மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 20 அக் 2020

மா.சுப்பிரமணியன் மகன் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

மா.சுப்பிரமணியன் மகன் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் மகன் அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பவர் மா.சுப்பிரமணியன். 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பணியாற்றினார். சமீபத்தில் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி, மகன் அன்பழகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கிங்ஸ் மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டு, பின்னர் குணமடைந்தனர்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு பின் அன்பழகனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனாலும், சிகிச்சை பலனளிக்காமல் அன்பழகன் இன்று (அக்டோபர் 17) உயிரிழந்தார். அவருக்கு வயது 34.

திமுகவில் துடிப்பாக பணியாற்றக்கூடிய முக்கிய நிர்வாகியான மா.சுப்பிரமணியன் மகன் அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்தது அக்கட்சியினரிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், “சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் அவர்களின் அன்புப் புதல்வர் திரு சு. அன்பழகன் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். இளம் வயது மகனை இழந்து சொல்லொணாத் துயருறும் திரு மா சுப்பிரமணியன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எழில்

சனி, 17 அக் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon