டிஜிட்டல் திண்ணை: ரஜினி வரமாட்டார்? முதல்வர் வேட்பாளரான கமல்

politics

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“கமல்ஹாசனை தலைவராகக் கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழுக் கூட்டம் அக்டோபர் 16 ஆம் தேதி சென்னை தி.நகரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இக்கூட்டத்தில் கமல்ஹாசனை மக்கள் நீதி மய்யத்தின் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பின் மூலமாக தேர்தல் பணிகளை வேகமாக ஆரம்பித்துவிட்டது மநீம.

முகக் கவசம், அதற்கு மேல் ஷீல்டு என்று பாதுகாப்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மேடையில் கமல்ஹாசன் மட்டுமே அமர்ந்திருந்தார். மாநில நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 35 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் சுமார் 5 அடி இடைவெளியில் ஹாலில் தனித் தனியே அமர வைக்கப்பட்டனர். உள்ளே செல்லும்போதே அனைவரின் செல்போன்களும் வாங்கி வைக்கப்பட்டன. ஏனெனில் மிக முக்கியமான முடிவெடுக்கும் இந்தக் கூட்டத்தின் விவாதங்கள் அறிவிப்புக்கு முன் கசிந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் கமல்ஹாசன். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு இல்லை.

காலை 11.30க்கு தொடங்கிய இந்தக் கூட்டம் மதியம் 2.30 வரை தொடர்ச்சியாக நீடித்தது. கமல்ஹாசன் மட்டுமே முழுதாக ஒருமணி நேரம் பேசியிருக்கிறார்.

’முதல்வர் வேட்பாளர் என்பது முதல்வர் பதவி என்பது சொகுசு சிம்மாசனம் அல்ல. அது வழுக்குப் பாறை. இப்போது இருப்பவர்கள் கஜானாவை துடைத்து எறிந்துவிட்டார்கள். நமக்கு நேரடிப் போட்டி ஊழலோடுதான். திமுக, அதிமுகவோடு போட்டி என்பதை விட ஊழலோடு நேரடிப் போட்டி என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

அவர் வர்றார் இவர் வர்றார்னு நாம யாருக்காகவும் காத்திருக்கலை. காத்திருக்கவும் வேண்டாம். எப்படி 1967 இல் அண்ணாவின் திமுக ஆட்சியை பிடிப்பது காலத்தின் கட்டாயமானதோ அதேபோல இப்போது திமுக. அதிமுகவுக்கு என்ற கொள்ளைக் கூட்டங்களுக்கு எதிராக நாம ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது நம் விருப்பம் அல்ல இது காலத்தின் கட்டாயம். அதனால யாருடைய வருகைக்காகவும் நாம் காத்திருக்காமல் நம்முடைய பணியை மக்களுக்கு நேர்மையாக ஆற்ற முன் வந்திருக்கிறோம்” என்று கமல்ஹாசன் பெயர் சொல்லாமல் குறிப்பிட்டது ரஜினியைத்தான் என்கிறார்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில நிர்வாகிகள்.

ரஜினியோடு அரசியலில் சேர்ந்து செயல்படத் தயார் என்று முன்பு கமல் சொல்லியிருந்தார். இதன் மூலம் சினிமா போலவே அரசியலிலும் ரஜினி கமல் இணைந்து செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களை சந்தித்து 4 சதவிகித ஓட்டுகளைப் பெற்ற கமல்ஹாசன் இன்னும் கட்சியே ஆரம்பிக்காத ரஜினியோடு சேர்ந்து அரசியல் பயணத்தை மேற்கொள்வதா என்று கமல் கட்சிக்குள்ளேயே நிர்வாகிகள் கமலிடம் வற்புறுத்தினார்கள்.

இந்த நிலையில்தான் இனியும் ரஜினி கட்சி தொடங்குவாரா, அதற்கு மேல் அவரது நோக்கங்கள், கொள்கைகள் என்ன என்பது பற்றியெல்லாம் எதுவுமே அறியாமல் அவருக்காக காத்திருப்பதில் அர்த்தமில்லை எனவும் கமலின் நலம் விரும்பிகள் கமலிடம் கூறியிருக்கிறார்கள். இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வர அவரது உடல் நலம் இடம் கொடுக்குமா, ஊரடங்கு முடிந்து ரஜினி புதிய கட்சியைத் தொடங்கி தேர்தலுக்குள் அதை ஒரு சக்தியாக உருவாக்க முடியுமா என்பது போன்ற நடைமுறை காரணிகள் பற்றி ரஜினி தரப்பில் இருந்து சில தகவல்களைப் பெற்ற பிறகுதான் கமல் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் இந்த கூட்டத்தையே கூட்டினார் என்கிறார்கள்.

இதன் மூலம் இனிஒருவேளை ரஜினி கட்சி ஆரம்பித்து கூட்டணியாக இணைந்தாலும் கமல்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை ரஜினி ஏற்க வேண்டும் என்பதும் ஒரு மறைமுக நிர்பந்தமாக கமல்ஹாசனால் முன்வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் வேட்பாளர் மட்டுமல்ல… வேட்பாளர் தேர்வுக் குழு, வேட்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறைக் குழு தேர்தல் அறிக்கை குழு, கோவிட் காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஆராய ஆரோக்கிய குழு என்று 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முழுமையாக தயாராகிவிட்டார் கமல்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் சென்றது வாட்ஸ் அப்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *