சிறுத்தைகளுக்கு ஐந்து? திமுக கூட்டணியில் அடுத்த கையெழுத்து!

politics

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையிலான குழுவினர் அறிவாலயத்தில் திமுகவின் தேர்தல் குழுவினரோடு மார்ச் 1 ஆம் தேதி பேசியிருக்கிறார்கள்.

உள்ளே சென்று அமர்ந்ததுமே திருமாவளவன் பரஸ்பர வணக்கம் தெரிவித்து விட்டு, ‘9 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது” என்று ஆரம்பித்திருக்கிறார். திமுக குழுவில் இடம்பெற்றிருந்த வேலுவோ, “உங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் இரு எம்பி சீட்டுகள் கொடுத்திருக்கிறோம். இப்போது நாங்கள் சொல்வதை நீங்கள் அன்போடு கேட்க வேண்டும், இரு சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றதும் திருமா, “என்னங்க இப்படி சொல்றீங்க?” என்று கேட்டிருக்கிறார்.

“ரொம்பக் குறைச்சால் கூட எங்களுக்கு ஏழு தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும்”என்பதில் சிறுத்தைகள் பிடிவாதமாக நின்றிருக்கிறார்கள்.

திமுக தரப்பிலோ “இரண்டோடு இன்னும் இரண்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். நான்கு தொகுதிகளில் நில்லுங்கள்.தேர்தல் செலவை எல்லாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம். ஆனால் உதயசூரியனில்தான் நிற்க வேண்டும். நிச்சயம் எல்லாரும் ஜெயித்து சட்டமன்றம் செல்வோம். இது உங்கள் கையில்தான் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த திருமாவளவன், “பேச்சுவார்த்தையில் விடுதலைச் சிறுத்தைகளின் விருப்பத்தைத் தெரிவித்தோம். திமுக தரப்பில் அவர்களின் நிலைப்பாட்டை எங்களிடம் விளக்கியிருக்கிறார்கள். மீண்டும் சந்தித்துப் பேச இருக்கிறோம்” என்றார்.

“எந்த சின்னத்தில் போட்டியிடுவீர்கள்?”என்று கேட்டபோது, “திமுகவுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். பேச்சுவார்த்தை முடிந்தபின் வெளியிடுவோம்” என்றார்.

“திமுக தலைவர் ஸ்டாலினை இன்று (மார்ச் 2) திருமாவளவன் மீண்டும் சந்திக்கும்போது ஒரு தொகுதி அதிகமாகச் சேர்த்து விடுதலைச் சிறுத்தைகளுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பிருக்கிறது” என்று சொல்கிறார்கள் அறிவாலய பேச்சுவார்த்தைக் குழுவினர்.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *