையும் அவர் மதிக்க வேண்டும்” என்ற கருத்தை முன்வைத்தார்.

சமீபத்தில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதில் என்ன தவறு எனக் கேள்வி எழுப்பினார். தான் என்ன திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது விஜய் சேதுபதியின் விருப்பம். இந்த விவகாரத்தில் திரைப்படத்தை திரைப்படமாகவே பார்க்கவேண்டும். அரசியலாகப் பார்க்கக் கூடாது என்றும் கூறினார்.

பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ், “விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் படத்தில் நடிப்பதில் எந்த வித தவறும் இல்லை. ஒரு கலைஞனுக்கு சினிமாவில் நடிக்க அனைத்து உரிமையும் உண்டு.விஜய் சேதுபதி நடிப்பது அவரது தனிப்பட்ட உரிமை. இதில் அரசியல் கலப்பது சரியல்ல” என்று கூறி ஆதரவு தெரிவித்துள்ளார்.

*எழில்*�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *