மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 ஜன 2021

சிறப்புக் கட்டுரைத் தொடர்: மின்னணு பொருளாதாரத்துக்கு கொரோனா கொடுத்த சாகாவரம்! பாகம் 6

சிறப்புக் கட்டுரைத் தொடர்:   மின்னணு பொருளாதாரத்துக்கு கொரோனா கொடுத்த சாகாவரம்! பாகம் 6

பாஸ்கர் செல்வராஜ்

ஆதார், அலைக்கற்றை போட்டியில் தொடங்கும் புதிய பொருளாதார முறையை செயல்படுத்துவதற்கான முன்னெடுப்பு இந்தப் போட்டியின் தொடர்ச்சியில் எதேச்சதிகார வகுப்புவாத சிந்தனை கொண்ட கட்சியை ஆட்சியில் அமர்த்துவதிலும், மக்களின் உரிமைகளை கிஞ்சித்தும் மதிக்காமல் அவர்களின் உணர்வுகளை உசுப்பிவிட்டு வாழ்வாதாரத்தை பறிக்கும் பணமதிப்பிழப்பாகவும், ஜனநாயகமறுப்பு வடிவம் பெறுகிறது. அதைத் தொடர்ந்து மாநிலங்களின் வரிவிதிக்கும் உரிமையை மறுத்து ஒன்றிய மாமன்னரின்கீழ் வாழும் குறுநில மன்னர்களாக மாற்றும் ஜிஎஸ்டி வரிவதிப்பு முறையைக் கொண்டுவந்து இந்தியாவைப் பின்னோக்கி நகர்த்துகிறது. இந்த நடவடிக்கைகள் மக்களை வஞ்சகமாக இலவச இணைய இரையைக் காட்டி இணையவலையில் சிக்கவைப்பதாகவும், கட்டாயப்படுத்தி பயன்படுத்த வைத்து அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான தரவுகளின் தொகுப்பைத் திருடும் நிலைக்கும் இட்டு செல்கிறது.

தேவலோக இந்திரன் ஜியோ

இந்த இணையப் பரவலாக்கமும் தரவுகளின் தொகுப்பும் 2019 தேர்தலில் பிஜேபி 300க்கும் மேற்பட்ட தொகுதிகள் வெல்லும் என்று சரியாக கணிக்கும் அளவுக்கு வளர்ச்சி காண்கிறது. இந்த தரவுகளின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த கட்டமாக முறைசாரா பொருளாதார சந்தையில் களம் இறங்கும் வர்த்தக நடவடிக்கையாக இணைய வர்த்தக தளம் ஜியோமார்ட் (E-Commerce Platform) 2019 டிசம்பரின் ஆரம்பிக்கப்படுகிறது அதோடு 2020 ஜனவரியில் விவசாயிகளின் மீது “அக்கறைகொண்டு” அவர்களுக்கு உதவவும், விவசாய நடைமுறைகள் குறித்து வழிகாட்டவும் ஜியோகிரிசி செயலி (App) ஆரம்பித்து அதில் அவர்களின் நிலம், உற்பத்தி, இடுபொருட்கள் என அனைத்து தகவல்களையும் திரட்டும் வேலையில் ஜியோ இறங்குகிறது. பொருட்களைச் சந்தைப்படுத்த ஜியோ இணையம், மளிகை உள்ளிட்ட பொருட்களை விற்க ஜியோ மார்ட், காய்கறிகளுக்கு ரிலையன்ஸ் ஃப்ரெஷ், இவற்றுக்கான விவசாய உற்பத்தியை தற்போதைக்கு கண்காணிக்கவும் எதிர்காலத்தில் கட்டுப்படுத்தவும் ஜியோகிரிசி என ஏற்கனவே சந்தையில் இருக்கும் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுக்கு இல்லாத மேன்மையை ஜியோ பெறுகிறது.

மற்ற நிறுவனங்கள் சந்தையில் இறங்கி தங்களின் தளங்களில் சந்தைப்படுத்தி விற்பனை செய்வதைப் பொறுத்தோ அல்லது இணைய வழங்குநருடன் இணைந்தோதான் இது குறித்த தகவல்களைப் பெறமுடியும். ஆனால், ஜியோ இணைய வழங்குநராக இருப்பதால் தரவுகளை சேகரித்துத் திட்டமிட்டு சந்தையில் இறங்க முடியும். இவை எல்லாவற்றையும்விட அரசை ஜியோ தனது சட்டைப்பையில் வைத்திருப்பதால் எப்போது என்ன வேண்டுமானாலும் சட்ட, நிர்வாக, நடைமுறை ரீதியிலான தடைகளை தகர்த்து வெற்றிபெற முடியும். ஜியோவின் இந்த முன்னெடுப்புகள் நடைபெறும் இதே ஜனவரி மாதத்தில் இந்தியா வந்த அமேசான் நிறுவனத்தின் தலைவர் பெசோஸ், ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தார். அப்போது ஒன்றிய அரசு அவரின் வருகையைப் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் உதாசீனப்படுத்தியதற்கு காரணம் அவரது பத்திரிகையான ‘வாஷிங்டன் போஸ்ட்’டில் வந்த அரச விமர்சன கட்டுரைகள் எனக் கூறப்பட்டது. அந்தப் புறக்கணிப்பு விமர்சனத்தின் பாற்பட்டதா இல்லை ஜியோவின் ஆதரவின் பாற்பட்டதா என்பது இங்கே சிந்திக்கத்தக்கது.

கொரோனா: வராது வந்த மாமணி

மின்னணு பொருளாதார நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படைகளையும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலமும், ஜியோ இணைய விரிவாக்கத்தின் மூலமும், ஜிஎஸ்டி அறிமுகத்தின் மூலமும் உருவாக்கப்பட்டு ஜியோ இணைய வர்த்தக சந்தையில் கால்பதிக்க களம் இறங்கும் நேரம் கொரோனா பெரும்தொற்று வந்து எல்லோரையும் வீட்டுக்குள் முடக்கியது. இணையம் இன்றி எதுவுமே இல்லை என்னும் அளவுக்கு வாழ்க்கை மாறிப்போனது. பணமதிப்பிழப்பு செயற்கையாக இணையத்துக்கான தேவையை உருவாக்கி இணையப் பரவலாக்கத்திற்கும், இணைய வர்த்தகத்தை நோக்கியும் இந்தியாவை நகர்த்தியது என்றால் இந்த இயற்கைப் பேரிடர் அதனை மக்களின் அத்தியாவசியங்களில் ஒன்றாக மாற்றி அதைப் பயன்படுத்த மக்களைப் பழக்கப்படுத்தி இருக்கிறது.

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட முடக்கம் தொழில்களை முடக்கி மக்களின் வேலையைப் பறித்து வாழ்வாதாரத்தை இழக்க செய்தது. பல மாதங்களாக நீடித்த முடக்கம், மரபான முறையில் இதுவரையிலும் நேரடி வியாபாரம் செய்துவந்த வர்த்தகர்களின் தொழிலை முடக்கி நட்டத்தில் தள்ளி தொழிலை விட்டு வெளியேறும் நிலைக்கு இட்டுச்சென்றது. மொத்தத்தில் எல்லோரும் இதுவரையிலும் எட்டிய மேன்மைகளை இழக்கச்செய்யும் பெரும்சாபமாகிப் போனது. அதேசமயம் மின்னணுப் பொருளாதார முறைக்கும் இணைய வர்த்தகர்களுக்கும் இணையத்தை மக்களின் இன்றியமையாத ஒன்றாக மாற்றி, இனி எப்போதும் நம்முடன் இணைந்திருக்க செய்யும் சாகாவரமாகிப் போனது. இணையப் பயன்பாடும், இணைய விற்பனையும் கொடிகட்டி பறக்க வழிவகுத்தது. இந்தியாவில் கம்பியில்லா (wireless broadband) இணையப் பயனாளர்களின் எண்ணிக்கையை 96.1 கோடியாகவும் கம்பிவழி பயனாளர்களின் எண்ணிக்கையை 1.4 கோடியாகவும் உயர்த்தியிருக்கிறது. ஒரு மாதத்திற்கு ஒரு நபர் பயன்படுத்தும் இணையத்தின் அளவு 11GB (>25-30%) ஆக அதிகரிக்க செய்திருக்கிறது.

படையெடுத்த பெருநிறுவனங்கள்

2019 பிப்ரவரி முதல் இந்திய ஒன்றியம் ஒரு ட்ரில்லியன் மதிப்புள்ள இந்திய மின்னணுப் பொருளாதாரத்தில் முதலிட வருமாறு அழைப்பு விடுத்திருந்தாலும் பொதுமுடக்கம் அறிவித்த மார்ச் மாதத்துக்குப் பிறகு பெருகிய இணைய வர்த்தகத்தைக் கண்ட பெருநிறுவனங்கள் குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனா நிறுவனங்கள் இந்தியாவில் முதலிடவும் இந்த முடக்கத்தால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களைக் கைகொள்ளவும் படையெடுத்தன. 2018ல் தொடங்கிய அமெரிக்க-சீன வர்த்தகபோர் 2019 வரை தொடர்ந்து கொண்டிருந்த சமயத்தில் கொரோனா முதலில் சீனாவில் பரவியது கண்டறியப்பட்டது. அது சீனாவின் பொருளாதாரத்தை முடக்கி வலுவிழக்க செய்யும் எனக் கணக்கிட்ட அமெரிக்கா அதன் மீதான தாக்குதலை தீவிரபடுத்தி இதற்கு சீனாதான் காரணம் என குற்றம்சாட்டி தனிமைப்படுத்த முயன்றது. இதில் வெற்றியடையும் பட்சத்தில் அங்கிருக்கும் உற்பத்தி இந்தியாவுக்கு வரும் என்ற கணக்கில் இந்தியாவில் அதில் பங்கேற்றது. அதன் தொடர்ச்சியாக சீனாவின் முதலீடுகளைத் தடுத்து நிறுத்தியது. அதேசமயம் அமெரிக்கா மற்றும் அதன் அணி நாடுகளின் முதலீடுகளை மட்டும் அனுமதித்தது.

இருவகைப் போட்டி

இப்படி வரும் முதலீடுகளும் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்களும் இரு வகையானது.

1. இணைய வர்த்தகத்துக்கு அடிப்படையான இணைய சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கானது.

2. இணைய வர்த்தக சந்தையை கைப்பற்றுவதற்கானது.

முதல்வகையில் அமெரிக்க நிறுவனங்களான கூகிள், அமேசான், முகநூல் போன்றவற்றுக்கும் சீனாவின் டென்சென்ட், அலிபாபா போன்ற நிறுவனங்களுக்கும் இடையிலானது. இதில் சாம்சங் நிறுவனத்தின் 4ஜி சாதனங்களைப் பயன்படுத்தும் ஜியோ அமெரிக்க நிறுவனங்களின் பக்கம். சீனாவின் ஹோவாவெய் நிறுவனத்தின் இணைய சாதனங்களைப் பயன்படுத்தும் வோடாபோன், ஏர்டெல் நிறுவனங்கள் சீனாவின் பக்கம். அடுத்த 5ஜி தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ஹோவாவெய் நிறுவனத்தின் சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது என அமெரிக்கா உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது.

