சசிகலாவின் நலம் விசாரிக்கவில்லை: மறுக்கும் பரமசிவம் எம்.எல்.ஏ.

politics

அதிமுகவின் முன்னாள் இடைக்காலப் பொதுச் செயலாளரான சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து உடல் நலக் குறைவு காரணமாக ஜனவரி 20 ஆம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிமுகவிலும், அமமுகவிலும் இருக்கும் பலர் சசிகலாவின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகிறார்கள். இதுகுறித்து மின்னம்பலத்தில், ‘சசிகலா உடல் நலம்: விசாரித்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில், “குறிப்பாக வேட சந்தூர் அதிமுக எம்.எல்.ஏ. டாக்டர் பரமசிவம், சசிகலாவின் உறவினரான டாக்டர் வெங்கடேஷுக்கு நெருக்கமானவர் என கருதப்படுபவர். அவர் வெங்கடேஷுக்கு போன் செய்து மனிதாபிமான அடிப்படையில் சசிகலாவின் உடல் நிலை பற்றி அக்கறையாக விசாரித்துள்ளதாக எம்.எல்.ஏ.வுக்கு நெருக்கமான வட்டாரத்தில் சொல்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தோம்.

இந்த செய்தியை அடுத்து எம்.எல்.ஏ. பரமசிவத்தின் வழக்கறிஞர் ராஜா செல்வன் மின்னம்பலத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

அதில், ‘அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு கர்நாடக சிறையில் தண்டனை சிறைவாசியாக உள்ள திருமதி. சசிகலா உடல் நிலை பற்றி திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம், மேற்படி சசிகலாவின் உறவினர் டாக்டர் வெங்கடேசன் என்பவரிடம் விசாரித்ததாக பொய் செய்தி தங்களது தளத்தில் இருந்து பரவியுள்ளது.

வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.பி. பரமசிவத்துக்கு எதிராகவும் அதிமுகவுக்கு களங்கம் கற்பிக்கும்படி வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கிறேன். உரிய மறுப்புச் செய்தியை வெளியிட வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் எம்.எல்.ஏ. பரமசிவம் சார்பாக மறுப்பு தெரிவித்திருக்கிறார் வழக்கறிஞர் ராஜா செல்வன்.

நாம் விசாரித்தவரை, அந்தக் குறிப்பிட்ட தகவலில் உண்மைத் தன்மையில்லை என்று தெரியவருகிறது. அந்த செய்தியை வெளியிட்டதில் நமக்கு எவ்வித உள்நோக்கமும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

***

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *