மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

விடாது துரத்தும் விவிஐபிக்கள்... கொதிநிலையில் கொங்கு... யாருக்கு ஊதுமோ சங்கு?

விடாது துரத்தும் விவிஐபிக்கள்...  கொதிநிலையில் கொங்கு...    யாருக்கு ஊதுமோ சங்கு?

தற்செயலாக நிகழ்கிறதா, இல்லையெனில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா என்று தெரியவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், திமுக தலைவர் ஸ்டாலினும் ஒரே நாளில் அல்லது அடுத்தடுத்த நாட்களில் கொங்கு மண்டலத்தில் பரப்புரை மேற்கொள்வது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. தேர்தல் பரப்புரை முடிவதற்கு மூன்றே நாட்கள் இருக்கும் நிலையில், நேற்று ஒரே நாளில் இவர்கள் இருவரும் கோவையில் பரப்புரை மேற்கொண்டார்கள். இருவரும் ஒரே நாளில் பரப்புரை மேற்கொண்டாலும், ஒவ்வொருவரின் ஸ்டைலும் பேச்சும் எப்படி மக்களை ஈர்த்தது என்பதுதான் இப்போது கோவையில் வீதிக்கு வீதியும் வீட்டுக்கு வீடும் நடக்கின்ற பட்டிமன்றமாகவுள்ளது.

தாராபுரத்தில் பிரதமர் மோடி பேசியபோது, ஆ.ராசா, திண்டுக்கல் லியோனி இருவருடைய பேச்சையும் சுட்டிக்காட்டி, பெண்களைத் தரக்குறைவாகப் பேசுவதும், நடத்துவதும்தான் தி.மு.க., –காங்கிரஸ் வேலையாக இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்று மிகவும் கடுமையாகத் தாக்கிப் பேசினார். பிரதமரின் பேச்சில், இந்த விஷயம் எப்படிச் சேர்ந்தது என்று தெரியவில்லை. ஆனால் அந்தப் பேச்சை அதிமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள், வேட்பாளர்கள் பலரே ரசிக்கவில்லை. தான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்று ஆ.ராசா விளக்கம் கொடுத்து, மன்னிப்புக் கேட்ட பின்னும் கூட அந்த விவகாரத்தை அதிமுகவினர் விடுவதாக இல்லை. ஊருக்கு ஊர் போராட்டம் நடத்தினர். முதல்வர், துணை முதல்வர், கட்சி பேச்சாளர்கள் அனைவரும் அதையே பேசினர். ஆட்சியின் சாதனைகள், கட்சியின் வாக்குறுதிகள் எதிலும் நம்பிக்கை இல்லாமல், இந்த விவகாரத்தைப் பெரிதாக்கி, சமுதாயரீதியான வாக்குகளை வாங்க முயற்சி நடப்பதாகவும் சமூக ஊடகங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். அத்தகைய சூழ்நிலையில்தான், பிரதமர் மோடியும் இந்த விவகாரத்தைப் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆ.ராசாவாவது முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர். திண்டுக்கல் லியோனி, கட்சியின் பேச்சாளர் மட்டுமே. அவரைப் பற்றியெல்லாம் பிரதமர் பேசியது தேவையற்றது என்று பாரதிய ஜனதா கட்சியில் உள்ள அறிவுஜீவிகள் பலருமே அலுத்துக்கொள்கின்றனர். அன்று மாலையே அதே திருப்பூர் மாவட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அதில் பொள்ளாச்சி பாலியல் விவகாரம், பெண் எஸ்.பி.,க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் என எல்லாவற்றையும் விலாவாரியாகப் பேசி, இதற்கெல்லாம் பிரதமர் பதில் சொல்வாரா என்று அவர் கேட்க, அந்தப் பேச்சு பெண்களை பெரிதும் ஈர்த்தது. அப்படியே கோவைக்கு வந்தவர், யாருமே எதிர்பாராதவிதமாக, அமைச்சர் வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்துார் தொகுதியில் உள்ள ஆர்.எஸ்.புரம் டி.பி.,ரோட்டில் இரவில் நடக்க ஆரம்பித்து விட்டார். அவருடன் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியும் நடந்து வந்தார். அவர்கள் நடந்த ரோடுதான், கோவை நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 25 கோடி ரூபாய் செலவில் முதலில் உருவாக்கப்பட்ட மாதிரிச்சாலையாகும். அதில் 2 கி.மீ., துாரம் வரை நடந்து சென்றார் ஸ்டாலின். அத்திட்டத்தில் நடந்த ஊழல் பற்றியும் அவரிடம் சிலர் விளக்கியுள்ளனர். அதற்காக அவர் அங்கு வந்தாரா என்ற பரபரப்பும் பத்திரிக்கையாளர்களிடம் தொற்றிக் கொண்டது. ஆனால் அதைப் பார்த்துக் கொண்டே .உற்சாகமாக நடந்தார் ஸ்டாலின்.

வடமாநிலத்தவர்கள் அதிகமாக வாழும் அந்தப் பகுதி, பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான பகுதி என்று கருதப்பட்டாலும், ஸ்டாலின் வருகிறார் என்றதும் அப்பகுதியில் கடை வைத்துள்ள வடமாநிலத்தவர்களும், சுற்று வட்டாரத்தில் குடியிருக்கும் பிற மக்களும் ஏராளமானவர்கள் ரோட்டுக்கு வந்து கூடி, அவரிடம் கைகுலுக்கி தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இளைஞர்களும், இளம்பெண்களும் அவரைப் பார்த்து படுஉற்சாகமாகி அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். எல்லோருடனும் நின்று பொறுமையாக போஸ் கொடுத்த ஸ்டாலின், எல்லோரிடமும் மறக்காமல் உதயசூரியனுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கேட்கத் தவறவில்லை. அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு அவர் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றார். நேற்று காலையில் கோவையின் மெரினா பீச்சாகக் கருதப்படும் பந்தயச்சாலை நடைபாதையில் நடக்க ஆரம்பித்து விட்டார். அவருடன் அந்தத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், அருகிலுள்ள சிங்காநல்லுார் தொகுதி வேட்பாளரும் எம்எல்ஏவுமான கார்த்திக் உள்ளிட்ட பலரும் உடன் நடந்து சென்றனர்.

ஸ்டாலின் ‘வாக்கிங்’ வருவது தெரிந்ததும், அப்பகுதியில் தினமும் நடைப்பயிற்சிக்கு வரும் ஏராளமான ஆண்களும் பெண்களும் ஓடிவந்து அவருக்குக் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்து அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அருகிலுள்ள சர்ச் பாதிரியார்கள் வந்து கைகுலுக்கி அவரிடம் பேசினர். ஏராளமான தொழில் முனைவோரும் வந்து அவரைப் பார்த்து வாழ்த்தினர். அந்தப் பகுதியில்தான் 41 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டாவது மாதிரிச்சாலை அமைக்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது. முந்தைய நாள் இரவில் டி.பி.ரோட்டிலும், இரண்டாவது நாள் காலையில் பந்தயச்சாலையிலும் அவர் நடந்து சென்றது, வாக்குச் சேகரிப்பதற்காக மட்டுமில்லை; பணிகளை ஆய்வு செய்யவும்தான் என்று இப்போது வரை பேச்சு ஓடுகிறது.

காலையில் மேட்டுப்பாளையம் சென்று பேசினார் ஸ்டாலின். மேட்டுப்பாளையம், அவினாசி, ஊட்டி, குன்னுார், கூடலுார் தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் அங்கு நடந்தது. பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள மைதானத்தில் பிரமாண்டமான கூட்டம் கூடியிருந்தது. காலையில் முதல் பாயிண்ட் என்பதால், ஸ்டாலினின் பேச்சில் வழக்கத்தை விட மிகவும் உற்சாகம் காணப்பட்டது. முந்தைய நாளில் கோவைக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்தபோது நடந்த கல்வீச்சு, பிரதமரைப் போலவே அவர் பேசிய பேச்சு எல்லாவற்றுக்கும் பதிலடி கொடுத்தார் ஸ்டாலின். உ.பி. ஹத்ராஸ் சம்பவம் துவங்கி, இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிராக அதிகளவிலான பாலியல் குற்றங்கள் நடக்கும் முதல் மாநிலம் என்பதைப் புள்ளி விவரங்களுடன் தெரிவித்த ஸ்டாலின், ‘‘உங்களுக்கு இங்கு வந்து பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?’’ என்று காட்டமாகக் கேட்டார். மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரிக்கான பல திட்டங்களையும் அங்கு அறிவித்தார். அடுத்ததாக துடியலுாரில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லுார், கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார்.

அங்கு பேசும்போது, அமைச்சர் வேலுமணியைக் குறி வைத்து அவர் பேசியபோது, கூட்டத்தில் அபாரமான ஆதரவுக்குரல் ஒலித்தது. அதனால் அந்த விஷயத்தைத் தொடர்ந்த அவர், ‘‘வேலுமணி...என்னவெல்லாம் ஆட்டம் போட்டீங்க. எங்க கட்சிக்காரன் மேல எத்தனை கேஸ் போட்டீங்க. என் கட்சித் தொண்டன் ஒவ்வொருத்தனும் வெறியா இருக்கான்...நாங்க ஆட்சிக்கு வந்ததும் என்ன நடக்கப்போகுதுன்னு பாருங்க. யார் விட்டாலும் இந்த ஸ்டாலின் விடமாட்டான்!’’ என்று அவர் பேசியது, ஏற்கெனவே கொதிக்கும் வெயிலில் மணிக்கணக்கில் காத்துக்கிடந்த மக்களை மேலும் சூடாக்கியது.

கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோகப் பணிகளை சூயஸ் நிறுவனத்திற்குக் கொடுத்துள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின் சொன்னது பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் பல ஆண்டு கால போராட்டத்துக்குப் பின், தடாகம் பள்ளத்தாக்கில் ஐகோர்ட் உத்தரவால் சமீபத்தில் மூடப்பட்ட 186 செங்கல் சூளைகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சொன்னது, சூழலை நேசிக்கும் கோவைவாசிகள் பலரிடமும் கொதிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதன்பின் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

ஸ்டாலின் கோவையில் பரப்புரை செய்தபோது, முதல்வர் பழனிசாமி நீலகிரியில் கூடலூரில் பரப்புரை மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் வேலுமணியும் சென்றிருந்தார். அங்கு கூடியிருந்த கூட்டம், இதுவரை அதிமுகவுக்குக்கூடாத கூட்டமாகத் தெரிந்தது. அது ஏதோ ஒரு மாற்றம் நடக்கப்போகிறதோ என்ற எண்ணத்தையும் கூடலுார் மக்களிடம் விதைத்திருந்தது. செக்சன் 17 நிலங்களுக்கு பட்டா, மனித–வன உயிரின மோதலுக்குத் தீர்வு, சுற்றுலா மேம்பாடு என பல விஷயங்களையும் பேசி கவனம் ஈர்த்தார் முதல்வர் பழனிசாமி. மதியத்திற்கு மேல் கோவைக்கு வந்த முதல்வர், கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பேசினார். தொண்டை கட்டிக்கொண்டிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கே மிகவும் சிரமப்பட்டார். வழக்கமாகப் பேசுவதைவிட, மிகவும் வேகவேகமாகப் பேசிய முதல்வர், இதுவரை சொல்லாத கிரிக்கெட் ஸ்டேடியம், புதிய தொழிற்பேட்டை என புதுப்புது வாக்குறுதிகளைக் கொடுத்தார். பொதுக்கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், மைதானம் முழுமையாகக் கூட ஆட்களைப் பார்க்கமுடியவில்லை. அதேபோல கடந்த முறை கோவைக்கு முதல்வர் வந்தபோது பேசியபோது, அவரிடம் காணப்பட்ட உற்சாகத்தை நேற்று சுத்தமாகக் காணவில்லை. அதிமுக வேட்பாளர்கள், நிர்வாகிகளிடமும் ஒரு விதமான சோர்வு இருப்பதுமட்டும் தெளிவாகத் தெரிந்தது.

பிரதமர், தமிழக முதல்வர், உபி முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என கோவையை சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருப்பதில், கோவையில் அக்னி நட்சத்திரம் இப்போதே ஆரம்பித்து விட்டது.

யாரை என்ன செய்யக் காத்திருக்கிறார்களோ கொங்கு மக்கள்?

-பாலசிங்கம்

.

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

வெள்ளி 2 ஏப் 2021