மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

காசியில் காமராஜருக்கு சிலை- யோகி, மோடியிடம் கோரிக்கை!

காசியில் காமராஜருக்கு சிலை-  யோகி, மோடியிடம் கோரிக்கை!

தமிழகத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம், ‘காசியில் காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டும்’என்ற கோரிக்கை தமிழக பாஜக சார்பில் வைக்கப்பட்டிருக்கிறது.

பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சருமான யோகி ஆதித்யநாத் மார்ச் 31 ஆம் தேதி தமிழகம் வந்தார். கோவை உள்ளிட்ட இடங்களில் தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டிப் பிரச்சாரம் செய்தார்.

இந்த நிலையில் தமிழகம் வந்த யோகியிடம் தமிழக பாஜகவின் கலை இலக்கியப் பிரிவின் தலைவரான காயத்ரி ரகுராம் முக்கியமான சில கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார். இதுகுறித்து ஒரு மனுவையும் அவர் யோகியின் கையில் அளித்துள்ளார்.

அம்மனுவில், “இந்துக்களின் புனிததலமாக காசி கருதப்படுகிறது. தென் கோடியில் எப்படி ராமேஸ்வரம் புனிதத் தலமாக இருக்கிறதோ, அதுபோல வட இந்தியாவின் காசியும் மிக முக்கியமான புண்ணியஸ்தலமாக இருக்கிறது. இந்த இரு தலங்களையும் இணைக்கும் வகையில் மதுரைக்கும் காசிக்கும் இடையே வாராந்திர நேரடி விமான சேவையை தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று குறிப்பிட்டுள்ள காயத்ரி ரகுராம் இன்னொரு முக்கியமான கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளார்.

“பெருந்தலைவர் காமராஜர் இந்திய அளவில் மிகப்பெரிய தலைவர். இந்திய அரசியலில் நெருக்கடியான காலகட்டத்தில் பிரதமர்களை உருவாக்கியவர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அர்சியல் அமைப்பு சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டுவந்தவர். இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் முக்கியமான தலைவர் காமராஜர். தமிழகத்தில் நாடார் சமுதாயத்தைப் போன்றே இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் பனையேறும் சமுதாயங்களான ஜெய்ஸ்வால், பண்டாரி, அலுவாலியா போன்ற சமுதாயங்களுக்கு பாஜக முக்கியத்துவம் அளிக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் பாஜக மேயர்கள் பலர் ஜெய்ஸ்வால் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கும் தாங்கள், உத்திரப்பிரதேசத்தின் காசி நகரில் காமராஜருக்கு சிலை அமைத்திட வேண்டும். அதற்காக ஆவண செய்ய வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார் காயத்ரி. மேலும் இதே கோரிக்கையை இன்று (ஏப்ரல் 2) பிரதமரிடமும் கொடுக்கிறார். பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதி காசி என்பது குறிப்பிடத் தக்கது.

காமராஜர் ஆட்சி என்ற முழக்கத்தை இந்த தேர்தலுக்குப் பிறகே எழுப்புவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஏற்கனவே கூறியிருக்கும் நிலையில், தமிழக பாஜகவில் இருந்து காசியில் காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது

-வேந்தன்

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

வெள்ளி 2 ஏப் 2021