மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

ஸ்டாலின் மாப்பிள்ளை சபரீசன் வீட்டில் ரெய்டு- பின்னணி என்ன?

ஸ்டாலின் மாப்பிள்ளை சபரீசன் வீட்டில் ரெய்டு- பின்னணி என்ன?

கடந்த மார்ச் 25 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலையில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது, திமுக முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான எ.வ. வேலுவின் கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அப்போது ஸ்டாலின் தங்கியிருந்த அறையிலும் சோதனை நடத்தப்பட்டது.

சரியாக ஒரு வாரம் கழித்து இன்று (ஏப்ரல் 2) காலை முதல் சென்னை நீலாங்கரையில் இருக்கும் ஸ்டாலின் மாப்பிள்ளை சபரீசன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சபரீசனின் நண்பர்களான சென்னை அண்ணாநகர் திமுக எம்.எல்.ஏ. மோகனின் மகன் கார்த்திக் மோகன், பாலா ஆகியோரது வீடுகள், அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுகவின் வேட்பாளர்கள் பலருக்கும் அவர்களது செலவுக்குத் தேவையான பணம் ஏற்கனவே ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சேர்ந்துவிட்டது. திமுக சார்பில் அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு தலா 3 கோடி ரூபாய் தலைமையால் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மீத செலவுகளை வேட்பாளர்களே பார்த்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளதாகவும் திமுக வட்டாரங்களில் தகவல்கள் கிடைத்தன.

இந்த நிலையில்தான் திமுகவின் நிதி மையமாக வர்ணிக்கப்படும் எ.வ. வேலு தொடர்பான இடங்களில் கடந்த 25 ஆம் தேதி ரெய்டு நடந்தது. இரு நாட்கள் நடந்த அந்த ரெய்டில் ஐடி எதிர்பார்த்து வந்தது கிடைக்கவில்லை என்றே சொல்லப்பட்டது. வேலு தொடர்பான இடங்களில் ரெய்டு நடத்தியபோதே வருமான வரித்துறை அதிகாரிகளின் ஃபைலில் சபரீசன் அவரது நண்பர்கள் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது.

திமுக தலைவர் ஸ்டாலினின் மாப்பிள்ளையான சபரீசன் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் தேர்தல் செலவு தொடர்பான விஷயங்களிலும் சபரீசன் முக்கியப் பங்கு வகிக்கிறார் என்று அதிமுக உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்தும், அதிமுக, பாஜக ஆதரவு தொழிலதிபர்கள் சிலரிடமிருந்தும் வருமான வரித்துறைக்குத் தொடர்ந்து புகார்கள் சென்று கொண்டிருந்தன.

இந்த புகார்களின் எதிரொலியாகத்தான் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் இன்று (ஏப்ரல் 2) காலை முதல் சென்னை நீலாங்கரையில் இருக்கும் சபரீசனின் வீடு, அண்ணாநகர் மோகன் மகன் கார்த்திக் வீடு, ஜீ ஸ்கொயர் பாலா ஆகியோரைக் குறிவைத்து 8 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மோகன் கார்த்திக் திமுக ஐடி விங்கின் துணைச் செயலாளராக‌ இருக்கிறார். அதேபோல ஜீ ஸ்கொயர் பாலா கொங்கு மண்டலத்துக்கான திமுக வேட்பாளர்களின் செலவு விவகாரங்களை கவனித்து வருவதாக வருமான வரித்துறையினருக்கு தகவல்கள் சென்றுள்ளன. இதன் அடிப்படையில்தான் இன்று சபரீசன் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை தொடங்கியிருக்கிறது.

தன் வீட்டுக்கு ஐடி ரெய்டு வரும் என்று சபரீசன் எதிர்பார்க்கவில்லை. பிரச்சாரப் பயணங்களுக்கு இடையில் ஸ்டாலின் ஓய்வெடுப்பது நீலாங்கரையில் இருக்கும் சபரீசன் வீட்டில்தான். இந்நிலையில் சபரீசனின் வீட்டில் சோதனை நடத்தப்படுவது என்பது கிட்டத்தட்ட ஸ்டாலின் வீட்டில் சோதனை நடத்தப்படுவது போலத்தான் என்பதால் திமுகவினரும் திமுக கூட்டணியினரும் டென்ஷனில் இருக்கிறார்கள்.

-வேந்தன்

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

வெள்ளி 2 ஏப் 2021