சில நாடுகள் தமது சொந்த அனுகூலத்தைக் கணக்கில்கொண்டும் அழுத்தத்துக்குப் பணிந்தும் ஹோவாவெய் நிறுவனத்தை விலக்கின. பல நாடுகள் பணிய மறுத்தன. ஏனெனில் ஏற்கனவே ஒரு நிறுவனத்தின் சாதனங்களைப் பயன்படுத்தி வரும் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒரே நிறுவனத்தின் சாதனங்களைப் பயன்படுத்தும்போது செலவும் சிக்கலும் குறைவு. வேறு நிறுவனத்தின் சாதனத்துக்கு மாறும்போது 10 - 15 சதவிகிதம் வரை செலவு அதிகம் ஆகும். ஏற்கனவே ஜியோ வருகையால் நொடிந்து போய் இருக்கும் மற்ற நிறுவனங்களுக்கு இது பெரும் இழப்பை ஏற்படுத்தி மேலும் நலிவுறச் செய்யும். இந்த இழுபறியில் இந்தியா ஹோவாவெய் நிறுவனத்தைத் தொடர்ந்து இந்திய சந்தையில் அனுமதிப்பது தொடர்பாக தெளிவான முடிவெடுக்காமல் இருந்து வந்தது. சில்லறை இணைய வர்த்தக சந்தையைப் பொறுத்தவரையில் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவிகிதப் பங்குகளை வாங்கிய வால்மார்ட்டும், முதன்முதலில் இந்திய இணைய சந்தையில் கால்பதித்த அமேசான் நிறுவனமும் போட்டியிட்டு வந்தன. சீன நிறுவனங்கள் பேடிம் பணப்பரிமாற்ற அமைப்பு, பிக்பேஸ்கட் சங்கிலித்தொடர் கடைகள், ஓலா போக்குவரத்து, சுமோட்டோ உணவு சேர்ப்பித்தல் போன்ற இணையம் சார்ந்த தொழில்களில் முதலிட்டு இருந்தன. ஜியோவைப் பொறுத்தவரை சந்தைக்கு புதிய வரவு.

நிறுவனங்களின் பலம் - பலவீனம் சேர்க்கைகள்

இதில் எந்த நிறுவனமும் இந்திய சில்லறை விற்பனை சந்தைக்கேற்ற முழு கட்டமைப்பைப் பெற்று இருக்கவில்லை. ஏனெனில் இணைய வர்த்தகத்துக்கான அடிப்படைகள் இந்தியாவில் இன்னும் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை. வாடிக்கையாளர்கள் எல்லோரும் இதற்கு இன்னும் முழுமையாகப் பழக்கப்படவில்லை. பலரும் நேரடியாகப் பொருளைப் பார்த்து வாங்கும் பழக்கத்தில் இருந்து விடுபடவில்லை. எல்லோருக்கும் இணைய வசதியும் திறன்பேசிகளைப் பயன்படுத்தும் வாய்ப்பும் எட்டப்படவில்லை. இந்திய வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களின் தன்மையும் அளவும் சீரானதாக இருக்கவும் வாய்ப்பில்லை. ஆக, இந்த சந்தைக்கான விற்பனை செயல்தந்திரம் மற்ற சந்தைகளைப் போன்றதாக இருக்கவியலாது.

அமேசான் சொந்த இணைய தொழில்நுட்பங்கள், பணப்பரிமாற்ற அமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும் அது இணையத்தில் மட்டுமே சந்தைப்படுத்த முடியும். மொத்த சந்தை மதிப்பில் இப்படி இணையத்தில் மட்டுமே விற்பனை ஆகும் அளவு சில விழுக்காடு மட்டுமே. இந்த இடைவெளியை சரிசெய்ய அது பையானியின் ப்யூச்சர் குழுமத்தில் 49 சதவிகிதம் முதலீடு செய்திருக்கிறது. வால்மார்ட் நிறுவனம் நேரடி விற்பனை மற்றும் சொந்த போன்பே பணப்பரிமாற்று அமைப்பைக் கொண்டிருந்தாலும் இணைய சந்தைக்கான கட்டமைப்பு இல்லாததால் அது ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தைக் கைப்பற்றியது. அந்நிய நிறுவனங்கள் நேரடி விற்பனையில் ஈடுபட உள்ள தடைகளை உடைக்க அது டாட்டா குழுமத்துடன் கைகோக்க பேசி வருகிறது. டாட்டா குழுமத்தின் சொந்த உற்பத்தி, கடைகளுடன் புதிய இணைய விற்பனை தளமொன்றை உருவாக்க 25 பில்லியன் டாலர் மதிப்பில் முதலிட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஜியோவைப் பொறுத்தவரையில் சொந்த இணையம், தரவுகளின் தொகுப்பு, இந்திய நிறுவனம் என்ற வகையில் எந்த சட்ட பிரச்சினைகளற்ற நிலை, சொந்த இணைய விற்பனைதளம் ஆகியவற்றை கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும்விட மற்றவர்கள் யாவரும் நுழையாத காய்கறிகள் மற்றும் பழ விற்பனை, அதன் உற்பத்தியில் கால்பதிக்கும் செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது. ஆனால், இணையத் தொழில்நுட்பம், பணப்பரிமாற்று அமைப்புகள் எதுவும் சொந்தமாக இல்லை. இந்தத் தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும் கூகுள் மற்றும் முகநூல் நிறுவனங்கள் ஜியோவுடன் கைகோத்தன. இந்தியாவின் 90 சதவிகிதம் இணைய விளம்பர சந்தையை கையில் வைத்திருக்கும் இவ்விரு நிறுவனங்கள் ஜியோவுடன் இணையும்போது அது சந்தையில் யாருக்கும் இல்லாத மேன்மையை ஜியோவுக்கு வழங்கும். இதைக் கணக்கில்கொண்டு பலரும் ஜியோவில் முதலிட முன்வந்தார்கள். அது ஜியோவுக்கு மிகப்பெரிய மூலதன திரட்சியை வழங்கியது. இந்த 2020இல் இந்திய சந்தைக்குள் வெளியில் இருந்து வந்திருக்கும் முதலீடுகளின் அளவு கிட்டத்தட்ட 50 பில்லியன் டாலர்கள் அதில் 30 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக ரிலையன்ஸ் குழுமத்துக்குச் சென்றிருக்கிறது.

அதைக்கொண்டு ஜியோ தனது விரிவாக்க நடவடிக்கைகளை விரைவுபடுத்த ஆரம்பித்திருக்கிறது. இந்தியா முழுக்க தனது கடைகளைத் திறந்திருக்கிறது. மேலும் ஏற்கனவே இந்தியா முழுக்க நீல்கிரீஸ் போன்ற பெயர்களில் சங்கிலித்தொடர் கடைகளை நடத்திவந்த பையானியின் ப்யூச்சர் குழுமத்தை 3.4 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க ஒப்பந்தம் போட்டது. 49 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கும் அமேசான், முன்பு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி விற்பனைக்குச் செல்லும்போது தனக்கு முன்னுரிமை அளிக்கும் ஒப்பந்த விதியை இது மீறி இருப்பதாக வழக்கு தொடர்ந்தது. சிங்கபூரில் நடந்த வழக்கில் அமேசானுக்கு சாதகமான தீர்ப்பு வந்திருக்கிறது. தற்போது இந்தியா இதில் இறுதி முடிவெடுக்க வேண்டும். அம்பானியா, பெசோஸ்சா என்ற போட்டியில் அரசின் முடிவு என்னவாக இருக்கும் என்று அனைவரும் ஆர்வமுடன் கவனித்து வருகிறார்கள். இரண்டு கண்களில் எந்த கண்ணை இழந்தாலும் ஒன்றிய அரசுக்கு இழப்புதான். அம்பானிக்கு சாதகமாக தீர்ப்பு வரும் பட்சத்தில் இதுவரையிலும் சர்வதேச ஊடகங்களில் பேசப்படாத சட்டம்-ஒழுங்கு, மனித உரிமை பிரச்சினைகள், பொருளாதார நலிவு, ஜனநாயக சீர்குலைவு எல்லாம் பேசப்படும். பெசொஸுக்கு ஆதரவான தீர்ப்பு அம்பானியின் பல பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட கோட்டையில் கொஞ்சம் இடிபடும்.

இத்தனை போட்டிக்கும் இணைவுகளுக்கு மத்தியில் சீன நிறுவனங்கள் என்ன ஆயின?

அடுத்த கட்டுரையில் பார்ப்போம்

மேலும் படிக்க

1.The Foundations of our Digital Economy

https://www.dhpa.nl/wp-content/uploads/2017/04/FoundationsDigitalEconomy.pdf

2.TOOLKITFOR MEASURINGTHE DIGITALECONOMY

https://www.oecd.org/g20/summits/buenos-aires/G20-Toolkit-for-measuring-digital-economy.pdf

3.Big Data: How it is Generated and its Importance

http://www.iosrjournals.org/iosr-jce/papers/conf.15013/Volume%202/1.%2001-05.pdf

கட்டுரையாளர் குறிப்பு

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

முந்தைய பகுதிகள்

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

புதன் 6 ஜன 2021