{தேர்தல் முடிவு: யாரையும் சந்திக்காத எடப்பாடி

politics

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவின் கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதிமுக மட்டுமே 66 தொகுதிகளில் வென்றுள்ளது.

தேர்தல் முடிவு குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (மே 3) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழக சட்டமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் தங்கள் பொன்னான வாக்குகளை அளித்த மக்களுக்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக சட்டமன்றத்திலும் ஆட்சி நிர்வாகத்திலும் எதிர்க்கட்சி என்ற பெரும்பொறுப்புடன் என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ அவை அனைத்தையும் மனத் தூய்மையுடனும் கழகத்தின் கொள்கை வழி நின்றும் செவ்வனே நிறைவேற்றுவோம்.

மக்கள் பணிகளை ஆற்றுவதிலும், கழகத்தைக் கட்டிக் காக்கும் கடமையில் தோளோடு தோள் நின்று உழைப்பதற்கும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்” என்று பன்னீர் செல்வமும், பழனிசாமியும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி சென்னையில் இருந்து சேலம் திரும்பிய எடப்பாடி பழனிசாமி தான் சேலம் திரும்பியது முதல் இன்று (மே 3) காலை வரை யாரையும் சந்திக்கவில்லை.

தேர்தல் முடிவுகளைக் கூட தன் வீட்டில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவர் வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களோடு தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் கிடைக்கின்றன. ஆரம்பத்திலேயே திமுக கூட்டணி முன்னணி என்ற நிலையில் இருந்தாலும் அதிமுகவுக்கு கௌரவமான தொகுதிகள் கிடைத்திருப்பதில் சற்றே ஆறுதல் அடைந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. நேற்று மதியம் 2.30 மணிக்கு சேலத்தில் இருக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு எடப்பாடி பழனிசாமி வரப் போவதாக பத்திரிகையாளர்கள் மத்தியில் தகவல் பரவியது. ஆனால் அவர் வரவில்லை.

மேலும் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி 1லட்சத்து 63 ஆயிரத்து 154 வாக்குகளைப் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் சம்பத்குமாரை 93ஆயிரத்து 802 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மிகப்பெரும் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருந்தபோதும் தனது வெற்றிச் சான்றிதழை பெறக் கூட அவர் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லவில்லை. அவருக்கு பதிலாக அவரது பிரதிநிதியே வெற்றிச் சான்றிதழைப் பெற்றுச் சென்றார். தேர்தல் முடிவுகள் வெளியாகி அடுத்த நாள் ஆகிவிட்ட பிறகும் கூட இன்றும் (மே 3)எடப்பாடி பழனிசாமி யாரையும் சந்திக்கவில்லை.

“கோபத்தில் இருக்கிறாரா அல்லது உடல் நிலை சரியில்லாமல் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறாரா?” என்று அதிமுக வட்டாரத்தில் நிர்வாகிகள் பேசிக் கொள்கிறார்கள்.

**-வேந்தன்**

.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *