மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

பகுதி 2 : தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

பகுதி 2 : தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

கடந்த பகுதி தமிழகம் சந்தித்த முரண், பார்ப்பனிய - ஏகாதிபத்திய முரண் எப்படி தமிழகத்துக்குச் சாதகமாக இருந்தது, தமிழகம் தனது முரணை எப்படி எதிர்கொண்டு முன்னேறியது என்பதைச் சுருக்கமாகப் பேசியது. இந்தப் பகுதி புதிய உற்பத்தி தொழில்நுட்ப வளர்ச்சி, அதன் சந்தைக்கான போட்டி, அதன் நீட்சியில் உருவான உலக முரண்பாடு, அது இந்தியாவில் ஏற்படுத்திய மாற்றம், அதனால் தமிழகம் சந்திக்கும் ஒன்றியத்துடனான முரணை பேசுகிறது.

தற்போது பொருட்களைச் சந்தைப்படுத்தி விற்பனையைப் பெருக்கும் இணையத்தை ஆதார மையமாகக் கொண்ட 5ஜி, செயற்கை நுண்ணறிவு (AI), Cloud Computing, மின்னணு நாணயம் போன்ற சேவைத்துறை சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள், உலக அரசியல் பொருளாதாரச் சூழலை மாற்றி அமைத்து வருகின்றன. இந்தப் புதிய முறை உற்பத்தி, சந்தைப்படுத்துதல், விற்பனை என அனைத்தையும் இணையம் என்ற ஒற்றைப் புள்ளியில் மையப்படுத்துகிறது. அது உற்பத்தி பெருக்கத்தில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் அதேவேளை எதிர்மறை விளைவுகளையும் கொண்டிருக்கிறது.

புதிய உற்பத்தி தொழில்நுட்பத்தின் இயல்புகள்

1. இதுவரையிலும் பொருட்களை இடம்சார்ந்த சந்தைப்படுத்துதலில் இருந்த எல்லைகளை உடைத்து எல்லா மூலைமுடுக்குகளுக்கும் இணையம்வழி கொண்டு செல்வதால் பொருட்களின் விற்பனை அதிகரிக்கிறது. அது தேவையைப் பெருக்கி உற்பத்தி பெருக்கத்துக்கு வித்திடுகிறது. அது பொருட்களின் விலையை மேலும் குறைத்து எல்லோரும் நுகரும் வாய்ப்பை வழங்குகிறது.

2. இணையமும் இந்தத் தொழில்நுட்பங்களும் ஒருவரிடம் மட்டும் இருப்பதால் இது போட்டியற்ற முற்றுருமை சூழலை உருவாக்குகிறது. உற்பத்தியாளர்களையும், வாடிக்கையாளர்களையும் கண்காணித்து, கட்டுப்படுத்த வழிவகை செய்கிறது. மொத்த பொருளாதாரமும் தனது கருணையில் வாழும் சூழலை ஏற்படுத்தி, தனது அசுர பலத்தின் மூலம் பெரு லாபம் ஈட்ட வழி செய்கிறது. பலரும் பங்கேற்கும் வாய்ப்பை மறுத்து சிலர் மட்டும் பங்கு பற்றி பலனடையும் ஒன்றாக உற்பத்தியைச் சிறிய வட்டத்துக்குள் சுருக்குகிறது. உற்பத்தி பெருக்க சங்கிலித்தொடர் நிகழ்வைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும் தடைக்கல்லாக மாறிவிடுகிறது.

3. பொருளாதாரத்தில் நிலவும் பன்மையை ஒருமையாக்கும்போது அதற்கு எதிரான எதிர்ப்புகள் எழுவதும் தனது முற்றுருமையை நிலைநாட்ட அரசைக் கொண்டு அதை ஒடுக்குவதும் தவிர்க்க இயலாத ஒன்றாகிப் போகிறது. இணையத்தை மையமாகக்கொண்ட பொருளாதார, சமூக செயல்பாடுகள் இந்த ஒடுக்குமுறையை எளிதாக்குகிறது. அது அரசியலில் எதேச்சதிகாரத்தையும் சர்வாதிகாரத்தையும் உருவாக்குவதில் முடிகிறது. சுருக்கமாக, பொருளாதார முற்றுருமைக்கும் அரசியல் சர்வாதிகாரத்துக்கும் இது சாதகமான ஒன்றாக இருக்கிறது.

அமெரிக்க - சீனப் போட்டி

இதுவரையிலும் இதுபோன்ற உற்பத்தி பெருக்க தொழில்நுட்பங்களில் அமெரிக்காவே முன்னிலை வகித்து வந்தது. மற்ற ஐரோப்பிய - ஆசிய நாடுகளில் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டாலும் தனது அரசியல் – பொருளாதார - ராணுவ வலிமையின் காரணமாக தமது கட்டுப்பாட்டிலும் தனது நலனுக்கேற்ப மாற்றி அமைப்பதிலும் வெற்றி கண்டு வந்தது. தற்போது அமெரிக்காவுக்கு இணையாக இந்தத் தொழில்நுட்பங்களில் சீனா வளர்ந்திருக்கிறது. 5ஜி இணையத் தொழில்நுட்பம், இணைய மின்னணு சாதனங்கள் இயங்க உதவும் மின்கலங்கள் (Batteries), மின்னணு நாணய தொழில்நுட்பங்களில் அது அமெரிக்காவை விஞ்சி நிற்கிறது.

இரு நாடுகளுமே இந்தத் தொழில்நுட்பங்களைத் தமது நாடுகளில் செயல்படுத்தி மின்னணு பொருளாதார முறையாக வளர்த்தெடுத்துள்ள நிலையில் மற்ற நாடுகளுக்கு இந்த முறையை விரிவாக்க முயன்று வருகின்றன. இரு நாடுகளும் தமது Cloud Computing தொழில்நுட்பத்தில் உருவான இணைய வர்த்தகத் தளங்களையும் (Digital Platforms) இதன்மூலம் குவியும் மின்னணு பொருளாதாரத்தின் எரிபொருளான(Fuel) தரவுகளை (Datas) பகுத்தாய்ந்து அதிகம் விற்பனையாகும் பொருட்களை, விற்பனையாகும் பகுதிகளை, வாங்கும் நபர்களைக் கண்டறிந்து அந்தப் பொருளை அதிகம் உற்பத்தி செய்து லாபம் பெரும் வகையில் முதலீடு செய்யவும் பயன்படும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தையும் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயன்று வருகின்றன. இது இயல்பாக இரு நாடுகளுக்கும் இடையில் போட்டியை உருவாக்கி இருக்கிறது.

அமெரிக்கா பலகீனமடைதலும் சீனா பலமடைதலும்...

இந்த முறைக்கான முக்கிய தேவை இணையப் பரவலாக்கமும் மக்களிடம் பரந்துபட்ட அளவில் இணைய மின்னணு சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பதும். இணைய சாதனங்களின் உருவாக்கத்துக்கான அடிப்படை அலகான சில்லுகளின் (Chip) உற்பத்தி தொழில்நுட்பத்தில் அமெரிக்கா முன்னணி வகிப்பது மட்டுமல்ல, கிட்டதட்ட முற்றுருமையைக் கொண்டிருக்கிறது. 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு சீன நிறுவனங்கள் வெறுமனே அமெரிக்க நிறுவனங்களுக்கு இணைய சாதனங்களை உற்பத்தி செய்து கொடுப்பது என்ற நிலையில் இருந்து தாங்களே திறன்பேசிகளை உற்பத்தி செய்து முதலில் சீனாவிலும் அதன் வளர்ச்சி போக்கில் உலகம் முழுவதும் சந்தைப்படுத்த தயாராகின. ஆனால், அது உலக சந்தையைக் கட்டுக்குள் வைத்திருந்த அமெரிக்காவின் அனுமதியின்றி அது சாத்தியமில்லை.

இராக், ஆப்கானிஸ்தான் போர்களைத் தொடர்ந்து ஏற்பட்ட 2008 பொருளாதார வீழ்ச்சி அமெரிக்கப் பொருளாதாரத்தை நலிவடைய வைத்தது. அதை மீட்டெடுக்க பெருமளவில் கடன்வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. டாலரைப் பெருமளவில் அச்சிட்டு அதனால் உருவாகும் பணவீக்கத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன்மூலம் தனது நெருக்கடியைத் தீர்த்துக்கொள்ள முயன்றது. கடன்கொடுக்கும் நாடுகள் மற்றும் டாலரை இருப்பாக வைத்திருக்கும் நாடுகளின் இசைவின்றி இது சாத்தியமில்லை. 2008 செப்டம்பரில் 618 பில்லியன் டாலராக இருந்த சீனாவின் அமெரிக்கக் கடன் பத்திரத்தின் கையிருப்பு 2015க்குள் இருமடங்கானதும் (1.269 ட்ரில்லியன்) சீனாவின் இணையத் தொழில்நுட்ப சாதனங்கள் உலகம் முழுக்க சந்தைப்படுத்தப்பட்டு இதேகாலத்தில் சீனாவின் ஜிடிபி 4.59 ட்ரில்லியன் டாலரில் இருந்து 11 ட்ரில்லியனாக உயர்ந்ததும் தற்செயலானது அல்ல.

ஒரு துருவ உலக ஒழுங்கு கேள்விக்குள்ளாகிறது

இந்த இணைய சாதனங்களின் சந்தையை சீனா பெருமளவு கைப்பற்றினாலும் அவற்றின் உற்பத்திக்கு அடிப்படையான சில்லுகளுக்கு அமெரிக்காவை நம்பியே இருக்கிறது. ஆனால், இணைய வர்த்தகத் தொழில்நுட்பங்களைப் பொறுத்தவரையில் சீனா தற்சார்புடன் திகழ்கிறது. இணைய மின்னணு சாதனங்களின் சந்தையைப் பெருமளவு பிடித்திருக்கும் சீன நிறுவனங்கள் வேகமான இணையத்தை வழங்கும் 5ஜி சந்தையையும் பிடிக்கும்போது அமெரிக்க நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி அதன் மேலாண்மையை கேள்விக்குட்படுத்தும். வளர்ச்சிப்போக்கில் அமெரிக்காவின் தலைமையிலான ஒற்றைத்துருவ உலக ஒருங்கமைப்பை (Unipolar World Order) அரசியல் பொருளாதார பிராந்திய வலிமையின் அடிப்படையில் பல நாடுகளும் தலைமை ஏற்கும் பல்துருவ உலக ஒருங்கமைப்பாக (Multipolar World Order) மாற்றும்.

இதைத் தடுத்து தனது மேலாண்மையை நிலைநிறுத்தி தனது நலனுக்கு ஏற்றவகையில் சீனாவைச் செயல்பட வைக்க முயலும் அமெரிக்காவின் முயற்சியும் அதற்கு எதிரான சீனாவின் பதிலடிகளும் முதலில் வர்த்தகப் போராகவும் பின்பு தொழில்நுட்பப் போராகவும் மாற்றம் கண்டது. அது 5ஜி தொழில்நுட்பத்தை வைத்திருக்கும் ஹுவாவெய் நிறுவனத்தை சந்தைப்படுத்த விடாமல் தடுப்பது, சீன நிறுவனங்களின் சில்லுகளுக்கான அமெரிக்க சார்பை ஆயுதமாக்கி அந்த நிறுவனங்களை முடக்கி சந்தையில் இருந்து வெளியேற்றுவது, அந்த நிறுவன அதிபரின் மகளை கைது செய்து மிரட்டி பணியவைப்பது எனச் செயல்வடிவம் கண்டது.

ஒருதுருவத்துக்கும் பல்துருவத்துக்குமான முரண்பாடு

உலக நாடுகளைப் பொறுத்தவரையில் இவ்விரு நாடுகளுக்கு இடையிலான போட்டி நாடுகளின் முன்னேற்றத்துக்கு ஆரோக்கியமானதும் பெரிதும் பலனளிக்கக் கூடியதும் ஆகும். இது நாடுகளின் சார்புத்தன்மையைக் குறைத்து அவர்களின் மூலப்பொருட்கள், சந்தை, இருப்பிடம், மனிதவளத்தைப் பொறுத்து பேரவலிமையைக் கூட்டி இந்தத் தொழில்நுட்பத்தை மலிவாக்கி அதன் பரவலாக்கத்துக்கு வழிவகுத்து தற்சார்புடனும் இறையாண்மையுடனும் வாழ உதவும். அதுமட்டுமல்ல உலகின் முதல் இரண்டு பெரிய பொருளாதாரங்களில் ஒன்றைத் தேர்வு செய்வது பேரவலிமையைக் குறைத்து ஏற்றுமதி சந்தை வாய்ப்புகளைக் குறைக்கும். ஆகவே பெரும்பாலான நாடுகள் நடுநிலை வகித்து வருகின்றன.

ஆனால், அமெரிக்காவின் சந்தை முற்றுருமையை உடைத்து அதன் மேலாதிக்கத்தைக் கேள்விக்குட்படுத்துவதால் அது நாடுகளின் மீது அரசியல் பொருளாதார அழுத்தங்கள் கொடுத்து ஹுவாவெயின் 5ஜி தொழில்நுட்பத்தை அனுமதிக்க விடாமல் தடுத்து வருகிறது. தொழில்நுட்ப பரவலாக்கத்தைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறது. சீனாவைப் பொறுத்தவரை இந்த சந்தைக்கான தடையை உடைத்துக் குறிப்பிட்ட அளவு சந்தையைப் பிடிக்கும் முனைப்புடன் அரசியல் செய்து வருகிறது. ஐரோப்பாவில் ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளும், கிழக்கு ஐரோப்பா மத்தியாசிய பகுதிகளில் ரஷ்யாவும், மேற்கு ஆசியாவில்

துருக்கி, சவுதி, இஸ்ரேல், இரான் ஆகிய நாடுகளும், கிழக்காசியாவில் ஜப்பான், சீன நாடுகளும், தெற்காசியாவில் இந்தியாவும் இந்தச் சூழலைப் பயன்படுத்தி தம்மை பிராந்திய பெரியண்ணன்களாகக் கட்டமைத்துக் கொள்ளும் போட்டியில் இறங்கி இருக்கின்றன. இது ஒற்றை துருவத்துக்கும் பல்துருவத்துக்கும் (Unipolar Vs. Multipolar) இடையிலான முரண்பாடாக மாறி நிற்கிறது. நடைமுறையில் தொழில்நுட்ப மேலாதிக்கம் வழியிலான செல்வ குவிப்புக்கும் தொழில்நுட்பப் பரவலாக்கம் வழியிலான செல்வ பங்கீடுக்கான சண்டையாக மாறி நிற்கிறது.

இந்தியாவின் தெரிவும் அதன் பிறகான மாற்றங்களும்

இந்தியாவைப் பொறுத்தவரை முதலில் மற்ற நாடுகளைப் போல நடுநிலை வகித்து தமது மிகப்பெரிய எண்ணெய், ஆயுதங்கள், மற்ற பொருட்களுக்கான சந்தை, மலிவான மனிதவளம், ஆப்பிரிக்க, மத்திய, கிழக்கு, ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உகந்த தீபகற்ப அமைவிடம், அமெரிக்காவின் போட்டியாளனான சீன கடல்வழி வர்த்தகப் பாதைக்கு (பாக் நீரிணை) அருகில் இருப்பது, சீனாவுடன் நேரடியாக எல்லையைப் பகிர்ந்துகொள்வது போன்ற பூகோள அரசியல் முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக இருக்கும் பேரவலிமையைப் பயன்படுத்தி பெருமளவு ஆதாயம் அடைவது என்ற நிலையை எடுத்தது.

ஆனால், இந்த நடுநிலை சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியாவை வைத்து சீனாவைக் கட்டுப்படுத்த நினைத்த, இந்தியச் சந்தையை முழுமையாக கட்டியாள துடித்த அமெரிக்காவுக்கு ஏற்புடையது அல்ல. அதேபோல அப்போதைய காங்கிரஸ் கட்சியின் படிப்படியான இந்தியச் சூழலுக்கு ஏற்ப முறைசாரா பொருளாதாரத்தை தனியார்மயமாக்கி முறைப்படுத்துவது என்ற மெதுவான செயல்முறையும் ஏற்கதக்கதாக இல்லை. விளைவு, முன்பு டைம் பத்திரிகையில் முன்பக்கத்தில் வைத்து கொண்டாடப்பட்ட மன்மோகன் மோசமான தலைமை அமைச்சராகச் சித்திரிக்கப்பட்டார்.

குஜராத் முதலமைச்சர் மோடி வளர்ச்சியின் கதாநாயகன் ஆக்கப்பட்டு டைம் பத்திரிகையிலும் இந்திய அரசியலிலும் முன்னணிக்குக் கொண்டு வரப்பட்டார். இந்திய அரசியல் பொருளாதாரம் தலைகீழ் மாற்றத்துக்குத் தயாராக்கப்பட்டது. 2016இல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது முதல் இந்தியாவில் நிலவிய அரைகுறை ஜனநாயக அரசியலும் முடித்து வைக்கப்பட்டு அதிரடி சர்வாதிகார அரசியலை நோக்கி நகர்ந்தது. தொண்ணூறுகளுக்குப் பின்பு ஏற்பட்ட தொழிற்துறை பொருளாதார பரவலாக்கம் வெட்டி குறுக்கப்பட்டு அதற்கு முந்தைய பார்ப்பனிய முற்றுருமைக்கும் ஒன்று குவித்தலுக்கும் திரும்பியது.

பார்ப்பனிய ஒருமுகத்துக்கும் பல்தேசிய இன பன்முகத்துக்குமான முரண்பாடு

மாநிலங்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு மொத்த அதிகாரமும் ஒன்றியத்தில் கொண்டுபோய் குவிக்கப்பட்டது. ஒரே நாடு ஒரே சந்தை ஒரே வரி என மாநிலங்களின் எல்லைகள் எந்த அரசியல் பொருளாதார அர்த்தமும் அற்ற ஒன்றாக மாற்றி அமைக்கப்பட்டது. மத சிறுபான்மையினர் இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமக்களாக முத்திரை குத்தி ஒடுக்கப்பட்டு, இந்து பெரும்பான்மை கருத்தியல் கட்டமைக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் வாழும் பல்தேசிய இனங்களின் மக்களின் மொழி, பண்பாட்டு, கலாச்சார அடையாளங்களை அழித்து பார்ப்பனிய ஒற்றை மொழி, பண்பாட்டு அடையாளங்கள் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த கல்வி, மருத்துவம், வேளாண்மை ஆகியவற்றை ஒன்றியத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்று வருகிறார்கள்.

இதுவரையிலும் இந்தியாவில் வாழும் பல்தேசிய இனமக்கள் அவரவர் அடையாளங்களுடன் வாழ ஒப்புக்கொள்ளப்பட்டு ஒன்றியமாக இணைந்திருந்த பன்முகம் கொண்ட இந்தியா, இந்து – இந்தி - இந்தியா என்ற ஒருமுகம் கொண்ட பார்ப்பனிய இந்தியாவாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த ஒன்றியத்தின் ஒருமுகப்படுத்தலுக்கும் ஒன்றுகுவித்தலுக்கும் எதிராக பன்முகம் கொண்ட மாநிலங்கள் போராடும் நிலையை நோக்கி தள்ளப்பட்டுள்ளன. இது ஒருமுகத்துக்கு எதிரான பன்முகத்தின் முரண்பாடாக (Singularity Vs Plurality) மாற்றம் கண்டு வருகிறது. இந்த மாற்றங்களில் பலனடையும் முதல் மூவர்ணத்தின் பெரும்பான்மையினர் இதை ஆதரித்து நிற்கிறார்கள். பாதிக்கப்படும் மற்ற சாதியினர் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள்.

தமிழகத்தின் புரிதலில் சொல்ல வேண்டுமானால் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் முரண்பாடாக இந்தியா முழுக்க எதிரொலிக்கிறது. (பார்ப்பனர் என்ற பதம் வெறும் பிறப்பின் அடிப்படையில் மட்டும் இங்கே கையாளப்படவில்லை அவரவர் சிந்தனை செயலின் அடிப்படையிலும்)

ஒன்றியத்தின் சுருக்கத்துக்கும் தமிழகத்தின் பரவலாக்கத்துக்குமான முரண்பாடு

இதுவரையிலான தமிழகத்தின் அரசியல் பொருளாதார வளர்ச்சி பிற்போக்கான பழைய பார்ப்பனியத்தின் அடிப்படையிலான சாதிய கட்டமைப்பை இளக்கம் காண வைத்திருக்கிறதே தவிர, முழுமையாகத் துடைத்தெறியும் அளவுக்கு இன்னும் வளர்ச்சி காணவில்லை. சுதந்திரத்துக்குப் பின்பு இங்கிருந்த பார்ப்பனிய சக்திகளைக்கொண்டு ஒன்றியத்தில் இருந்த பார்ப்பனிய சக்திகள் எப்படி தங்களின் மேலாதிக்கத்தை நிறுவும் வேலைகளில் ஈடுபட்டார்களோ அதேபோல இப்போதும் இங்கிருக்கும் பார்ப்பனிய அடிவருடிகளின் மூலம் செய்து வருகிறார்கள். இது அரசியல் பொருளாதார முற்றுருமையை ஒன்றுகுவித்தலை நோக்கமாகக்கொண்ட பார்ப்பனிய ஒன்றியத்துக்கும் அதற்கு எதிராக அரசியல் பொருளாதார பரவலாக்கத்தை முன்னிறுத்தும் தமிழகத்துக்குமான முரண்பாடாக மாறி நிற்கிறது. அன்று போலவே இன்றும் அரசியல் ரீதியாக இந்த பார்ப்பனிய பாசிச சர்வாதிகார அரசியலை தமிழகம் சரியாக இனங்கண்டு அதற்கு எதிராக ஒற்றுமையுடன் எதிர்த்து நிற்கிறது.

பகுதி 1 - தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

ஆய்வின் தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில்...

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

வேல்முருகனுக்கு வீசிய வலை: பாஜகவில் இணைந்த முன்னாள் மனைவி!

4 நிமிட வாசிப்பு

வேல்முருகனுக்கு வீசிய வலை: பாஜகவில் இணைந்த முன்னாள் மனைவி!

ரெய்டு நடக்கும் நேரம்: சுட்டிக்காட்டும் ப.சிதம்பரம்

4 நிமிட வாசிப்பு

ரெய்டு நடக்கும் நேரம்: சுட்டிக்காட்டும் ப.சிதம்பரம்

ஹிஜாப்பை கழற்றச் சொன்ன தேர்வு அதிகாரி: நடந்தது என்ன?

5 நிமிட வாசிப்பு

ஹிஜாப்பை கழற்றச் சொன்ன தேர்வு அதிகாரி: நடந்தது என்ன?

புதன் 28 ஏப் 2021