மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 மா 2021

செல்போனில் சிக்கிய பாஜக: கண்டுபிடித்தவரின் பளீச் பேட்டி!

செல்போனில் சிக்கிய பாஜக: கண்டுபிடித்தவரின் பளீச் பேட்டி!

ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள செல் நெம்பர்கள் பாஜகவுக்கு எப்படிக் கிடைத்தது, அதன் மூலமாக வாக்கு சேகரிக்கிறார்கள், புதுச்சேரியில் ஏன் தேர்தலை தள்ளி வைக்கக்கூடாது என்று கேட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், “விசாரணையை நூறு ஆண்டுக்கு இழுத்து அடிக்கக்கூடாது”என்றும் எச்சரித்துள்ளது.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்தத் தொகுதியில் உள்ள வாக்காளர்களிடம் தொடர்புகொண்டு வாக்கு சேகரிப்பதும், வாட்ஸ் அப்பில் தாமரைக்கு வாக்கு அளிக்கச்சொல்லியும், பூத் வாரியாக வாட்ஸ் குரூப் துவங்கியுள்ளார்கள் பாஜகவினர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களைத் தொடர்புகொண்டும், வாட்ஸ் அப்பிலும் பாஜகவுக்கு வாக்கு சேகரித்து வருவதை கண்டுபிடித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல் நெம்பர் பாஜகவுக்கு எப்படிக் கிடைத்தது என்று நியாயம் கேட்டு உயர் நீதிமன்றம் படியேறியுள்ளனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி தலைவர் ஆனந்த் இதுகுறித்து மின்னம்பலம்.காம் பத்திரிகையிடம் பேசினார்.

“ 2021 பிப்ரவரி 25ஆம் தேதி வாட்ஸ் அப்பில் எனக்கு ஒரு மெசெஜ் வந்தது. புதுச்சேரிக்கு மோடி வருகிறார் அவர் பேச்சை கேளுங்கள், பாஜகவில் இணைந்துவிடுங்கள் என்று. அது ஏதோ அனைத்து செல்லுக்கும் அனுப்புகிறார்கள் என்று விட்டுவிட்டேன்.

மார்ச் 4ஆம் தேதி பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியில் உள்ள செல்போனுக்கும் தொடர்புகொண்டு கால் சென்டரிலிருந்து பேசுவதுபோல் பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பதும், பாஜக,வில் இணையச்சொல்லியும் பிரச்சாரம் செய்தார்கள். அதன் பிறகு வாட்ஸ் அப்பில் தாமரைக்கு வாக்கு அளிக்கச்சொல்லி மெசெஜ் அனுப்புகிறார்கள். அனைத்து தொகுதிகளில் உள்ள நண்பர்கள் உறவினர்களிடம் விசாரித்தேன். தங்களுக்கும் இந்த மெசெஜ் வந்துள்ளது என்று சொன்னார்கள்.

அதையெல்லாம் ஸ்கிரின் ஷாட் எடுத்துக்கொண்டு, மார்ச் 5 ஆம் தேதி, புதுச்சேரி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இணை, துணை என அனைத்து ஆணையரிடமும் புகார் கொடுத்தோம். பத்து நாட்கள் பிறகு சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி என்னை விசாரணைக்கு அழைத்தார். தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தால் சைபர் க்ரைம் விசாரிக்கிறார்களே என்று யோசித்தபடியே கீர்த்தியிடம் விசாரணைக்குச் சென்றேன். அவர் கேட்ட ஆதாரங்களைக் கொடுத்தேன், ஒன்றும் ரியாக்‌ஷன் இல்லை.

சென்னை சீனியர் அட்வேகேட் வைகை அவர்களின் ஜூனியர் எம். என். சுமதி, எஸ். அருணிடம் இந்த ஆதாரங்களைக் கொடுத்து, ‘பாஜக ஆட்சி ஆளக்கூடிய கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களிலிருந்து ஆப்ரேட் செய்கிறார்கள். வரக்கூடிய மெசெஜ் அனைத்தும் அங்கிருந்துதான் வருகிறது என்று எனது சோர்ஸ் மூலமாக அறிந்துகொண்டேன்’ என்று தகவல்களும் கொடுத்தேன்.

இதன் பிறகுதான் ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள மக்களின் செல்போன் நம்பர்கள் பாஜகவுக்கு எப்படிக் கிடைத்தது என்றும், இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம்.

மனு 19ஆம் தேதி நெம்பராகி மார்ச் 24ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதிகள் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.

தேர்தல் ஆணையம், இதுகுறித்து சைபர் க்ரைம் பிரிவினரை விசாரிக்கச் சொல்லியிருக்கிறோம் எனப் பதில் சொல்லும்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், “ ஏன் பந்தை அந்தப் பக்கம் தட்டிவிடப் பார்க்கிறீர்கள்? தேர்தல் ஆணையம் நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும். 26ஆம் தேதி முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்”என்று உத்தரவிட்டனர்.

அதன்படியே நேற்று மார்ச் 26ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. பாஜக ஐடி விங் சார்பாக வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி, ‘கை பேசிகளில் வாக்குகள் சேகரிக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்தோம்’என்று கூற... உடனே தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால், ‘அப்படி எந்த மனுவும் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்படவில்லை’என்று மறுத்தார்.

ஆதார் நிறுவனத்திலிருந்து ஆஜரான வழக்கறிஞர், ‘ இதுகுறித்து ஆதார் நிறுவனத்துக்கு புகார் கொடுக்கவில்லை’ என்று சமாளித்தார். உடனே நீதிபதி, ‘மனுதாரரின் புகாரை தேர்தல் ஆணையம் உங்களுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதைவைத்து விசாரியுங்கள். மனுதாரர் மீது ஏன் குறை சொல்கிறீர்கள்? இது சீரியஸான வழக்கு. தனி நபர் செல்போன் எண்கள் அரசியல்வாதிகள் கைக்கு எப்படிப் போனது? இந்த தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது?”என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

உடனே தேர்தல் ஆணையம், “இதுகுறித்து விசாரித்து வருகிறோம்”என்று பதிலளிக்க, கோபமான நீதிபதி, ‘நூறு ஆண்டுகளுக்கு விசாரிப்பீர்களா? மார்ச் 31ஆம் தேதி முழு அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்”என்று நீதிமன்றத்தில் நடந்ததை விளக்கினார் ஆனந்த்.

ஆதார் நிறுவனத்திடம் இருக்கும் போன் நம்பர்கள் பாஜக கைக்குப் போனது பற்றிய இந்த வழக்கில் மார்ச் 31 ஆம் தேதி என்ன நடக்கும் என்று ஒட்டுமொத்த புதுச்சேரியும் காத்திருக்கிறது.

-வணங்காமுடி

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

சனி 27 மா 2021