�சிறப்புக் கட்டுரைத் தொடர்: மின்னணு பொருளாதாரம்… இந்தியாவின் வரமா,சாபமா? பாகம் 5

politics

பாஸ்கர் செல்வராஜ்

**கூட்டுக்களவாணித்தனப் பொருளாதார முறையும் அதற்கு ஏற்ற அரசும்**

சந்தையில் தனது சொந்த உற்பத்தி தொழில்நுட்பத்தின் வலிமையில் சீன நிறுவனங்களுடன் போட்டியிட்டு வெல்ல முடியாத அமெரிக்க நிறுவனங்களுக்கும், இந்திய தொலைதொடர்பு துறையில் ஏற்கனவே வலிமையாக உள்ள ஏர்டெல் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் வலிமையற்ற ஜியோவுக்கும் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்தையைக் கைப்பற்றுவதை தவிர வேறு வழி இருந்திருக்கவில்லை. ஆனால் தென் கொரியாவைப் போல கூட்டுக் களவாணித்தனப் பொருளாதாரத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த ராணுவ சர்வாதிகாரம் சாத்தியமற்றது மட்டுமல்ல, அவசியம் இல்லாததும்கூட. சாதியாக பிரிந்து ஜனநாயகம் என்றால் ஓட்டுபோடுவது என்ற புரிதலில் உள்ள மக்கள் கிளர்ந்து எழப் போவதுமில்லை. அவர்களை ராணுவத்தைக் கொண்டு அடக்க வேண்டிய அவசியமுமில்லை. அறநெறியற்ற அனைத்தையும் அடையும் ஆசை கொண்ட முதலாளியும் சதித்தனமும் சர்வாதிகார சிந்தனையும் கொண்ட அரசியல் கட்சியும் இந்தியாவுக்குப் போதுமானது.

**இந்து தேசியத்துக்கான பொருளாதார அடிப்படையைப் பெறுதல்**

இந்த இருவரின் வலுவான பொருளாதாரப் பின்புலம், இவர்களின் தேவையை அரசியலாக முன்னெடுக்கும் கட்சி (பிஜேபி), இவர்களை ஆதரிக்கும் முதல் மூவர்ணதாரின் அரசியல் அடித்தளம், இதற்கு வெளியில் உள்ளவர்களை ஒருவருக்கு எதிராக மற்றொருவரை நிறுத்தி அடித்துக்கொள்ள செய்து சமூக நிலைத்தன்மையை உருவாக்கும் சாணக்கிய சதித்தன பார்ப்பனிய சித்தாந்தம் ஆகியவை இணைந்த இந்து தேசியமாக வடிவம் கண்டது. இதுவரையிலும் கனவாக இருந்த இந்த தேசியம் இப்போது நனவாகி வருவதற்கான காரணம் இது ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இந்த தேசியத்துக்கான பொருளாதார அடிப்படையின்றி இருந்தது. 19௦௦க்குப் பிறகு சுயாட்சிக் கோரிக்கையின்போது எழுந்த முஸ்லிம்களின் கோரிக்கை ஆங்கிலேயே அரசால் உருவாக்கப்பட்ட தேசியத்தில் உடைப்பை ஏற்படுத்தியதற்கு எதிர்வினையாகவே இவர்கள் உருவாக்கப்பட்டார்கள்.

அதன் பிறகான சுதந்திர காலகட்டத்திலும், அதற்கு பின்பும் இவர்களின் அரசியல் அந்த சூழலுக்குப் பொருத்தமற்றதாகவும், தேவையற்றதாகவும் இருந்து வந்தது. சுதந்திரம் பெற்றபின்பு முதல் மூவர்ணத்தார் கோலோச்சிய தொழில்துறை உலகமய வருகையை அடுத்து உடைப்பை சந்திக்கிறது. அங்கிருந்தே இவர்களின் அரசியலும் வலுப்பெற ஆரம்பிக்கிறது. உலகமயம் முழுவீச்சில் இருந்தவரை இந்திய தேசியத்துக்குள் இருந்து தாராளமய சேவை செய்து வந்தவர்கள் இன்று அது பின்னடைவைச் சந்தித்து சந்தையை மூடி ஜனநாயகத்தை மறுத்து போட்டியில்லாத சந்தையைக் கோரும்போது, இந்து தேசியமும் தற்சார்பும் பேசுகிறார்கள். எனில் இந்த தேசியம் எந்த முதலாளிக்கானது இது யாருடைய சுயசார்பை முன்னிறுத்துகிறது என்பது எல்லோரும் சிந்திக்க வேண்டியது.

**எப்போதும் பெறாத பெரும்பான்மை பலம்**

அலைக்கற்றையைப் பெறுவதில் ஆரம்பித்த போட்டி ஊழல் புகாராக வெளிவந்து பூதாகாரமாகப் பேசி ஊதிபெருக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தளம் அடித்து நொறுக்கப்பட்டது. இந்தியாவிலேயே குஜராத் மட்டும்தான் வளர்ந்ததைப் போன்று அது இந்திய வளர்ச்சிப் பாதையின் அடையாளமாகக் கட்டமைக்கப்பட்டது. மோடி வளர்ச்சியின் நாயகனாக ஊதி பெருக்கப்பட்டார். வாய்சவடால்களின் மூலம் இந்தியாவின் இணையில்லா தலைவராகவும் பின்பு வட இந்தியரின் காட்பாதராகவும் ஆனார். காட்சி ஊடகங்களின் பலத்தையும் சமூக ஊடகங்களின் பலத்தையும் இந்தியா முதன்முதலாக கண்டது. வாட்ஸ்அப், முகநூல் குழுமங்கள் வழி பரப்பப்பட்ட பொய்த்தகவல் பிரச்சார உத்தி, முகநூல் நிறுவனத்தினால் சேர்க்கப்பட்ட நமது தனிப்பட்ட தகவல்களை பகுப்பாய்வு செய்து தொகுதி வாரியாக உள்ள ஓட்டுக்கள் அதில் ஆதரவு எதிர்ப்புநிலை கொண்டவர்களின் அளவு, வெற்றிக்குக் கொஞ்சம் நெருக்கமாக உள்ள தொகுதிகளில் ஆர்எஸ்எஸ்ஸின் ஆட்களை இறக்கி ஆதரவைத் திரட்டுவது என Data driven digital economy இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே Data driven digital politics இந்தியாவுக்கு வந்து பிஜேபியை ஆட்சியில் அமர்த்தியது.

**மின்னணு பொருளாதாரத்துக்கான போதாமை**

ஆதார் மின்னணு அடையாள எண் உருவாக்கப்பட்டு, அலைக்கற்றைக்கு அடித்துக்கொண்டு ஒருவழியாக ஆளுக்குக் கொஞ்சம் பிரித்துக் கொண்டு இந்த புதிய பொருளாதார முறையை எந்த கேள்வியும் இன்றி நடைமுறைப்படுத்த எதேச்சதிகாரத்தனமும் சர்வாதிகார சிந்தனையும் கொண்ட கட்சியும் ஆட்சிக்கு வந்தபிறகு இந்திய முறைசாரா பொருளாதாரத்தை முறைப்படுத்தும், மின்னணு பொருளாதார முறைக்கு மாற்றும் அல்லது பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகள் தீவிரம் கண்டன. இந்தியாவில் 2014 வரையிலும் 23.9 கோடி பேர் மட்டுமே இணையப் பயன்பாட்டுக்கான திறன்பேசியைப் பயன்படுத்துபவர்களாகவும், அவர்களின் இணையப் பயன்பாடு வெறும் 86mb என்ற அளவிலும், இணையத்தை பயன்படுத்தி பணபரிவர்த்தனை செய்வது நபருக்கு 2.2 முறையாகவுமே இருந்தது. மற்றவர்கள் அலைபேசியில் மற்றவரை தொடர்பு கொள்ளும் பழக்கம் உள்ளவர்களாகவும் குறுஞ்செய்தி அனுப்பி தகவல்களை பரிமாறிக் கொள்பவர்களாகவுமே இருந்தார்கள். இது தேவையான அளவு தரவுகளை திரட்டுவதற்கோ, இணைய வர்த்தகம் செய்வதற்கோ எந்த வகையிலும் போதுமானது அல்ல.

**செயற்கையாக தேவையை உருவாக்குவது**

இணைய பயன்பாட்டை இயல்பான விருப்ப தேவையின் அடிப்படையில் மலிவான விலையில் கொடுப்பதன் மூலம் அதிகரிக்கலாம். இதனை பயன்படுத்தும் ஆர்வம் மக்களிடம் இருந்தாலும் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் தேவையோ விலை அதிகம் கொடுத்து திறன்பேசி வாங்கி இதனை நுகரும் அளவுக்கான வசதி வாய்ப்போ இல்லாததால் இது பரந்துபட்ட அளவில் பயன்பாட்டுக்கு வருவது சாத்தியம் இல்லை. அப்படியே விளம்பரம் செய்து தூண்டி பயன்படுத்த வைத்தாலும் மெதுவாகவே நடக்கும். இதை விரைவுபடுத்த செயற்கையாக இவற்றுக்கான தேவையை உருவாக்கி கட்டாயம் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற சூழலை உருவாக்கினால்தான் உண்டு.

முறைசாரா பொருளாதார நடவடிக்கைகளான விவசாயம், கட்டுமானம், விவசாய இடுபொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களுக்கான சில்லறை விற்பனை, தங்குமிடங்கள், உணவகங்கள், போக்குவரத்து சேவைகள் ஆகியவற்றின் பெரும்பகுதி வங்கிகளில் முதலீடு பெற்று நடத்தப்படுபவை அல்ல என்று சொல்வதை வங்கிகள் கடன் கொடுப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இத்தொழில்களுக்கான முதலீடுகள் வங்கிக்கு வெளியில் சொந்த பணத்தைக் கொண்டோ, பணம் உள்ளவர்களிடம் கடனாக பௌதீக பணவடிவில் (Physical Cash) பெற்றோ நடத்தப்படுகிறது. இந்தப் பணம் விவசாயிகளிடமும், வர்த்தகர்களிடமும், தொழிலாளர்களிடமும் சுற்றி சுழலுகிறது. இவர்கள் வங்கிக்குச் செல்ல வேண்டிய தேவையோ, வங்கிகள் இதில் பங்கெடுக்கும் வாய்ப்போ சிறிதும் இல்லை.

**மதிப்பிழப்பு: ஒரு கல்லில் பல மாங்காய்**

பணமதிப்பிழப்பை அறிவித்து இந்த மொத்த பணத்தையும் வங்கிக்குள் கொண்டு வரும்போது இந்த மூலதனம் முழுவதும் வங்கிகளின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இந்தப் பணத்தின் சொந்தக்காரர் அடையாளம் காணப்படுகிறார். அப்படி அடையாளம் காணப்படாத பணம் மதிப்பிழந்து நலிவடைந்திருக்கும் வங்கிகளின் மீட்சிக்கு உதவும். இப்படி வந்த பணத்தை வங்கிக்கணக்கின் வழியாகத் திரும்ப கொடுப்பதன் மூலம் இவர்கள் வங்கிக்கணக்கு தொடங்கி பயன்படுத்த தொடங்குகிறார்கள். இந்த வங்கிக்கணக்குகளை ஆதாருடன் இணைக்கும்போது முறைசாரா பொருளாதாரத்தில் இந்தப் பணம் ஆற்றும் பாத்திரம் தொடர்பான தரவுகள் கிடைத்துவிடும். இணையதளப் பணப்பரிவர்த்தனை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திறன்பேசியை பயன்படுத்தி இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் அளவும், இணையதள பணப்பரிமாற்றமும், இணைய வர்த்தகமும் அதிகரிக்க வகைசெய்கிறது.

இந்த அறிவிப்புக்கு இருமாதங்களுக்கு முன்னமே தொடங்கப்பட்ட வேகமான இலவச 4G செறிவட்டைகளுக்கான (Simcard) தேவையும் பயன்பாடும் பலமடங்கு அதிகரிக்கிறது. ஆதார் அட்டையுடன் கைரேகையும் பதிவு செய்து கொடுத்தால் செறிவட்டைகளைப் பெற்று இலவசமாக இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த நாட்டிலும் இல்லாத அதிசயமாக ஒரு நிறுவனம் தனது பொருளை விற்க வாடிக்கையாளர்களின் அங்க அடையாளத்தை பெறும் நடைமுறையை இந்தியா கண்டது. இதற்கும் செறிவட்டைக்கும் என்ன சம்பந்தம் என்று நாமும் கேட்கவில்லை. இப்படி பெறுவது சட்ட விரோத மனித உரிமை மீறல் என்று அரசும் தடுத்து நிறுத்தவில்லை. இதன்பிறகு தகவல்தொடர்பு துறையில் இருந்த ஏர்செல், டாட்டா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டன. ஜியோ அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்தியாவின் முன்னணி நிறுவனமானது. சிதறிக்கிடந்த இந்த வாடிக்கையாளர்களின் தரவுகள் அனைத்தும் ஒன்று குவிக்கப்பட்டு அந்த நிறுவனத்தின் வசமானது. இணையத்தை இலவசமாகப் பெற்று நமது தனிமனித சுதந்திரத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும் இழந்திருக்கிறோம்.

**மின்னல் வேக வளர்ச்சி**

வங்கிக்குள் கொண்டு வந்த பணம் முறைசாரா பொருளாதாரத்தில் புழங்கிய மூலதனத்தை வங்கிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதன்பிறகு சிறு குறு நடுத்தர உற்பத்தியாளர்கள் வெளியில் இருந்து கடன் வாங்குவதை தவிர்த்து வங்கிகளில் கடன் வாங்குவது அதிகரித்ததாக பொருளாதார ஆய்வு நிறுவனமான கிரைசில் (Crisil) அறிக்கை வெளியிட்டது. பண மதிப்பிழப்புக்கு பிறகான வரிவிதிப்பு முறை (GST) இந்தப் பொருளாதாரத்தின் உற்பத்தியை கண்காணித்துக் கட்டுப்படுத்தியது மட்டுமல்ல; இது தொடர்பான தரவுகளை பெரும் வாய்ப்பையும் வழங்கியது. அதோடு இந்த பொருளாதாரத்தை பெருநிறுவனங்கள் கைப்பற்றி இந்திய சந்தை முழுவதும் தங்குதடையின்றி வர்த்தகத்தை மேற்கொள்ள இருந்த தடைகளையும் இது நீக்கியது.

பிஜேபி பதவியேற்ற 2014 முதல் 2018 வரையிலான காலத்தில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண்கள் 5.6 கோடியில் இருந்து 87 கோடியாகவும், இணையப் பயன்பாட்டாளர்கள் 23.9 கோடியில் இருந்து 56 கோடியாகவும், இணையப் பயன்பாடு 86mbஇல் இருந்து 8320mb ஆகவும், இணையப் பரவலாக்கம் 18 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காட்டுக்கு மேலும், இணையப் பணப்பரிமாற்றம் ஒரு நபருக்கு 2.2 முறையாக இருந்தது 18 முறையாகவும் வளர்ந்தது. இப்படி பெருகிய இணைய பயன்பாடு வர்த்தகர்களின் செயல்பாடுகள், வாடிக்கையாளர்களின் விருப்பங்கள், பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான தரவுகளின் தொகுப்பை ஜியோவுக்கு தந்தது. ஒரு பகுதியில் தொழில் தொடங்குவதற்குமுன் இப்படியான தரவுகளை இதுவரையிலும் சில பொருளாதார ஆலோசனை தரும் நிறுவனங்கள் மூலம் ஆட்களை அனுப்பி தரவுகளை சேகரித்து ஆய்வு செய்து அதன் பிறகே தொழில் தொடங்குவதாக இருந்தது. இப்போது எல்லோரையும் திறன்பேசிகளைப் பயன்படுத்தி இணையத்தில் எல்லாவற்றையும் செய்ய பழக்கப்படுத்திவிட்டால் போதும். எல்லோருடைய ஜாதகமும் அவர்கள் கையில். இப்படி பெறப்பட்ட தரவுகளைப் பகுத்தறிந்து வியாபார உத்தியை வகுத்து களத்தில் இறங்கி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும் எளிது.

முறைசாரா பொருளாதாரத்தின் உற்பத்தி, சந்தை, விற்பனை சார்ந்த தரவுகள் பெருமளவு சேகரிக்கப்பட்ட பின்னர், 2019 பிப்ரவரியில் இந்திய அரசு ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட மின்னணு பொருளாதாரத்தில் முதலிட வருமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுகிறது. இதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடந்த வருடாந்திர முதலீட்டாளர்களின் கூட்டத்தில் பேசிய அம்பானி, தான் இணைய வர்த்தக தளமொன்றை (E-commerce platform) ஆரம்பிக்க இருப்பதாகவும் அதில் 3 கோடி சிறு வர்த்தகர்கள் இணைவார்கள் என்றும், 80% முறைசாரா வர்த்தகத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்போகும் 700 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட இந்த தளத்தில் முதலிட வருமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். இதனை தொடர்ந்து டிசம்பரின் ஜியோமார்ட் தளம் ஆரம்பிக்கப்படுகிறது.

இதன்பிறகு வந்த பெரும்தொற்று பெருவரமானது எப்படி?

**அடுத்த கட்டுரையில் பார்ப்போம்**.

**மேலும் படிக்க**

1.The Foundations of our Digital Economy

https://www.dhpa.nl/wp-content/uploads/2017/04/FoundationsDigitalEconomy.pdf

2.TOOLKITFOR MEASURINGTHE DIGITALECONOMY

https://www.oecd.org/g20/summits/buenos-aires/G20-Toolkit-for-measuring-digital-economy.pdf

3.Big Data: How it is Generated and its Importance

http://www.iosrjournals.org/iosr-jce/papers/conf.15013/Volume%202/1.%2001-05.pdf

**கட்டுரையாளர் குறிப்பு**

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு naturebas84@gmail.com

[பகுதி 1](https://minnambalam.com/public/2020/12/29/16/indian-digital-econamy-adhar-gst-spectrum-demonitisation)

[பகுதி 2]( https://www.minnambalam.com/public/2020/12/30/25/digital-india-online-portal-alibaba-amezon-vallmart-7-leven)

[பகுதி 3](https://www.minnambalam.com/politics/2020/12/31/5/china-usa-trade-war-impact-on-india-how)

[பகுதி 4](https://www.minnambalam.com/politics/2021/01/01/5/indian-digital-marketing-econamy-basics-and-scopes-aadhar-gst)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *