மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

தாமரையிலைத் தண்ணீர் ஆகுதா தாமரை - இலை கட்சிகள் கூட்டு?

தாமரையிலைத் தண்ணீர் ஆகுதா   தாமரை - இலை கட்சிகள் கூட்டு?

தமிழகத்தில் பிரச்சாரம் உச்சகட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்க, பக்கத்திலுள்ள புதுச்சேரியிலோ பிரச்சாரம் ஒரு பக்கத்தில் உற்சாகமின்றி காணப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜகவை உள்ளடக்கிய புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணியில், கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்துவருகின்றன.

புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த பாமக பின்னர் அதை வாபஸ் வாங்கிக்கொண்டது. பாஜக 9 இடங்களிலும் அதிமுக 5 இடங்களிலும் என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சியின் தலைவர் ரங்கசாமி பிரச்சாரம் செய்துவருகிறார். கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய அவர் செல்லவில்லை.

இதேபோல பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரண்டு நாள்களுக்கு முன்னர், புதுச்சேரிக்கு வந்து, நிக்சன் போட்டியிடும் நெல்லித்தோப்பு தொகுதியிலும் ஜான்குமார் போட்டியிடும் காமராஜர் நகரிலும் மட்டும் பிரச்சாரம் செய்துவிட்டு திரும்பினார்.

நேற்று ஏப்ரல் 1ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுவைக்கு வந்தார். காலாப்பட்டு தொகுதியில் பாஜக வேட்பாளர் கல்யாணசுந்தரம், லாஸ்பேட்டை தொகுதியில் புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் இருவரையும் ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்துவிட்டு, தமிழகத்துக்குத் திரும்பினார்.

இப்படி பாஜக தொகுதிகளில் அந்தக் கட்சிகளின் தலைவர்களும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை மட்டும் ஆதரித்து ரங்கசாமியும் பிரச்சாரம் செய்துவருகின்றனர். அதிமுக போட்டியிடும் ஐந்து தொகுதிகளில் தமிழக அதிமுகவின் தலைவர்கள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என சோகமோ சோகத்தில் இருக்கிறார்கள், புதுவை அதிமுக வேட்பாளர்கள்.

கூட்டணி கட்சிகளுக்காக ரங்கசாமி ஏன் பிரச்சாரம் செய்யவில்லை என்று அவர் தரப்பில் விசாரித்தோம்.

"இதுவரை ரங்கசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என பாஜக அறிவிக்கவில்லை. இரண்டு நாள்களுக்கு முன்னர், ரங்கசாமிக்கு நெருக்கமான- அவருக்கு நிதியுதவி செய்யக்கூடிய ஆறு தொழிலதிபர்களின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இதனால் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, நம்மையே அச்சுறுத்தப் பார்க்கிறார்களா என கடுமையான கோபத்தில் இருக்கிறார்" என்கிறார்கள்.

எதிரணியான காங்கிரஸ்-திமுக கூட்டணியிலோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இ.கம்யூ.(மார்க்சிஸ்ட்), விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் அனைத்து வேட்பாளர்களையும் ஆதரித்து கூட்டணி தலைவர்கள் பிரச்சாரம் செய்துவருகின்றனர். இதனால் அந்த அணியின் கை ஓங்கிவருகிறது என்கிறார்கள், புதுவை அரசியல்நோக்கர்கள்.

- வணங்காமுடி

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

வெள்ளி 2 ஏப் 2021