மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 மே 2021

பகுதி 8: தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

பகுதி 8: தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

என்ன நோக்கத்தில் மாற்றியமைக்கப்படுகிறது, இந்தியப் பொருளாதாரம்?

கடந்த ஏழு பகுதிகள் தமிழகம் கடந்து வந்த பாதை, புதிய பொருளாதார முறை, எதிர்கொள்ளும் முரண், சீன - அமெரிக்கப் போட்டி, பார்ப்பனிய - ஏகாதிபத்திய இணைவு, அதன் அரசியல் பொருளாதார தேவை மற்றும் உலக அரசியல் பின்னணி, அமெரிக்காவின் பொருளாதார நலிவு, அமெரிக்க மைய உலக ஒழுங்கை உடைக்கும் திசையில் சீனா, உடன்பாட்டுக்கான சாத்தியங்கள் குறித்துப் பேசின. அப்படி அமெரிக்கா பின்வாங்கும்பட்சத்தில் அமெரிக்காவை முன்னிறுத்தி, அது சொல்லும் பொருளாதார மாற்றங்களைச் செய்துவரும் இந்தியாவின் நிலை என்னவாகும், எந்த குறிக்கோளை அடிப்படையாகக்கொண்டு இந்த மாற்றங்களைச் செய்கிறார்கள் என்பது குறித்து அலசுகிறது இந்தப் பகுதி.

அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஓர் உடன்படிக்கை ஏற்படும்பட்சத்தில், அது இந்தியப் பார்ப்பனிய முற்றொருமைக்கு அடிக்கும் சாவு மணியாக இருக்கும். ஏனெனில் இவ்விரு நாடுகளுக்கு இடையிலான முரண்பாடு முந்தைய பனிப்போரை ஒத்த சூழலை உருவாக்கும், அதில் பலனடையலாம் என்று கணக்கிட்டுத்தான் இந்தியச் சந்தையை, இந்தியாவை ஆளும் அரசும், அவர்களின் புரவலர்களும் சேர்ந்துகொண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கு முழுமையாக தாரை வார்த்திருக்கிறார்கள். இந்தியாவின் உற்பத்தி முறையோ, பொருளாதார வளர்ச்சியோ கோராத புதிய மின்னணு பொருளாதார முறைக்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்கள்.

தலைகீழாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரம்

அது முறைசாரா பொருளாதாரத்தில் வங்கி முறைக்கு வெளியில், காகிதப் பணத்தின் வடிவில் குருதியாக ஓடிக்கொண்டிருந்த மூலதனத்தை ஒரே இரவில் உள்ளிழுத்துக்கொண்டு, அந்தப் பொருளாதார உடலை செயலற்றதாக்கியது. அடுத்து அறிவித்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை, அந்தப் பொருளாதாரத்தின் ரத்த ஓட்ட நரம்புகளை நசுக்கி, அதில் ஈடுபட்டிருந்த சிறு குறு நடுத்தர தொழில்களை நலிவடைய செய்தது. அவற்றை சந்தைப்படுத்தி வந்த வணிகர்களைச் சந்தையில் இருந்து விலக்க ஆரம்பித்தது. இவற்றில் வேலைசெய்து வந்த தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்தியது. விவசாயிகளை விதைத்து அறுவடை செய்ய இயலாமல் முடக்கியது.

அதேநேரம் இந்த மூலதன சந்தையை வங்கிகளும் மற்ற நிதி நிறுவனங்களும் பிடித்துக்கொள்ள ஆரம்பித்தன. மக்களின் பணப் பரிவர்த்தனைகளை மின்னணுமயமாக்கி, இந்தப் பரிமாற்றத்தில் தவிர்க்க முடியாத தரகனாக வங்கிகள் வந்து அமர்ந்துகொண்டன. இப்படி உள்ளிழுக்கப்பட்ட மூலதனத்தைக் கொண்டு வெளியேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் தொழில் உற்பத்தியைப் பெருநிறுவனங்கள் பிடிக்க ஆரம்பித்தன. சந்தையைப் புதிய மின்னணு பொருளாதார முறையைப் பயன்படுத்தி வணிகம் செய்யும் இணையதள பெருநிறுவனங்கள் பிடிக்க வழிவகுத்தது.

அதிரடியாக அறிவிக்கப்பட்ட கொரோனா முடக்கும் இந்த மாற்றங்களை மின்னல் வேகத்தில் முடுக்கிவிட்டன. இந்த மின்னணு பொருளாதார முறைக்கு சாதகமான சூழல் ஏற்பட்டதும் முதல் வேலையாக சீனப் போட்டியாளர்கள் சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். இந்தப் பொருளாதார முறையை முழுமையாக நடைமுறைப்படுத்தத் தேவையான தொழிலாளர் சட்டங்கள் விவசாய விற்பனை சட்டங்கள் திருத்தப்பட்டன. இப்படி உருவாகும் மாபெரும் சந்தை வாய்ப்பையும் பெருகப்போகும் லாபத்தையும் கணித்த முதலீட்டாளர்கள், இந்தத் தொழிலில் ஈடுபடும் அமேசான், வால்மார்ட், ஃப்ளிப்கார்ட், ஜியோ, முகநூல், கூகுள் ஆகிய நிறுவனங்களில் முதலீடுகளைக் கொண்டுவந்து கொட்டினார்கள். இந்தியப் பங்கு வர்த்தகப் புள்ளிகள் விண்ணைத் தொட்டன.

இப்படி உள்நுழைந்த மூலதனம் 90 விழுக்காடு தொழிலாளர்கள் பங்கு பற்றி பிழைப்பை நடத்த வாழ்வாதாரமாக இருந்த இந்திய முறைசாரா பொருளாதாரத்தை வேகமாக உடைத்து உள்வாங்கி வருகிறது. இது, இதுவரையிலான இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பைத் தலைகீழ் மாற்றத்துக்கு உள்ளாக்கி வருகிறது. நுகர்வு சார்ந்த இந்தியப் பொருளாதாரத்தின் பெரும்பகுதி வாடிக்கையாளர்கள் 60 விழுக்காடாக இருக்கும் விவசாயத் தொழிலாளர்களும், 30 விழுக்காடாக இருக்கும் சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் தொழிலாளர்களும்தான்.

இந்திய உற்பத்தி பெருக்கத்துக்கு இவர்கள் வைக்கும் மாற்று

இப்போது இத்தனை கோடி மக்கள் சேர்ந்து இவ்வளவு குறைவான செல்வத்தைத்தான் உருவாக்குகிறார்கள். ஆதலால் நாம் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அதற்கு நவீன உற்பத்தி முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள். சிதறிக்கிடக்கும் தொழில்களையும், விவசாய நிலங்களையும் கொண்டு உற்பத்தியைப் பெருக்க முடியாது. உலகிலேயே இரண்டாவது பயிரிடத்தக்க நிலங்களை இந்தியா கொண்டிருக்கிறது. ஆனால், நீர் குறைந்த வறண்ட பகுதியான இந்தியாவில் எல்லா பகுதிகளையும் பயிரிட முடியாது; பயிரிடவும் தேவை இல்லை.

1. நவீன முறைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும்போது குறைந்த அளவு நிலத்தில் அளவான நீரினைக்கொண்டு தேவையான அளவு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யலாம்.

2. மீதமுள்ள நிலங்களை வருடத்தின் கிட்டத்தட்ட எல்லா நாட்களும் வெப்பம் காயும் இயற்கை சூழலைப் பயன்படுத்தி சூரிய மின்சாரம் தயாரிக்கலாம்

என விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட குலாத்தி, ஆய்வு செய்து ஆலோசனை வழங்கியிருந்தார். பெரும்பாலான விவசாயிகள் ஐந்து ஏக்கர் அளவுக்கும் குறைவான நிலங்களை வைத்திருக்கிறார்கள். அவர்களால் இதற்கான மூலதனம் இட்டு நவீன முறைகளில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்த இயலாது. விவசாயிகள் தங்களின் நிலங்களை 20-30 வருட குத்தகைக்குப் பெருநிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு அதிலிருந்து வருமானம் ஈட்டலாம் என்பதை இதற்குத் தீர்வாக முன்வைத்தார்கள். இதுதான் இப்போது மூன்று விவசாயச் சட்டங்களாகச் செயலாக்கம் பெற்றிருக்கிறது. இனி பெருநிறுவனங்கள் குத்தகை விவசாயம் செய்யவும், சேமித்து வைக்கவும், சந்தைப்படுத்தவும், ஏற்றுமதி செய்யவும் எந்தத் தடையும் இல்லை.

பெருநிறுவனங்கள் விவசாயத்தில் ஈடுபட்டு உற்பத்தி செய்யும் பொருட்களைச் சேமிக்க அரசிடம் இருக்கும் சேமிப்புக் கிடங்குகளை அதானி கைப்பற்றி வருகிறார். இதை ரிலையன்ஸ் ஃப்ரஷ், வால்மார்ட், அமேசான் போன்றவை சந்தைப்படுத்தும். எஞ்சியவை பதப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும். பெருகும் விவசாய உற்பத்தியைக் கொண்டு ஆல்கஹால் போன்ற மற்ற பொருட்கள் தயாரிக்கப்படும். மீதி உள்ள நிலங்களில் சோலார் சீவல்கள் நிறுவப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படும். நாம் பயன்படுத்தியது போக எஞ்சியவை மற்ற ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

இந்த உற்பத்திக்கான 6 பில்லியன் மதிப்புள்ள ஏலத்தில் அதானி குழுமம் வென்றிருக்கிறது. தலைமை அமைச்சர் மோடி ‘ஓர் சூரியன் ஓர் உலகம் ஓர் இணைப்பு (One Sun, One World, One Grid)’ என்ற கொள்கையை அறிவித்து, தெற்காசியாவுக்கான எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்ய ஓர் உயர்மட்ட குழுவை இந்தியா அமைத்து நாடுகளுக்கு இடையில் மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய கிரிட் அமைப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது. முதலில் தெற்காசிய நாடுகளுக்கும் பின்பு மற்ற ஆசிய நாடுகளுக்கும் அதைத் தொடர்ந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இந்த கிரிட் இணைப்புகள் விரிவாக்கப்படும். சமீபத்தில் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்துப் பேச இந்தியா வந்த சுற்றுச்சூழலுக்கான தூதுவர் கெர்ரி, மரபுசார எரிசக்தி உற்பத்திக்குத் தேவையான முதலீடுகளுக்கு அமெரிக்கா உதவி செய்யும் என்று கூறியிருக்கிறார்.

எதை நோக்கி செல்கிறது உலகப் பொருளாதாரம்?

இது ஏதோ அம்பானி - அதானிக்காக நடக்கிறது, அதற்கு அமெரிக்கா உடந்தை என உடனே முடிவு செய்வோமானால் அது நிச்சயம் தவறு. இப்போது உலக உற்பத்தியும் போக்குவரத்தும் பெட்ரோலிய எரிபொருளை முதன்மையாகக் கொண்டு நடைபெற்று வருகிறது. இதற்கு மாற்றாக மரபுசாரா காற்று, சூரிய மின்னாற்றலுக்கு மாற்றுவதுதான் உலக நாடுகள் இணைந்து 2015இல் பாரிஸில் ஏற்படுத்திக்கொண்ட சுற்றுச்சூழல் மாநாட்டு உடன்படிக்கையின் சாரம். ஆனால், இந்த எரிசக்தி உற்பத்தி இடம் சார்ந்தது மட்டுமல்ல; நிலையற்றதும் மாறக்கூடியதும் ஆகும்.

இதற்குத் தீர்வு, உலக நாடுகள் அனைத்தையும் மின்சாரப் பன்நிலைய இணைப்புகளை (Electric Grid) உருவாக்க வேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது. இப்படி உருவாகும் இணைப்புகளில் இயங்கும் வாகன உற்பத்தியை (Electric Vehicles) ஊக்குவிப்பதன் மூலம் தற்போதைய பெட்ரோலிய எரிபொருளைக் கொண்டு நடக்கும் போக்குவரத்து, மின்னாற்றலில் இயங்குவதை நோக்கி மாறும். இந்த இணைப்பும் போக்குவரத்தும் எந்த தங்குதடையுமின்றி இயங்குவதை வேகமாக சமிக்கைகளை (Signal) உலகம் முழுவதும் எந்த சுணக்கமும் (Latency) இன்றி கடத்தும் 5ஜி இணையம் உறுதி செய்யும். இப்படி கோடிக்கணக்கில் இயங்கும் சாதனங்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவது மனித மூளையின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. அதைச் செயற்கை நுண்ணறிவு(AI) கொண்ட இயந்திர மனிதர்கள் செய்வார்கள். இந்த மொத்த உலக இயக்கத்தையும் மீத்திறன் கணினிகள் (Super Computer) கொண்டு இயக்கப்படும்.

எப்படி மாற்றப்படுகிறது இந்தியப் பொருளாதாரம்?

இதற்குத் தகுந்தாற்போல இந்தியாவின் மின்சார உற்பத்தி, அதைக் கடத்தும் வலைப்பின்னல்கள் (Grid) தனியார்மயமாக்கப்பட்டு அதன் விலை, எப்படி உலக எரிபொருள் விலை மாற்றத்துக்கேற்ப மாறுகிறதோ, அதேபோல மாறும் தன்மை கொண்டதாக மாற்றப்படும் (UDAY). நகரங்களின் எல்லா போக்குவரத்தும் வீடுகளும் இந்த உலக மின்சார பன்நிலைய இணைப்புடனும் 5ஜி தகவல் தொழில்நுட்ப இணைப்புடனும் இணைக்கப்படும் (Smart City). வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் அனைத்தும் இந்த இணைப்புகள் கொண்டு இயங்கும் (Smart Home). கல்வி (New Digital Education Policy), மருத்துவம் (Privitised Insurance backed based System) என அனைத்து அடிப்படை சேவைகளும் இந்த இணைப்புகள் வழி வீடு தேடி வரும். இவை அனைத்தும் இன்றே நடக்கப்போவது இல்லை. ஒரே மூச்சில் உலகில் உள்ள அனைவருக்கும் இது செல்ல வேண்டும் என எல்லோரும் விழைந்தாலும் இது படிப்படியாகப் பணம் உள்ள நபர்களுக்கு முதலில் கொடுக்கப்படும். மற்றவர்கள் இதை உருவாக்க உழைக்க வேண்டும். அதன்மூலம் வாய்ப்பிருந்தால் பெறலாம்.

சொல்வதற்கு எளிமையாக இருந்தாலும் இதைச் செயல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக இப்படி முன்னெடுக்கப்படும் புதிய பொருளாதாரத்தை யார் தலைமையில். யாருடைய பணத்தை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுப்பது, யார் அதிகம் இதில் பலனடைவது என்பதுதான் இப்போது உலக அரசியலாகவும் நாடுகளுக்கு இடையிலான சண்டையாகவும் நடந்து கொண்டிருக்கிறது. அடிப்படையில் இது பெட்ரோலிய எரிசக்தியைப் பதிலீடு செய்து அந்த இடத்தில் மாற்று எரிசக்தியை, வாகனங்களை, தகவல் தொழில்நுட்பப் பொருட்களை வைக்கிறது.

அதற்கு காரணமாக உலகச் சுற்றுச்சூழல் மாசை காரணம் காட்டி உலக மக்களிடம் அரசியல் செய்து அதற்கான ஆதரவைத் திரட்டிக்கொள்கிறது. இதனால் சந்தை வாய்ப்பை இழக்கும் பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் கூட்டு (Cartel) இவை அனைத்தும் திட்டமிட்ட கண்ணுக்குத் தெரியாத சக்திகளின் (Deep State) சதி என பிரச்சாரத்தை முன்னெடுத்து இனவெறி, சாதிவெறி, பிற்போக்கு சக்திகளின் ஆதரவின் மூலம் அரசியல் குழப்பத்தை விளைவித்து ஆட்சியைப் பிடிக்கின்றன. இரண்டுமே ஆபத்தான அரை உண்மைகளை ஆதாரமாகக் கொண்டு வணிக நலன்களை முன்னெடுக்கும் சூழலில் எது உண்மை என்ற தெளிவின்றி பலரையும் சந்தேகம் கொள்ள வைத்து குழப்பத்துக்கு உள்ளாக்குகிறது. குழம்பிய குட்டையில் இருவரும் வணிக நலன்களை முன்னெடுக்கிறார்கள்.

தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

<பகுதி 1 > / < பகுதி 2 > /

< பகுதி 3 > / < பகுதி 4 > /

< பகுதி 5 > / < பகுதி 6 > . /

< பகுதி 7 >

ஆய்வின் தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில்

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

.

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

செவ்வாய் 4 மே 2021