மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 20 அக் 2020

முதியவர் உயிருடன் இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ்!

முதியவர் உயிருடன் இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ்!

சேலம் மாவட்ட சந்தபட்டியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் வசித்தவர் 78 வயதான பாலசுப்ரமணிய குமார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறியதால் கடந்த 12ஆம் தேதி அவரை வீட்டிற்கு கொண்டு வந்த குடும்பத்தினர், அவர் உயிரோடு இருக்கும் போதே குளிர்பதனப் பெட்டியில் வைத்தனர்.

அடுத்த நாள் குளிர்பதனப் பெட்டியை எடுக்க வந்த ஊழியர்கள் பாலசுப்பிரமணிய குமார் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவரது சகோதரர் சரவணனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அவரது ஆன்மா இன்னும் அவரது உடலை விட்டுச் செல்லவில்லை அதனால் தான் உயிர் பிரியும் வரை உடலை குளிர்பதன பெட்டிக்குள் வைத்துள்ளோம். விரைவில் இறந்துவிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குளிர்சாதன பெட்டியிலிருந்து அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார். குளிர்பதன பெட்டிக்குள் அவரை வைத்த சரவணன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலசுப்பிரமணியம் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக தனியார் மருத்துவமனை இறப்புச் சான்றிதழ் அளித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலசுப்பிரமணியன் அபாய கட்டத்தில் இருந்தபோது அவரது உறவினர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு சென்றதும் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது, நீங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதனால் அவரை வீட்டிற்குக் கொண்டுவந்த உறவினர்கள், 2 மணி நேரம் கழித்து மீண்டும் மருத்துவமனைக்கு சென்று, பாலசுப்பிரமணியன் இறந்துவிட்டார், இறப்புச் சான்றிதழ் தாருங்கள் எனக் கேட்டிருக்கிறார்கள். அவர் இறந்தாரா, இல்லையா என்பதைக் கூட நேரில் பார்க்காத மருத்துவர், இறந்துவிட்டதாக சான்றிதழை வழங்கி அனுப்பி இருக்கிறார். இதன்பிறகுதான் அவர்கள் இறந்துவிட்டதாகக் கூறி குளிர்பதனப் பெட்டிக்குள் உடலை வைத்திருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட மருத்துவமனையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சான்றிதழ் அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

எழில்

சனி, 17 அக் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon