மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 மே 2021

பகுதி 7: தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

பகுதி 7: தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

எப்படித் தீர்க்கப்படும் அமெரிக்க - சீன முரண்பாடு?

கடந்த ஆறு பகுதிகள் தமிழகம் கடந்து வந்த பாதை, புதிய பொருளாதார முறை, எதிர்கொள்ளும் முரண், சீன - அமெரிக்கப் போட்டி, பார்ப்பனிய - ஏகாதிபத்திய இணைவு, அதன் அரசியல் பொருளாதாரத் தேவை மற்றும் உலக அரசியல் பின்னணி, அமெரிக்காவின் பொருளாதார நலிவு, அமெரிக்க மைய உலக ஒழுங்கை உடைக்க முற்படும் சீனாவின் நகர்வுகளைப் பற்றிப் பேசியது. இந்தப் பகுதி அமெரிக்க - சீன முரண், போரில் முடியுமா... இல்லை, இருதரப்பும் விட்டுக்கொடுத்து ஓர் உடன்பாட்டை எட்டுமா என்பது குறித்து அலசுகிறது.

சீனாவும் அமெரிக்காவும் சந்தைப் போட்டி முற்றி முரண்பட்டாலும் முழுமையாக வர்த்தகப் பொருளாதார உறவுகளை முறித்துக்கொள்ளும் அளவுக்கு இருவருமே தற்சார்புடன் இல்லை. சில்லுகளுக்கு சீனா அமெரிக்காவையும் அமெரிக்கச் சந்தைக்குத் தேவையான பல்வேறு பொருட்களுக்கு அமெரிக்கா சீனாவையும் சார்ந்து இருக்கின்றன. இந்த சில்லுகளுக்கான ஏற்றுமதி தடை, கிட்டத்தட்ட இரண்டாம் உலகப்போருக்கு முன்பு ஜப்பானுக்குச் செல்லும் எரிபொருளைத் தடுத்ததற்கு ஒப்பானது. தனது பொருளாதாரத்தைக் காக்க அப்போதைய ஜப்பான் போரில் இறங்கியது. தற்போது கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுக் கிடக்கும் சூழலில் இந்த சில்லுகளுக்கான தடை மேலும் விரிவாக்கப்பட்டு நேரடி போரில் முடியும் சாத்தியம் குறைவு.

நேரடிப்போருக்குச் சாத்தியமில்லை. ஆனால்...

அதையும் மீறி போர் தொடுக்கும்பட்சத்தில் முதல் குண்டு தைவானின் TMSC நிறுவனத்தின் மீதுதான் விழும். ஏனெனில் இந்த நிறுவனம் உலகுக்குத் தேவையான 60 சதவிகிதம் சில்லுகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்காவின் ராணுவ மற்றும் தொழில் துறைக்குத் தேவையான 90 சதவிகிதம் சில்லுகள் இங்கிருந்தே உற்பத்தியாகிறது. இதன் உற்பத்தி நிறுத்தப்படும் பட்சத்தில் இருவரின் பொருளாதாரமும் இயங்க முடியாத சூழல் ஏற்படும். இதனால்தான் எல்லா நாடுகளும் தற்போது சில்லுகள் உற்பத்தியைத் தனது நாட்டில் ஏற்படுத்த பல பில்லியன் டாலரை முதலிட்டு வருகிறார்கள். இவை கட்டி முடிக்கப்பட்டு உற்பத்தியைத் தொடங்க இன்னும் சில ஆண்டுகள் தேவை. எனவே இன்றைய சூழலில் இன்னும் சில ஆண்டுகளுக்கு நேரடி போருக்கு சாத்தியம் இல்லை.

அதேநேரம் இந்தப் பொருளாதார போட்டி நிறுத்தி வைக்கப்பட போவதும் இல்லை. ஆதலால்

1. முடியாத இந்த முட்டலும் மோதலும் ஆங்காங்கே பதிலிப் போர்களாகவும்

2. மேலும் முற்றும் பட்சத்தில் இரண்டாவது பனிப்போராகவும் (Coldwar 2.0)

3. யாராவது ஒருவர் போட்டியைத் தொடர முடியாத அளவுக்கு தொழில்நுட்பப் பொருளாதார ரீதியாக பலகீனமடையும்பட்சத்தில் விட்டுக் கொடுப்புடன் கூடிய சமாதான ஒப்பந்தமாகவும் இது முடியும்.

பதிலிப் போர்களும் பனிப்போருக்கான வாய்ப்புகளும்

முதல் வகையான பதிலிப் போர்களில் இந்திய எல்லை மோதல், யுக்ரைன் உள்நாட்டு போர், மியான்மர் உள்நாட்டு கலவரம், முடிவடையாமல் தொடரும் ஆப்கானிஸ்தான் போர், வட-தென் கொரிய பதற்றம், லிபிய உள்நாட்டுப் போர், இரான் அணு ஆயுத பிரச்சினை, இராக்கில் தொடரும் போராட்டம், தொடரும் சிரிய பிரச்சினை, பொலிவிய சதிப்புரட்சி, வெனிசுவேலா உள்நாட்டு குழப்பங்கள், திடீர் பெலாரஸ் போராட்டம், பிரேசிலில் நடைபெறும் அரசியல் குழப்பங்கள், தாய்லாந்தின் திடீர் சதிப்புரட்சி அதைத் தொடர்ந்த போராட்டங்கள் என அனைத்தும் இதில் அடங்கும். இது தனக்கு சாதகமான அரசை அமர வைத்து சாதகமான கொள்கை முடிவுகளை எடுக்க வைப்பதன் மூலம் எந்த நாடும் எதிர் அணிக்குச் செல்லாமல் பார்த்துக்கொள்ள செய்யப்படுபவை அல்லது எதிரியின் முதலீட்டை இழக்க செய்து நட்டமடைய வைத்து பலகீனப்படுத்தும் நோக்கம் கொண்டவை.

மோதல் முட்டி பனிப்போராக மாறுவது தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பாதகமான ஒன்று. ஏனெனில் இது சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும், அமெரிக்காவின் அணியில் இருக்கும் இந்தியாவின் முக்கியத்துவத்தைக் கூட்டும். இந்தியாவை மேலும் ராணுவமயமாக்கும். இப்போது ஆட்சியில் இருக்கும் எதேச்சதிகார அரசியலை மேலும் அரசியல் ரீதியாக வலுப்பெற செய்து சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்தும். இந்த அரசினால் பலனடைந்து கொண்டிருக்கும் கூட்டுக்களவாணிகளுக்குப் பொருளாதார பலன்களை அள்ளிக்கொடுக்கும். மாநிலங்களுக்கும் மக்களுக்கும் ஜனநாயகத்தை மறுத்து அடக்குமுறையையும் அடிமைத்தனத்தையும் வறுமையையும் பரிசாக அளிக்கும்.

ஆனால், இதற்கான சாத்தியங்கள் இப்போதைய சூழலில் குறைவு. இதற்கான முன் நிபந்தனை அமெரிக்க - சீன நிதி பொருளாதார சார்புத்தன்மை இல்லாமல் ஆக்கப்பட வேண்டும். அதாவது, இருதரப்பு உறவுகளை முற்றிலுமாக உடைத்துக்கொள்ள வேண்டும் (Decoupling). அதேபோல அமெரிக்க சார்பெடுக்கும் மற்ற நாடுகளின் சீன சார்புக்கு அமெரிக்கா மாற்றை வழங்க வேண்டும். அதற்கு அமெரிக்கா இப்போதைய பலகீனங்களைச் சரிசெய்து கொண்டு மேலெழும்பி வர வேண்டும். அதற்கு இன்னும் சில ஆண்டுகள் தேவை. அதுவரையிலும் நலிவடைந்து கிடக்கும் உலகப் பொருளாதாரமும் வேலையில்லா திண்டாட்டத்தால் பெருகும் சமூகப் பிரச்சினைகளும் தாக்குப் பிடிக்காது. இதற்குள் சீனா சில்லுகளின் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அடைந்தால் இந்த ஆட்டம் இறுதி பெற்று சீனா வென்றுவிடும்.

சீனா தன்னிறைவு பெறுவதில் தோல்வி கண்டாலும் அதை உலக அரங்கில் இருந்து தனிமைப்படுத்தினாலும் மற்ற நாடுகளின் சந்தை இன்றி அதனால் சுயமாக இயங்க முடியும். யாரிடமும் இல்லாத வாங்கும் திறனுடைய 50 கோடி நடுத்தர வர்க்கம் அதனிடம் இருக்கிறது. அவர்களுக்குப் பொருளை விற்றாலே சீன நிறுவனங்களால் லாபகரமாக இயங்க முடியும். அதோடு இந்த எல்லா நாடுகளையும் சீன சந்தையைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று சொல்லித்தான் இந்த எதிர் அரசியலுக்கான இசைவை அமெரிக்கா பெற நினைக்கிறது. உண்மையில் இவர்கள் எல்லோரையும் இணைக்கும், இணைந்து செயல்பட வைக்கும் பொருளாதார பசை அந்த சந்தைதான். இந்த முன்னெடுப்பு கொரோனா தொற்றின்போதே அப்போதைய டிரம்ப் நிர்வாகத்தால் முயற்சி செய்யப்பட்டு உலக நாடுகளின் ஆதரவின்றி தோல்வியைத் தழுவியது. இப்போது யாரையும் இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி வற்புறுத்த மாட்டோம் என்று அமெரிக்கா பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய அளவுக்கு மற்ற நாடுகள் சீனாவை முக்கியமாகக் கருதும் நிலை. ஆதலால் இரண்டாவது பனிப்போராக மாறும் சாத்தியம் இப்போதைக்கு மிகக் குறைவு.

பிளாசா உடன்படிக்கையா? பிரிட்டன்வுட் உடன்படிக்கையா?

முழுமையாக சரணடையாமல் இருவரில் ஒருவர் சில விட்டுக்கொடுப்புடன் கூடிய சமாதான உடன்படிக்கையே சாத்தியம் என்று தோன்றுகிறது. அமெரிக்காவின் நிதி பொருளாதார சூழலும் அது செல்லும் திசையும் நீடித்து நிலைத்து (Sustainable) நிற்கும் தன்மை கொண்டது அல்ல. ஊதிப் பெருக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கப் பங்குச்சந்தை, அவ்வப்போது அது காணும் ஏற்ற இறக்கங்கள், முதலீட்டாளர்களிடம் அதிகரித்துக் கொண்டிருக்கும் பணவீக்க பயம், 2008ஆம் ஆண்டு உலக நாடுகளின் மத்திய வங்கிகள் ஒருங்கிணைந்த முறையில் பணக்கொள்கையைப் பின்பற்றியது போல் அல்லாமல் அதனதன் பாதையில் செல்லும் போக்கு ஆகியவை வரப்போகும் வெடிப்பை அல்லது சீனாவுடன் அமெரிக்கா ஒரு திருத்தத்தை மேற்கொள்ளும் தேவை இருப்பதைச் சுட்டுகிறது.

அது இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு நலிவடைந்திருந்த இங்கிலாந்தின் மறுகட்டமைப்புக்கான பணத்தைக் கொடுத்து அதன் நாணயத்தின் (Pound) உலகப்பணத் தகுதியை அமெரிக்காவின் டாலர் எடுத்துக் கொண்ட பிரிட்டன்வுட் உடன்படிக்கை போன்றோ அல்லது 1985இல் ஜப்பானுடன் அமெரிக்கா செய்து கொண்ட பிளாசா உடன்பாட்டை (Plaza Accord) ஒத்ததாகவோ இருக்கலாம். இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா சந்தித்த பட்ஜெட் பற்றாக்குறை அளவுக்கு தற்போதைய பற்றாக்குறையின் அளவு இருந்தாலும் அமெரிக்கா அப்போதைய இங்கிலாந்தின் அளவுக்கு வலுகுறைந்து விடவில்லை. ஆதலால் மற்றுமொரு பிளாசா உடன்படிக்கைக்கு வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

1973இல் டாலரில் மட்டுமே எண்ணெய் விற்பனை செய்வோம் என சவுதி அறிவித்த பிறகு டாலருக்கான தேவை உலகம் முழுவதும் அதிகரித்தது. இதன் காரணமாக மற்ற நாடுகளின் நாணயங்களுக்கு எதிரான டாலர் குறியீட்டு எண் (Dollar Index) 1985இல் 164.72 ஆக அதிகரித்தது. இந்த உயர்ந்த டாலர் மதிப்பினால் அமெரிக்கப் பொருட்களின் ஏற்றுமதி சரிந்து ஜப்பான் மற்றும் ஜெர்மனியின் ஏற்றுமதி உயர்ந்தது. இதைச் சரிசெய்ய செய்து கொண்ட பிளாசா உடன்படிக்கையினால் நிலைமை தலைகீழ் ஆனது. ஜப்பான் நாணய மதிப்பு உயர்ந்து பணயிறக்கம் (Deflation) ஏற்பட்டது. அது அந்த நாட்டின் உற்பத்தியாளரின் முதுகெலும்பை உடைத்து அவர்களின் ஏற்றுமதி வாய்ப்பை குறைத்து அந்நாட்டை மேற்கொண்டு முன்னேறாமல் முடக்கி வைத்தது. இன்றுவரை அது எழ முடியாமல் இருக்கிறது.

ஜப்பானைப் போல வீழாது சீனா

அப்போதைய சூழலுக்கு மாறாக தற்போது டாலரின் மதிப்பு சரிந்து வருகிறது. இந்தப் பணவீக்கத்தைப் பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்கள் தொழில்நுட்ப ரீதியாக வலுவுடன் இருந்தாலும் பொருட்களைப் பெருமளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதியை அதிகரித்துக்கொள்ளும் நிலையில் உற்பத்தியில் வலுவுடன் இல்லை. அது இழந்த தொழில் உற்பத்தி திறனைத் திரும்பப் பெற முயலும் பரிதாப நிலை. அன்று டாலர் தேவைக்கு எல்லோரும் டாலரை நோக்கி ஓடியதைப் போலல்லாமல் குறையும் டாலர் மதிப்பில் இருந்து தப்பிக்க தமது செல்வத்தின் மதிப்பைக் காக்க பிட்காயினை நோக்கி செல்வந்தர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலை.

அதேபோல அன்றைய ஜப்பானுக்கு டாலர் சார்ந்த வர்த்தகத்தையும் அமெரிக்கச் சந்தையையும் தவிர்த்த மாற்றுகள் எதுவும் இல்லை. ஆனால், இன்றைய சீனா அமெரிக்காவுக்கு இணையான சந்தையையும் சொந்த மின்னணு நாணய வர்த்தக மாற்றுடனும் இருக்கிறது. ஜப்பானைப் போல் டாலரில் தங்கி இருக்க வேண்டிய தேவை குறைந்து, சொந்த நாணய வர்த்தகத்துக்கு மாற நினைக்கிறது. அன்று உடனடியாக உயர்ந்த ஜப்பானிய யென்னின் மதிப்பு அதன் உற்பத்தியாளர்கள் உலக சந்தையில் போட்டியிட்டு வெல்லமுடியாத சூழலை உருவாக்கியது. தற்போது சீன நாணயத்தை உலக வர்த்தகத்துக்கு அனுமதித்து அதன் தேவையைச் செயற்கையாகத் திட்டமிட்டு அதிகரிக்க செய்து அதன் ஏற்றுமதி வாய்ப்பை இல்லாமல் செய்யும் சாத்தியமும் குறைவு.

ஏனெனில் அவ்வாறான நிதித்தாக்குதலைச் செய்ய முடியாதவாறு காகிதப்பணத்துக்குப் பதிலாக புதிய பிளாக் செயின் தொழில்நுட்பத்தை சீனா பயன்படுத்தப் போகிறது. அதையும்மீறி இயற்கையாக சீன நாணயத்தின் மதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில் அதைத் தடுத்து நிலைப்படுத்த சீனாவிடம் மலைபோல குவிந்து கிடக்கும் மூன்று ட்ரில்லியன் டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பு கைகொடுக்கும். இதில் எல்லாம் தப்பித்து நாணயத்தையும் பொருளாதாரத்தையும் நிலைப்படுத்தும்பட்சத்தில் உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையை சீன நாணயம் பெறும். அது இயல்பாகவே இப்போது டாலரின் மீதான நம்பிக்கையைக் குறைத்து அதன் வலுவைக் குறைக்கும். ஏனெனில் முந்தைய தங்கத்தைப் பின்புலமாக கொண்டு இயங்கிய பணமுறைக்குப் பதிலாக தற்போதைய காகிதப்பணமுறை மக்களின் நம்பிக்கையின் அடிப்படையிலும் அரசுகளின் உத்தரவாதத்திலும் தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கை உடையும் அடுத்த நொடியே அரசு தனது உத்தரவாதத்தை விலக்கிக்கொள்ளும் பணமதிப்பிழப்பு போன்ற ஓர் உத்தரவிலேயே பணம் வெற்றுக் காகிதமாகிப்போகும்.

உடன்படிக்கை ஏற்படாமல் இருக்க என்ன காரணம்?

1985இல் வலுவான நிலையில் இருந்த அமெரிக்கா, மற்ற நாடுகளை அழைத்துப் பேசி தனக்கு சாதகமான உடன்படிக்கையைச் செய்து கொண்டு மற்றவர்களை தலையில் தட்டி உட்கார வைக்க முடிந்தது. தற்போது வலுக்குறைந்த நிலையில் அவ்வாறான உடன்படிக்கையைச் செய்து கொள்ள வேண்டிய சூழலும் தேவையும் முன்தள்ளினாலும் டாலர் ஆதிக்கத்தை இழக்க முடியாத சூழல் பின்னோக்கி இழுக்கிறது. அது டாலர் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அதை அடிப்படையாகக் கொண்ட உடன்படிக்கைக்குச் சீனாவை வற்புறுத்துகிறது. வலுவான நிலையில் இருக்கும் சீனா, அதை மறுத்து தனது தகவல் தொழில்நுட்பப் பொருட்களுக்கான சந்தையையும் வர்த்தகத்தில் தனது நாணயத்துக்கான பங்கையும் தவிர்த்த உடன்படிக்கைக்குத் தயாராக இல்லை. இது உடன்பாடு எட்டமுடியாமல் இழுபறித்துக் கொண்டிருக்கும் சூழலை உருவாக்கி இருக்கிறது.

இருவரும் ஒருவரையொருவர் பலகீனப்படுத்தி, தமக்கு சாதகமான உடன்பாட்டை எட்டும் பொருட்டு எதிரெதிரான உலக அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள். இப்போது இல்லையென்றாலும் இந்த போக்கு வரும் ஆண்டுகளில் இருவரில் ஒருவர் இறங்கி வந்து ஓர் உடன்படிக்கையைச் செய்து கொள்ளவேண்டிய சூழலை நிச்சயம் உருவாகும். அது அமெரிக்காவின் மறுகட்டமைப்புக்கான நிதியைக் கொடுத்து அதற்குப் பதிலாக 2008ஐப் போன்று சீனத் தகவல்தொழில்நுட்பப் பொருட்களுக்கான சந்தையையோ, வர்த்தகத்தில் சீன நாணயத்துக்கான பங்கையோ அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இரண்டையுமோ பெறுவதாக இருக்கலாம்.

தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

<பகுதி 1 > / < பகுதி 2 > / < பகுதி 3 > / < பகுதி 4 > / < பகுதி 5 > / < பகுதி 6 >

ஆய்வின் தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில்

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

.

பழனியப்பன்-எம்.ஆர்.கே. வியூகம்: அறிவாலயத்தில் தர்மபுரி அதிமுகவினர்! ...

3 நிமிட வாசிப்பு

பழனியப்பன்-எம்.ஆர்.கே. வியூகம்: அறிவாலயத்தில் தர்மபுரி அதிமுகவினர்!

அன்வர் அமைதி அர்த்தம் என்ன?

14 நிமிட வாசிப்பு

அன்வர் அமைதி அர்த்தம் என்ன?

குரல் பரிசோதனைக்குத் தயாரா? செல்லூர் ராஜூவுக்கு ஆடியோ தொண்டர் ...

5 நிமிட வாசிப்பு

குரல் பரிசோதனைக்குத் தயாரா? செல்லூர் ராஜூவுக்கு ஆடியோ தொண்டர் சவால்!

திங்கள் 3 மே 2021