சரியான முடிவுதான்: ரஜினிகாந்துக்கு தலைவர்கள் ஆதரவு!

politics

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காதது நல்ல முடிவுதான் என அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அறிக்கை வாயிலாக அறிவித்து அதற்கான மன்னிப்பும் கேட்டுள்ளார். ஊடகங்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்து எழுச்சியை உண்டாக்க முடியாது என்றும், தன்னை நம்பி வந்தவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை எனவும் விளக்கம் அளித்த ரஜினிகாந்த், ரஜினி மக்கள்‌ மன்றம்‌ என்றும்‌ போலச் செயல்படுமென தெரிவித்தார்.

அத்துடன் தேர்தல்‌ அரசியலுக்கு வராமல்‌ மக்களுக்கு என்னால்‌ என்ன சேவை செய்யமுடியுமோ அதை நான்‌ செய்வேன்‌ எனக் கூறினார். இதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.

திமுக துணை பொதுச் செயலாளர் க.பொன்முடி, “ஊடகங்கள்தான் ரஜினியை தூண்டிவிட்டு அரசியலில் ஈடுபட வைத்தார்கள். அவர் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அரசியலை விட்டு அவர் விலகியிருப்பது நல்லதுதான். அதில் எந்த தவறுமில்லை” என்று கருத்து தெரிவித்தார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்பது தெரிந்ததே எனக் கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ஆன்மீகத்தில் நம்பிக்கை உடையவர்கள் அரசியல் செய்ய முடியாது. தேர்தலில் பங்கெடுக்க மாட்டார்கள் என காந்தியை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன், “நடிகர் ரஜினிகாந்த் எடுத்த முடிவினை நான் வரவேற்கிறேன். வறட்டு கவுரவம் பார்க்காமல் உடல்நிலையை கருத்தில் கொண்டு உண்மையை வெளிப்படையாகக் கூறியுள்ளார். அவர் எடுத்தது நல்ல முடிவுதான். அரசியலுக்கு வரவில்லை என்பது ரஜினியின் முடிவல்ல, பாபாவின் முடிவு. பாபா சொன்னால்தான் எதையும் செய்வேன் என எம்மிடம் ஒருமுறை கூறினார். தற்போது உயர் ரத்த அழுத்தம் பாபா அவருக்குச் செய்த எச்சரிக்கையென கருதுகிறார்” என்றார். மதமும் அரசியலும் இணையும். ஆன்மீகமும் அரசியலும் இணையாது என அவர் விளக்கியுள்ளார்.

“இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த், தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன்.அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்தார்.

ரஜினிகாந்த் கட்சித் தொடங்கப்போவதில்லை என்பது சரியான முடிவு என வரவேற்றுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. ரஜினியை கட்சி தொடங்க பாஜக நிர்பந்தப்படுத்தியை அடுத்து உடல்நலக் குறைவை காரணம் காட்டி அதனை நிராகரித்திருக்கிறார் ரஜினிகாந்த் என மார்க்சிஸ்ட் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்தார்.

மமக தலைவர் ஜவாஹிருல்லா அளித்த பேட்டியில், “அரசியல் கட்சி தொடங்குவதில்லை என்ற ரஜினிகாந்த் முடிவு சிலருக்கு தூக்கமில்லா இரவுகளை அளிக்கும். ஆனால் ரஜினிக்கு மன அமைதியை அளிக்கும்; அவர் முழுமையான உடல் நலன் பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்” என வாழ்த்து தெரிவித்தார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *