மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

ஏமாற்றும் பினராயி: எக்குத்தப்பாகப் பேசிய 'யோகி'

ஏமாற்றும் பினராயி: எக்குத்தப்பாகப் பேசிய 'யோகி'

கேரள மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக உத்தரப்பிரதேச முதல்வர் ‘யோகி’ ஆதித்யநாத் நேற்று அங்கு பயணம் செய்தார். ஆலப்புழை மாவட்டத்தின் ஹரிபட்டில் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், இந்திய வரலாற்றின் அவமானகரமான நிகழ்வுகளில் கேரளத் தங்கக்கடத்தலும் இடம்பிடித்துவிட்டது என்று கடுமையாகச் சாடினார்.

கேரளத்துக்குப் பிரச்சாரத்துக்கு வரும் பாஜகவின் அகில இந்திய தலைவர்கள் அனைவரும் தங்களுடைய உரையில் இந்த விவகாரத்தைத் தொடாமல் செல்வதில்லை. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் டாலர் கடத்தல் விவகாரத்தைப் பூடகமாகக் குத்திக்காட்டினார்.

ஆலப்புழையில் நேற்று பேசிய ஆதித்யநாத்தோ, கேரள மாநிலத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் இரண்டு தரப்பையுமே கண்டித்தார். லவ் ஜிகாத் சட்டம் கொண்டுவராமல், இடதுசாரி ஜனநாயக முன்னணியும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மக்களை ஏமாற்றிவிட்டன என்றார் அவர்.

வாக்கு வங்கி அரசியலுக்காக சில அமைப்புகள்மீது நடவடிக்கை எடுப்பதில் இரு தரப்புமே தோற்றுப் போய்விட்டன என்றவர், அடுத்து சொன்னது, கொஞ்சம் ஓவர் ரகம்!

ஐநா அவையின் உலக சுகாதார அமைப்பாலேயே கேரளத்தின் கொரோனா சிகிச்சை, கட்டுப்படுத்தல் முறைமை குறிப்பிட்டுப் பாராட்டப்பட்டது; ஆனாலும் கொரோனாவைக் கையாள்வதில் கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்று ஆதித்யநாத் கூறினார்.

அடுத்தும் அவர் சொன்னது, அடடே ரக முத்து!

மாறிமாறி கேரளத்தில் ஆட்சிக்கு வந்துகொண்டிருக்கும் இரண்டு முன்னணிகளும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் எந்த முனைப்பும் காட்டவில்லை என்பது அவர் வைத்த குற்றச்சாட்டு.

(நிற்க... கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பியபோது, அவர்களில் அதிகமானவர்கள் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்பது வாசகர்களுக்கு இந்த இடத்தில் நினைவு வந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல.)

இதையும் தாண்டி, பாஜகவை ஆளும் கட்சியாக்கினால் இன்னின்ன செய்துவிடுவோம் என்றும் போட்டிக் கட்சிகள் இரண்டும் எவ்வளவெல்லாம் மோசம் என்றும் ஆதித்யநாத் பேசினார்.

*

ஓட்டர் டேட்டா... காங். தலைவர் மீது பகீர் புகார்!

கேரள மாநிலத்தில் போலியான வாக்காளர் அட்டைகளைத் தயாரித்து மோசடி செய்யப்பட்டுள்ளதாக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தொடர்ச்சியாக தகவல்களையும் ஆதாரங்களையும் வெளியிட்டுவருகிறார். நீதிமன்றம்வரை விவகாரம் போயிருக்கிறது. மாநிலத்தில் 4.3 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பல முறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களின் பெயர்ப் பட்டியலையும் சென்னிதாலா வெளியிட்டது, தேர்தல் நெருங்கும் சமயத்தில் பரபரப்பை உண்டாக்கியது.

இதுவரை இதற்குப் பட்டும்படாமலும் பதில்கூறிவந்த ஆளும் இடது ஜனநாயக முன்னணி தரப்பு, நேற்று குமுறி வெடித்துவிட்டது. சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, சென்னிதாலா கேரளத்து வாக்காளர்களின் டேட்டாவை சிங்கப்பூரை மையமாகக் கொண்ட ஒரு அந்நிய நிறுவனத்துக்கு கசியவிட்டுள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆப்பரேசன்ஸ்ட்வின்ஸ்.காம் எனும் இணையதளத்தின் மூலம் டேட்டாவை சென்னிதாலா வெளியிட்டிருக்கிறார். வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்கள்கூட அந்தத் தளத்தில் வெளியிடப்பட்டு, அலசப்பட்டுள்ளன. வாக்காளர்களின் படங்கள் உள்பட்ட தனிப்பட்ட விவரங்களை அந்நிய நிறுவனத்துக்குப் பகிர்ந்துகொண்டதில் முக்கியமான சில பிரச்சினைகள் உள்ளன. அப்படி தருவதற்கு முன்னர் அந்தந்த தனிநபர்களின் ஒப்புதலை சென்னிதாலா பெற்றிருந்தாரா? இதில் அப்பட்டமான சட்டமீறல் நடந்திருக்கிறது. அரசாங்கமும் சட்ட வல்லுநர்களும் இதில் தலையிட வேண்டும். மோசடியான வாக்காளர் பட்டியல் தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்“ என்று எம்.ஏ.பேபி கூறினார்.

ஆளும்கட்சியின் பங்கு இதில் இருப்பதாக சென்னிதாலா கூறுவதைப் பற்றிக் கேட்டதற்கு, வாக்காளர் பட்டியலில் மோசடி செய்வதில் காங்கிரஸ் கட்சிக்கு நெடிய வரலாறே இருக்கிறது என்றார், பதிலடியாக.

- இளமுருகு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

வெள்ளி 2 ஏப் 2021