காங்கிரஸில் இருந்து நமச்சிவாயம் நீக்கம்: பாஜகவில் இணைகிறாரா?

politics

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார். இதனால் புதுச்சேரி காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவரான நமச்சிவாயம் 2016 இல் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்போது எம்.எல்.ஏ.வாகவே இல்லாத முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி டெல்லியில் தனக்குள்ள லாபி காரணமாக முதல்வர் பதவியைப் பெற்றார். அப்போதில் இருந்தே அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் இருந்தார்.

பின்னர் அவருக்கும் நாராயணசாமிக்கும் இடையிலான பிரச்சினைகள் அதிகரித்த நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நமச்சிவாயம் தன் ஆதரவாளர்களோடு நாராயணசாமிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வந்தார். அண்மையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் அவர் கலந்துகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.

சில தினங்களுக்கு முன் டெல்லி சென்ற முதல்வர் நாராயணசாமியும், புதுச்சேரி காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியமும் தமிழக புதுவை பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை சந்தித்தனர். அப்போது நமச்சிவாயம் தற்போது பாஜக பிரமுகர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். விரைவில் அவர் பாஜகவில் இணைய இருக்கிறார் என்ற தகவலைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து திரும்பியதும் இன்று (ஜனவரி 25) புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன்,

“காங்கிரஸ் கட்சியின் முன்னாள் புதுச்சேரி தலைவர் நமச்சிவாயம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை மாற்றுக் கட்சிக்கு அழைப்பது உள்ளிட்ட கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது”என்று அறிவித்தார்.

நாளையோ அல்லது சில நாட்களிலோ நமச்சிவாயம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இன்று அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *