மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

அண்ணா சிலைக்கு தீ:தலைவர்கள் கண்டனம்!

அண்ணா சிலைக்கு தீ:தலைவர்கள் கண்டனம்!

கள்ளக்குறிச்சி அருகே பேரறிஞர் அண்ணா சிலைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிப்பது, காவிசாயம் பூசுவது, தீ வைப்பது, குல்லா அணிவிப்பது உள்ளிட்ட பல அவமதிப்பு செயல்கள் நடந்து வந்த நிலையில், தற்போது அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி என்ற கிராமத்தில் பேரறிஞர் அண்ணா சிலை உள்ளது. இது, 1978 ஆம் ஆண்டு முன்னாள் எம்எல்ஏ எஸ்பி.பச்சையப்பன் தலைமையில் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட சிலை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காரணத்தால், அண்ணா சிலை துணியால் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் நேற்று(ஏப்ரல் 1) சிலைக்கு தீ வைத்துள்ளனர்.

தீ வைக்கப்பட்டதால் கருகி சேதமடைந்திருந்த சிலையை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கச்சராபாளையம் காவல்துறையினர் சிலையைப் பார்வையிட்டுத் தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்திற்கு, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

’தமிழ்நாடு’ என்று இந்த மாநிலத்திற்கு பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு தீ வைத்து கொளுத்தியது கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், ”தமிழகத்தை வன்முறைக்காடாக்க நினைப்பவர்களை மக்கள் தண்டிப்பர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சிலைகள் மட்டுமின்றி அதிமுகவின் நிறுவனரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிலைகளும் சிதைக்கப்படுகின்றன. இத்தகைய வன்முறைப் போக்கை ஒடுக்க தைரியமின்றி, எதிர்க்கட்சிகளை வக்கணை பேசிக் கொண்டிருக்கும் முதல்வர் உள்ளிட்டவர்களின் போக்கு வெட்கக்கேடானது” என்று தெரிவித்துள்ளார்.

”தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா சிலைகளை அவமதிக்கும் போக்கு தொடர்வதற்கு சனாதனக் கும்பல்களின் தூண்டுதலே காரணமாகும்” என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

”அமைதிப் பூங்காவாக உள்ள தமிழ்நாட்டில், நச்சு விதைகளைத் தூவி, தேர்தலில் அறுவடை பெற்றுவிடலாம் என்ற மதவாத சனாதனக் கூட்டத்தின் முயற்சி தவிடுபொடியாகும். திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள வன்முறைகளை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் தக்க பதிலடியைத் தருவார்கள்.

இத்தகைய நாசகார கூட்டத்திற்கு துணை நிற்பவர்களையும் தமிழக மக்கள் முற்றாகத் துடைத்து எறிவார்கள். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அதைக் காட்டும் “ என தெரிவித்துள்ளார்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் “ அண்ணா சிலையை தீ வைத்து கொளுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

பேரறிஞர் அண்ணா சிலைக்கு தீ வைத்த விஷமிகளை, போலீசார் விரைந்து கண்டறிந்து அவர்கள் தகுந்த தண்டனை பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வினிதா

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

வெள்ளி 2 ஏப் 2021