|தமிழகத்தில் முழு ஊரடங்கு: புதிய அரசின் கையில்!

politics

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், இன்று தமிழகத்தில் புது ஆட்சியை அமைப்பது யார் என்பது தெரிய உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்தடுத்து முழு ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தைத் தாண்டிவிட்டால், அதன்பிறகு பரவல் மேலும் அதிகரிக்க ஆரம்பித்துவிடும். அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. அதனால், அந்த சூழ்நிலையைச் சமாளிக்க கண்டிப்பாக ஞாயிற்றுக்கிழமை மட்டுமில்லாமல், தொடர் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என முதல்வரிடம் தனிப்பட்ட முறையில் தலைமை செயலாளர் கூறியதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டது. இதை நமது மின்னம்பலத்தில் விரிவாக [விரைவில் தமிழகம் முழுதும் முழு ஊரடங்கு: அதிகாரிகள் குறித்த கெடு!]( https://minnambalam.com/politics/2021/04/25/38/total-lockdown-tamilnadu-when) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், நேற்று (மே 1) ஒரு நாளின் தொற்று பாதிப்பு 18 ஆயிரத்தைத் தாண்டி 19,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 147 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாகத் தெரிவித்திருந்தது. இதற்கிடையில் மருத்துவர்கள் வட்டாரத்தில் கூறப்படும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

“ஏற்கனவே தமிழகத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் பாதிப்பு புள்ளிவிவரத்தைவிட அதிகமாகத்தான் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற கருத்து மருத்துவர்கள் வட்டாரத்தில் நிலவி வருகிறது. அதிகாரபூர்வமாக வழங்கப்பட்ட புள்ளிவிவரத்திலே பாதிப்பு 19 ஆயிரத்தைத் தாண்டி விட்டது என்றால், அதிகாரபூர்வமற்ற நிலையில் தொற்று எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கும். அதனால், அன்றைக்கு தலைமை செயலாளர் சொன்னபடி தொடர் முழு ஊரடங்கு தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் தற்போது எழுந்துள்ளது” என்கிறார்கள் அவர்கள்.

இதைவிட இன்றைக்கு அனைவரின் கவனமும் வாக்கு எண்ணிக்கை மீது திரும்பியுள்ளது. தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைக்க போவது யார் என்பது இன்று தெரிந்துவிடும்.

இதுவரை காபந்து அரசில், அதிகாரிகள் முடிவு எடுத்து வந்தனர். மக்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது தெரிந்துவிட்டால், அடுத்து அந்த அரசுதான் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிகாரிகளால் முடிவு எடுக்க முடியாது. புதிய அரசு அமையும் நிலையில், ஊரடங்கு குறித்த முடிவெடுக்கும் அதிகாரம் புதிய மக்கள் பிரதிநிதிகளிடமே செல்லும்.

புதிய அரசை மக்கள் தேர்ந்தெடுத்தாலும், அந்த அரசு அமைவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகும். அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் செட்டில் ஆன பிறகுதான் இதில் முடிவு எடுக்கப்படும் எனவும் அதிகாரிகளில் இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள்.

திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே, “தமிழகம் மற்றொரு ஊரடங்கை தாங்காது” என்று ஒரு அறிக்கையிலும், “தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தால், மே 2க்குப் பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை” என்று மற்றோர் அறிக்கையிலும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருந்தார். ஆனால், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஊரடங்கினால் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பது மருத்துவர்கள் ஆலோசனை. அதனால், கொரோனா பரவல் குறித்தும், ஊரடங்கு குறித்தும் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

தமிழகத்தில் இப்படி என்றால் ஊரடங்கு பற்றி தேசிய அளவிலும் ஆலோசனை தீவிரமாகியுள்ளது. இந்தியாவில் தொற்றுப் பரவல் தீவிரமாக உள்ள 150 மாவட்டங்களில் தொடர் முழு ஊரடங்கு விதிக்க வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை பரிந்துரை செய்திருந்தது. அதில், 10 மாவட்டங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை என்ற தகவலும் வெளியானது. இந்தச் சூழ்நிலையில், மாநில அரசுகளின் முடிவை எதிர்பாராமல், மத்திய அரசு என்ன முடிவு எடுக்கும் என்ற விவாதமும் அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

எனவே புதிய ஆட்சி அமைக்கபோவது யார் என்பதோடு தமிழகத்துக்கு புதிய ஊரடங்கும் வருமா என்ற கேள்விக்கும் சேர்த்தே மே 2 பதில் அளிக்கப்போகிறது.

**வினிதா**

.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *