விவசாயிகளுக்கு துரோகம் செய்தது யார்? – ஸ்டாலினுக்கு பன்னீர் கேள்வி!

politics

விவசாயிகளுக்கு அதிமுக துரோகம் செய்துவிட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்கள், மின்சாரச் சட்டத் திருத்த முன்வடிவுக்கு எதிராக டெல்லியில் ஆறாவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் ஆளும் அதிமுக அரசு ஆதரவு தெரிவித்து வருவதோடு, அச்சட்டங்களை நியாயப்படுத்தியும் பேசி வருகிறது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் சட்டத்துக்கு அதிமுக அரசு வாக்களித்ததாகவும். விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்.

இதுதொடர்பாக அவர் நேற்று (டிசம்பர் 2) வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “விவசாயிகள் மீது அக்கறை உள்ளதுபோல் இப்போது கபடநாடகம் ஆடும் திமுகதான் 04.01.2011 அன்று மீத்தேன் திட்டத்துக்கு அனுமதியளித்து தமிழக விவசாயிகளுக்குக் கடுமையான துரோகம் இழைத்தது. ஆனால் அத்திட்டத்துக்கு 17.7.2013 அன்று தடைவிதித்து விவசாயிகளின் நலன் காத்தவர் ஜெயலலிதாதான்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயிகளின் நலன் காக்க காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, 20.02.2020 அன்று பேரவையில் சட்டம் இயற்றியது தமிழக அரசு மட்டுமே என்று கூறிய பன்னீர்செல்வம், “இதனை தமிழக மக்கள் நன்கு அறிவர். விவசாயிகளின் பாதுகாவலன் அம்மா அவர்களின் அரசு மட்டுமே. எனவே திமுகவின் பொய்யுரைகளை ஒருபோதும் தமிழக மக்கள் நம்பமாட்டார்கள்” என்று ஸ்டாலினுக்குப் பதிலளித்துள்ளார். அத்துடன் 2011ஆம் ஆண்டு நடந்த மீத்தேன் எரிவாயு ஒப்பந்தம் தொடர்பான புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *