மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 2 டிச 2020

பூங்கோதைக்கு ஆதரவாக பாஜக

பூங்கோதைக்கு ஆதரவாக பாஜக

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான பூங்கோதை, கடந்த 18 ஆம் தேதி தன் தொகுதியில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் நிர்வாகிகள் காலில் விழும் வீடியோ பரபரப்பாகப் பரவியது.

மேலும் பூங்கோதை தற்கொலைக்கு முயற்சித்தார் என்று தகவல்கள் வெளியான நிலையில் அவர் அது குறித்து நேற்று (நவம்பர் 20) இரவே விளக்கம்அளித்துவிட்டார்.

இதற்கிடையில் பூங்கோதைக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் எல். முருகன் பேசியிருக்கிறார். நேற்று ஈரோட்டில் வேல் யாத்திரையில் பங்குபெற்ற எல். முருகன்.

“ திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா கட்சி நிர்வாகிகளின் கால்களைத் தொட்டு மன்னிப்பு கேட்கிறார். அவர்கள் கட்சி நிர்வாகிகளாக இருந்தாலும், அதை நாங்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? இன்று வரை, அவரது முடிவுக்கு பொறுப்பான நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுக தலைவர், இந்த சம்பவத்தைக் கண்டித்தாரா அல்லது அவருக்கு ஆறுதல் சொன்னாரா? தி.மு.க என்பது பெண்களை இழிவுபடுத்தும் கட்சி. தனது சொந்த எம்.எல்.ஏ.வைப் பாதுகாக்க முடியாதபோது திமுக மக்களை எவ்வாறு பாதுகாக்க முடியும்?” என்று கேட்டார் முருகன்.

ஹத்ராஸ் சம்பவத்தின் போது கனிமொழி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்தினார். ஆனால் நமது சகோதரி பூங்கோதை ஆலடி அருணா அவமதிக்கப்பட்டபோது கனிமொழி எங்கே போனார்? ஹத்ராஸில் நடந்தால் கண்டிப்பீர்கள். உங்கள் கட்சியில் நடந்தால் அமைதியாகிவிடுவீர்களா?” என்று கனிமொழிக்கும் கேள்வி கேட்டார் முருகன்.

மாநில துணைத் தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து வேல் யாத்திரையில் கலந்துகொண்ட முருகன்,

“பாஜக தலைமையிலான மத்திய அரசு மாநிலத்தில் விவசாயிகள் மற்றும் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் அடுத்த அரசாங்கத்தை பாஜக முடிவு செய்யும். இடையூறுகளைப் பொருட்படுத்தாமல், டிசம்பர் 7 ஆம் தேதி வேல் யாத்திரையை திட்டமிட்டபடி நிறைவு செய்வோம்” என்றும் கூறினார்.

வேந்தன்

சனி, 21 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon