இதுவரை முதலீடு ரூ.1,800 கோடிதானா? முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி!

politics

முதலீடுகள் ஈர்ப்பு தொடர்பாக தமிழக அரசை குற்றம்சாட்டியுள்ளார் ஸ்டாலின்.

தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியிலும் என இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்துள்ளது. இதுதவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வந்தார். இதன்மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு, உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன.

கடலூரில் நேற்று பேசிய தொழில்துறை அமைச்சர் சம்பத், 2015ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அரசால் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடுகளும், 2019ஆம் ஆண்டு ரூ.3 லட்சம் கோடிக்கு முதலீடுகளும் ஈர்க்கப்பட்டன. இதன்மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது என்றார். இந்திய அளவில் தொழில் முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழகம் தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியாவின் பெங்களூரு பதிப்பு வெளியிட்ட செய்தியில், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட முதலீடான 1 லட்சத்து 90 ஆயிரம் கோடியில் பெற்றது வெறும் 9.4 சதவீதம் மட்டும்தான் எனக் குறிப்பிட்டது. அதாவது வெறும் 18 ஆயிரத்து 188 கோடிதான் முதலீடாக பெறப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், நூற்றுக் கணக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு விட்டோம்; கோடிக் கணக்கில் முதலீடுகளை ஈர்த்து விட்டோம் என்று திரும்பத் திரும்பப் பொய்களையே சொல்லி, ஜம்பம் பேசி வந்த முதல்வர் பழனிசாமியின் முகமூடியை தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேடு கழற்றித் தரையில் வீசி விட்டது என விமர்சித்தார்.

டைம்ஸின் செய்தியை சுட்டிக்காட்டிய அவர், கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் பெற்ற முதலீடுகள், ஆண்டுக்கு 1800 கோடி ரூபாய்தான் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது எனவும் குறிப்பிட்டார்.

இரு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டிற்குக் கூட்டமாகப் படையெடுத்தது, உள்ளிட்ட நாடகங்களின் மூலமாக இதுவரை போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எல்லாம் வெத்து வேட்டு, எல்லாமே வீண் விளம்பரம் என்பது நிரூபணமாகி விட்டது என்றதோடு,

கொரோனா காலத்திலும் தொழில் முதலீடுகளை ஈர்த்ததில் முதல் மாநிலம் என்று அரசுப் பணத்தில் அதாவது மக்களின் வரிப் பணத்தில், பத்திரிகைகளில் இரண்டு முழுப்பக்க விளம்பரம் கொடுத்துள்ள. பழனிசாமியின் சாயம் வெளுத்து விட்டது; வேடம் கலைந்து விட்டது என்றும் காட்டமாக சாடியுள்ளார். மக்களின் வரிப்பணத்தில் முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா? என்ற கேள்வியையும் ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *