என்ன செய்வீர்களோ தெரியாது,டெல்லிக்கு ஆக்சிஜன் கொடுங்கள்!

politics

டெல்லி மருத்துவமனையில் இன்று மதியம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஒரு டாக்டர் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியின் நிலைமை கண் கொண்டு பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமாக மாறி வருகிறது. கொரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்ததிலிருந்தே, டெல்லி ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. டெல்லியிலுள்ள மருத்துவமனைகளும் ஆக்சிஜன் இல்லை என்று தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றது. இதனால் உயிரிழப்போர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இன்று அதிகாலை குஜராத் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 18 பேர் உயிரிழந்த நிலையில், டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் இன்று மதியம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து பத்ரா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ்.சி.எல் குப்தா கூறுகையில், “மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் இதுவரை எட்டு கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்த மருத்துவமனையில் 327 நோயாளிகள் உள்ளனர். அவர்களில் 48 பேர் ஐசியூ பிரிவில் உள்ளனர். இன்று மதியம் 12.15 மணியளவில் நோயாளிகளுக்கு அளிக்கும் ஆக்சிஜன் சப்ளை முடிந்துவிட்டது. இதையடுத்து,ஆக்சிஜன் டேங்கர் மதியம் 1.35 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லாமல் இருந்தது. எப்படி நோயாளிகளால் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆக்சிஜன் இல்லாமல் சமாளிக்க முடியும். இதனால், 8 பேர் உயிரிழந்தனர். அதில், ஒருவர் எங்கள் மருத்துவமனையின் மருத்துவர் ஹிம்தானி ஆவார்” என தெரிவித்தார்.

இந்த மாத தொடக்கத்தில், டெல்லியில் ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த 20 பேர், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையில் உயர் நீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக சாடியது. ”தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது. 8 உயிர்கள் பலியாகியுள்ளன. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது. நீங்கள்(மத்திய அரசு)தான் டெல்லிக்கு தினமும் 490 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்படும் என உறுதி அளித்தீர்கள். நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது தினசரி 490 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் கிடைக்க உடனே நடவடிக்கை எடுங்கள். ஆக்சிஜனை கொண்டுவருவதற்கான டேங்கர்களையும் மத்திய அரசுதான் ஏற்பாடு செய்ய வேண்டும். இதை நிறைவேற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும்” என நீதிபதிகள் கடுமையாக தெரிவித்துள்ளனர்.

**வினிதா**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *