மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

எய்ம்ஸ் எப்போது வரும்? மதுரையில் மோடி பேச்சு

எய்ம்ஸ் எப்போது வரும்? மதுரையில் மோடி பேச்சு

வெற்றி வெற்றி வெற்றிவேல், வீர வீர வீரவேல் என்ற முழக்கத்துடன் தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் துவக்கிய பிரதமர் மோடி மதுரையை வன்முறை நகரமாக உருவாக்கியவர்கள் திமுகவினர் என பேசினார்.

மதுரை சுற்றுச்சாலையில் சிவகங்கை சாலை - பாண்டி கோயில் சந்திப்பு அருகே அம்மா திடலில் இன்று (ஏப்ரல் 2) காலை 11.30 மணிக்குத் தொடங்கிய பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “இந்த தேர்தல், வாக்குறுதிகளை நிறைவேற்றும் அதிமுக வேண்டும்; திமுக வேண்டாம் எனக்கூறும் தேர்தல். நீர் நிலைகளை குடிமராமத்து செய்யும் நல்லாட்சி அதிமுக வேண்டும். நில அபகரிப்பு செய்யும் திமுக வேண்டவே வேண்டாம் எனக்கூறும் தேர்தல்தான் இது.

திமுகவை மக்கள் கைவிட்டுவிட்டார்கள். காங்கிரசை கைகழுவிவிட்டார்கள். தமிழகத்திற்கு பிரதமர் ஏராளமான நன்மைகளையும் கோடிக்கணக்கான திட்டங்களை அறிவித்து உள்ளார். தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் அமைய அனுமதி கொடுத்தவர் பிரதமர். 1500 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர அனுமதி புரிந்தவர் மோடி. தமிழக மக்கள், திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிமுக ஆட்சியில் இந்தியாவில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. நமது தலைமுறையினர் நன்றாக இருக்க அதிமுக அரசு அமைய வேண்டும்”என்று குறிப்பிட்டார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பேசும்போது,

“அதிமுக கூட்டணி வலிமையான வெற்றி கூட்டணி. தமிழகம் வளர்ச்சி பெற மத்திய அரசு பல்வேறு வகையில் உதவி செய்கிறது. இந்தியாவிற்கு கொரோனா தடுப்பூசியை விரைவில் வழங்கிய பெருமை பிரதமரையே சேரும். வல்லரசு நாடுகள், கொரோனா வைரசை தடுக்க தடுப்பூசியை கண்டறியாத சூழ்நிலையில், பிரதமரின் கடும் உழைப்பால், ஊக்கத்தால், விஞ்ஞானிகள் கடும் முயற்சியில், ஒரே ஆண்டில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படுவதை பிரதமர் நிரூபித்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முதன்மையாக பணியாற்றினார்.

தமிழகத்திற்கு நிதி, திட்டங்கள் கிடைக்கிறது. நமது வாக்குறுதிகள் நிறைவேற்ற, மத்திய அரசு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதே காரணம். தமிழகத்தை தொழில்வளம் மிக்க மாநிலமாக ஜெயலலிதா அடித்தளம் அமைத்தார். அதேவழியில் அதிமுக அரசு செயல்படுகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகள் அமைக்க ஏராளமான சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. மக்களுக்கு நன்மை செய்யும் அரசு மத்தியிலும் மாநிலத்திலும் செயல்படுகிறது.

திமுக வை கட்சி என கூறுவதைவிட கார்ப்பரேட் கம்பெனி எனக்கூறலாம். இங்கு நீக்கப்பட்டவர்கள், கம்பெனியில் சேர்ந்து தேர்தலில் நிற்கின்றார்கள். திமுக கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி. மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி அல்ல. அதிமுக மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி. மக்களுக்கு உழைக்கும் கட்சி”என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தொடர்ந்து வெற்றிவேல், வீர வீர வீரவேல் என்ற முழக்கத்துடன் தனது உரையைத் தொடங்கினார் மோடி.

"மதுரை மக்களே நீங்கள் எல்லாம் நல்லா இருக்கீங்களா? மதுரை வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி" என்று தமிழில் தனது பேச்சைத் தொடங்கினார் பிரதமர் மோடி.

மேலும், “தமிழ் பண்பாட்டின் முக்கிய மையமாக விளங்குகிறது மதுரை. புண்ணிய பூமியாகவும் வீர பூமியாகவும் விளங்குகிறது. மீனாட்சியம்மன் கோயில் அமைந்திருக்கும் மதுரை மண்ணுக்கு வந்தது என் பாக்கியம் என்றே கருதுகிறேன்.

தென் தமிழகம் குறிப்பாக மதுரை, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான பகுதி. மதுரை வீரன் என்ற பெயரில் எம்ஜிஆர் நடித்த திரைப்படத்தை யாரால் மறக்க முடியும்?

நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மதுரை - கொல்லம் போக்குவரத்து வழித்தடம் மேம்படுத்தப்பட உள்ளது. அதன்பிறகு, தென் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி பெறும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்திலிருந்து ஏராளமான சௌராஷ்டிர மக்கள் மதுரைக்கு வந்து குடியேறினர். சௌராஷ்டிர மக்களை மதுரை மக்கள் ஏற்றுக் கொண்டது ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு அடையாளம். நாடு மழுவதும் அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ.100 லட்சம் கோடியை செலவிட உள்ளது .

உலகத்தின் தொன்மை மொழியான தமிழை, சங்கம் வைத்து வளர்த்த மதுரையில் தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது. சாலை போக்குவரத்து, ரயில்வே கட்டுமானம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து கிராமங்களுக்கும் இணையதள சேவை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்க திட்டமிட்டுள்ளோம் -

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது காங்கிரஸ், திமுக ஆட்சி காலத்தில்தான். ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டி விளையாட்டு என கூறியது காங்கிரஸ் என்பதை மறந்துவிடமுடியாது. ஜல்லிக்கட்டு மறுபடியும் நடைபெற நடவடிக்கை எடுத்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான்.

காங்கிரஸ் - திமுக பல வருடங்கள் ஆட்சியிலிருந்த போதிலும் மதுரையில் எய்ம்ஸ் துவங்க நினைத்து பார்க்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை உரிய காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன் .

கண்ணகி, ராணி மங்கம்மாள், ராணி வேலுநாச்சியார் வாழ்ந்த பூமி இந்த மதுரை மண்.இந்த மண்ணில் வளர்ந்த திமுகவினர் பெண்களை திரும்ப திரும்ப இழிவுபடுத்துகின்றனர். மதுரையை வன்முறை நகரமாக உருவாக்கியவர்கள் திமுகவினர்” என பேசினார் பிரதமர் மோடி.

மதுரையில் இன்று பிரச்சாரத்தை முடித்த மோடி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க கேரள மாநிலம் பத்தினம்திட்டாவுக்கு ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

-சக்தி பரமசிவன்

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

வெள்ளி 2 ஏப் 2021