fஎடப்பாடி நடத்திய எக்சிட் போல் முடிவு !

politics

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், நேற்று (ஏப்ரல் 29) வெளியான எக்சிட் போல் முடிவுகளில் பெரும்பாலான ஊடகங்களில் , திமுகதான் ஆட்சிக்கு வரும் என்று முன்கூடிய முடிவுகளைச் சொல்லியிருக்கின்றன.

இந்த எக்சிட் போல் பற்றி அதிமுகவிலும் விவாதங்கள் நேற்று இரவு முழுதும் நடந்திருக்கின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இதுகுறித்துப் பேசியிருக்கிறார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சக அமைச்சர்களிடமும், கட்சியின் சீனியர்களிடமும், சில அதிகாரிகளிடமும் இது தொடர்பாக பேசியுள்ளார். அப்போது அவர்களிடம் மிகவும் நம்பிக்கையாக பேசியிருக்கிற எடப்பாடி,

“இதையெல்லாம் பார்த்து தளர்ந்துவிட வேண்டாம். ஊடகங்கள் எடுத்த எக்சிட் போலவே, அவர்கள் எக்சிட் போல் நடத்தி முடித்த பிறகு அதிமுக சார்பிலும் ஒரு தனியார் ஏஜென்சியை வைத்து எக்சிட் போல் எடுத்தோம். அதை நாம் ஊடகங்கள் போல வெளியிட முடியாது. அதன் மூலம் ஒரு உண்மை தெரியவந்திருக்கிறது, அதாவது, ‘திமுகதான் ஆட்சிக்கு வரும் என்று சொன்னவர்களில் 100இல் ஏழு பேர் இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டவர்கள்’ என்று நமக்குத் தெரியவந்திருக்கிறது. ஆக எக்சிட் போலில் கலந்துகொண்டவர்களில் 7% பேர் திமுகவுக்கு என்று சொல்லியிருந்தாலும் அவர்கள் அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டவர்கள். இந்த வகையில் நமக்கு 120 இடங்கள் உறுதியாகக் கிடைக்கும். நாம்தான் ஆட்சி அமைக்கிறோம். கவலைப்படாமல் கவுன்ட்டிங் களத்தில் பணியாற்றத் தயாராகுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

இந்தப் பின்னணியில்தான் இன்று (ஏப்ரல்30) ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், “சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் முடிவுகள் இன்னும் ஒரு நாள் இடைவெளிக்கு பின்னர் வெளியாக இருக்கும் நிலையில் எக்சிட் போல் என்ற பெயரில் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகியிருக்கும் செய்தி தொகுப்புகள் கழக உடன்பிறப்புகள் யாருக்கும் எவ்வித மன சஞ்சலத்தையும் தரவில்லை என்பதை கேட்டு பெருமிதம் கொள்கிறோம்.

2016 சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் இதற்கு முன் வந்த அனைத்து கருத்துக் கணிப்புகளும் வாக்குக் கணிப்புகளும் கழகத்தின் வெற்றியை குறிப்பிடவே இல்லை. மாற்று அணியே ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு முதல் நாள் வரை சொல்லிக்கொண்டிருந்தன. ஆனால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே 2016 இல் அதிமுக வெற்றியை உறுதி செய்யும் வகையில் முன்னிலை வகித்து பெரும்பான்மை பெற்று ஜெயலலிதா ஆட்சி அமைத்ததைப் பார்த்தோம்.

இப்போது வெளியிடப்பட்டு வரும் கணிப்பு முடிவுகள் கழக உடன்பிறப்புகளை சோர்வடையச் செய்து வாக்கு எண்ணிக்கையின் போது நமது செயல்பாடுகளை முடக்கி வைக்க ஜனநாயக கடமையாற்ற விடாமல் செய்வதற்கான முயற்சிகளை தவிர வேறல்ல.

அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் முகவர்களும் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பம் முதலே கவனமாக இருந்து விழிப்புடன் பணியாற்றுங்கள். ஒரு வாக்கு கூட நம்மிடமிருந்து பாதிக்கப்படாத வண்ணம் சுற்றிச் சுழன்று கடமை ஆற்றுங்கள்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் திமுகவினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை மிகுந்த விழிப்புடன் கண்காணித்து முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்தால் அது சம்பந்தமாக உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல்கள் தெரிவித்து தீர்வுகாண வேண்டும்.

அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும் அவர்களுக்கான தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்து வெளியே வரவேண்டும்”என்று தெரிவித்துள்ளனர்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *