சைதை துரைசாமியின் தலைமை ஏஜென்ட்: சேகர்பாபுவுக்கு செக் வைத்த தினகரன்

politics

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் தற்போதைய தொகுதியான ஆர்.கே.நகர். அடங்கியுள்ள வடசென்னை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்திருக்கிறது அமமுக தலைமைக் கழகம்.

நவம்பர் 19 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, “அமமுக வடசென்னை வடக்கு மாவட்டக் கழகப் பணிகளை விரைவுபடுத்திடும் வகையில் வடசென்னை வடக்கு (கிழக்கு), வடசென்னை வடக்கு( மேற்கு) என இரு மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.

ஆர்.கே.நகர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மாவட்டத்துக்கு பெரம்பூர் பகுதிச் செயலாளராக இருக்கும் லட்சுமி நாராயணன் மாவட்டச் செயலாளராகவும்… வில்லிவாக்கம், கொளத்தூர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு மாவட்டத்துக்கு கொளத்தூர் பகுதிச் செயலாளரான வெற்றிநகர் சுந்தர் மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்குப் பின்னணியில் பெரிய அரசியல் வேட்டை இருக்கிறது என்கிறார்கள் வடசென்னை அரசியல் வட்டாரத்தில்.

“அமமுகவின் பொருளாளராகவும், வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளராகவும் இருந்த வெற்றிவேல் மறைவுக்குப் பின் வடசென்னை அமமுக உண்மையிலேயே பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. வெற்றிவேல் என்னும் ஆளுமை மறைந்ததால், அமமுகவினரை திமுகவினரும், அதிமுகவினரும் சேர்ந்து வேட்டையாடத் திட்டமிட்டனர்.

இதன்படி அமைச்சர் ஜெயக்குமாரோடு அனுசரிக்க முடியும் என்று நினைத்த அமமுகவினர் அதிமுகவுக்கும், ஜெயக்குமாரோடு சரிவராது என்று கருதிய அமமுகவினர் திமுகவுக்கும் செல்லத் தயாராகினர். இதன்படியே ஆங்காங்கே திமுகவுக்கும், அதிமுகவுக்கும் கீழ்மட்ட அளவுகளில் செல்லத் தொடங்கினர்.

கொளத்தூரில் 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமிக்கு எதிராக ஸ்டாலின் வெற்றிபெற்றார். அந்த வெற்றியை எதிர்த்து சைதை துரைசாமி தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இப்போது விசாரணையில் இருக்கிறது. அதை துரித்தப்படுத்த அதிமுகவும், பாஜகவும் போட்டி போட்டுக் கொண்டு வேலையில் இறங்கியிருக்கின்றன. இதை அடிப்படையாக வைத்துதான், ‘ஸ்டாலினால் தேர்தலிலேயே போட்டியிட முடியாத நிலை ஏற்படும்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே பேட்டி கொடுத்தார்.

இந்நிலையில் அந்த 2011 தேர்தலில் சைதை துரைசாமிக்கு தலைமை ஏஜென்ட் ஆக பணியாற்றிய வெற்றிநகர் சுந்தர் இப்போது அமமுகவில் இருக்கிறார். அவரை தங்கள் பக்கம் இழுக்க அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டன.

இதில் திமுக சார்பில் சென்னை கிழக்கு மாசெ சேகர்பாபு வேட்டையில் இறங்கினார். அன்று சைதை துரைசாமிக்கு தலைமை ஏஜென்ட்டாக இருந்த வெற்றிநகர் சுந்தரையும், ஏஜென்ட்டுகளில் ஒருவராக பணியாற்றிய வழக்கறிஞர் ராமகிருஷ்ணனையும் திமுகவுக்குக் கொண்டு வர தானே இறங்கி அவர்களிடம் பேசினார். இதில் அமமுக மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளரான ஜி.ராமகிருஷ்ணன் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி அறிவாலயத்தில் ஸ்டாலின் , துரைமுருகன் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார்.

ராமகிருஷ்ணனை திமுகவுக்குக் கொண்டு சென்ற சேகர்பாபு, அடுத்து சைதை துரைசாமியின் தலைமை ஏஜென்ட்டாக பணியாற்றிய வெற்றிநகர் சுந்தரையும் திமுகவுக்கு கொண்டுசெல்வதில் தீவிரமானார். கிட்டத்தட்ட இந்த ஆபரேஷனில் பாதிக்கு மேல் வெற்றியடைந்த சேகர்பாபு, கார்த்திகை முதல் தேதி சபரிமலைக்கு சென்று வந்துவிட்டு சுந்தரை திமுகவில் இணைத்துவிடலாம் என்று கருதி சபரிமலைக்குச் சென்றார்.

இதை அறிந்துகொண்ட பெரம்பூர் பகுதிச் செயலாளர் லட்சுமி நாராயணன், ‘கொளத்தூர் தொகுதி அமமுக பகுதிச் செயலாளர் வெற்றிநகர் சுந்தரை மாசெ சேகர்பாபு திமுகவுக்குக் கொண்டு செல்வதற்குத் தயாராகிவிட்டார்’ என்ற தகவலை சில நாட்களுக்கு முன்பே தினகரனுக்குத் தெரியப்படுத்தினார். உஷாரான தினகரன், திமுகவுக்கு செல்லக் கூடும் என்று தனக்கு சொல்லப்பட்ட வெற்றிநகர் சுந்தரை பகுதிச் செயலாளர் பதவியில் இருந்து மாசெவாக உயர்த்தியிருக்கிறார். இங்கே மாவட்டச் செயலாளராக இருப்பவர் திமுகவுக்குச் சென்றால், வெறும் உறுப்பினராகத்தானே இருக்க முடியும் என்ற வகையில் சேகர்பாபுவின் முயற்சிக்கு செக் வைத்திருக்கிறார் தினகரன்.

இதன் மூலம் அவர் திமுகவுக்குச் செல்வதை தற்போதைக்கு தடுத்திருக்கிறார் தினகரன். ஆனாலும், சைதை துரைசாமியின் 2011 தேர்தல் தலைமை ஏஜென்ட்டான வெற்றிநகர் சுந்தரை திமுகவுக்கு கொண்டு சென்றே தீருவது என்று மீண்டும் சபதம்போட்டுள்ளார் சேகர்பாபு.

அமமுகவின் மாவட்டச் செயலாளர் அறிவிப்புக்குப் பின்னால் சேகர்பாபுவின் மாஸ்டர் பிளான் இருந்திருக்கிறது” என்கிறார்கள்.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *