மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

பகுதி 9: தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

பகுதி 9: தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

கடந்த எட்டு பகுதிகள் தமிழகம் கடந்து வந்த பாதை, புதிய பொருளாதார முறை, எதிர்கொள்ளும் முரண், சீன - அமெரிக்க போட்டி, பார்ப்பனிய - ஏகாதிபத்திய இணைவு, அதன் அரசியல் பொருளாதார தேவை மற்றும் உலக அரசியல் பின்னணி, அமெரிக்காவின் பொருளாதார நலிவு, அமெரிக்க மைய உலக ஒழுங்கை உடைக்கும் திசையில் சீனா, உடன்பாட்டுக்கான சாத்தியங்கள், எந்த திசையில் இந்தியப் பொருளாதாரம் பயணிக்கிறது என்பது குறித்து பேசின. இந்தப் புதிய உற்பத்தி முறை, பழைய ஆதிக்கத்தைக் கேள்விக்குட்படுத்தி, புதியவர்களைப் பதிலீடு செய்து வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் அதே பழைய ஆதிக்க ஆளும் வர்க்கம் ஆதிக்கத்தில் நிலைப்பதற்கான காரணத்தை வரலாற்று வழியில் அலசுகிறது இந்தப் பகுதி.

புதிய பொருளாதாரக் கொள்கைகளைச் செயல்படுத்தி பழைய எண்ணெய் உற்பத்தி சார்ந்த வணிக நிறுவனங்களின் நலனை பலிகொடுத்து முன்னெடுக்க வேண்டிய அரசியல் சூழலில் இதுவரையிலும் அமெரிக்காவுக்குள் நிலவிய வணிகப் போட்டியை, முரண்படும் சூழலை நோக்கி நகர்த்தியது. இருவேறு நலன்களை முன்னிறுத்தும் அமெரிக்க ஜனநாயக குடியரசுக் கட்சிகளின் மோதலாக வெளிப்பட்டு இறுதியில் 2016இல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை ஆட்சியில் அமர்த்தியது. அவர் பதவி ஏற்றதும் பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து வெளியேறினார். பின்பு நடந்த உலக அரசியல் குழப்பங்கள் அனைவரும் அறிந்தது. தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள ஜனநாயக கட்சியின் அதிபர் பைடன் மீண்டும் பழைய முன்னெடுப்புகளை தொடரும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனால், முந்தைய உள்நாட்டு அரசியல் பிளவும் குழப்பங்களும், ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கிய அமெரிக்காவின் மீதான உலக நாடுகளின் நம்பிக்கையின்மையும், அமெரிக்காவை முன்னிறுத்திய முன்னெடுப்புகளும் ஓர் ஒருங்கிணைத்த உலக அரசியல் பொருளாதார முன்னெடுப்புக்கு சாத்தியமற்றதாக மாற்றி இருக்கிறது.

அமெரிக்கத் தலைமையை அசைக்க முற்படும் புதிய நாடுகள்

ஏப்ரல் 22இல் அமெரிக்க அதிபர் பைடன் கூட்டியுள்ள 40 நாடுகளைக்கொண்ட சுற்றுச்சூழல் மாநாட்டுக்கு முன்னதாக பிரான்ஸ், ஜெர்மனி, சீன நாடுகள் இது குறித்து தனியாகப் பேசி உள்ளன. நிலத்தால் இணைந்துள்ள ஆசிய, ஐரோப்பிய கண்டங்களில் மின்சாரம் மற்றும் இணைய இணைப்புகள் ஏற்படுத்துவதும் அதன் வழியான புதிய பொருளாதார முறையை முன்னெடுப்பதில் இந்த கண்டங்களுக்கு வெளியில் உள்ள அமெரிக்க கண்டம் மற்றும் தீவு நாடுகளின் (இங்கிலாந்து, ஜப்பான், தென்கொரியா, தைவான்) அரசியல் இதில் பங்கு பற்றி பலனடைவதை நோக்கமாகக் கொண்டது. இதன் முக்கிய பங்குதாரர்களும் பலனாளிகளும் இந்த நிலத்துக்குச் சொந்தமான நாடுகள்தான். அதேபோல அடுத்து வரும் தேர்தலில் மீண்டும் டிரம்ப் வெற்றி பெற்று இந்த முன்னெடுப்பை மீண்டும் பின்னோக்கி இழுக்க மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆதலால் அமெரிக்காவின் பங்கைக் குறைத்து, அதில் இந்தக் கண்டங்களில் அரசியல் பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் இம்மூன்று நாடுகளும் பலனடைய முனைகின்றன.

தகவல் தொழில்நுட்பப் பொருட்களின் உற்பத்தி தொழில்நுட்பங்களை வைத்திருக்கும் இந்தக் கண்டத்துக்கு வெளியில் உள்ள அமெரிக்காவும் தனித்தீவாக உள்ள உலகின் மூன்றாவது பொருளாதாரமான ஜப்பானும் இந்தக் கூட்டுக்கு எதிராக கைகோக்கின்றன. சமீபத்தில் அமெரிக்கத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஜப்பான் மற்றும் தைவானின் சில்லுகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களையும் கூப்பிட்டு ஒரு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்க - ஜப்பான் தலைவர்கள் சந்திப்பு இந்தத் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு இரு நாடுகளின் நலன்களை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆசிய - ஐரோப்பிய கண்டங்களில் உள்ள நாடுகளின் இணைவைத் தடுக்க, இந்த நிலப்பரப்புக்குள் உள்ள உலகின் இரண்டாவது பெரிய மக்கள்தொகையைக் கொண்ட இந்தப் பொருட்களுக்கான மிகப்பெரிய சந்தையைக் கொண்டிருக்கும் இந்தியாவையும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது (Quad). இதற்கு முன்பு உலகமயத்தைச் செயல்படுத்துவதற்கான இந்தியாவின் இசைவைப் பெற மென்பொருள் உற்பத்திக்கான பொருளாதார வாய்ப்பு டாடாவுக்கு வழங்கப்பட்டு காங்கிரஸ் தலைமையில் நவதாராளமய அரசியல் முன்னெடுக்கப்பட்டது. அரசின் கட்டுப்பாட்டில் இருந்த துறைகள் அப்போது பலி கொடுக்கப்பட்டன. இப்போது அதானிக்கு உற்பத்திக்கு அடிப்படையான மரபுசார எரிசக்தி உற்பத்தியையும் அம்பானிக்கு மின்னணு பொருளாதாரத்தின் எரிபொருளான (Fuel) தரவுகளின் உற்பத்தியையும் கொடுத்து இவர்களின் நலனையும் இந்தப் புதிய பொருளாதார முறையையும் அப்பட்டமாக முன்னெடுக்கும் எதேச்சதிகார அரசியல் இந்தியாவில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதற்கு தற்போது சிறு குறு உற்பத்தியாளர்கள், வணிகர்கள், விவசாயிகள் எனப் பெரும் கூட்டமே பலி கொடுக்கப்படுகிறது.

உலகமயத்தில் இருந்து வேறுபாடும் இந்தப் புதிய பொருளாதார முறை

இது தொண்ணூறுகளில் வந்த உலகமயத்தை ஒத்ததாக இருந்தாலும் அடிப்படையில் இது வெவ்வேறானது. அப்போதைய உற்பத்தி பெருக்கம் இருக்கும் பொருட்களை மேலும் அதிகமாக உற்பத்தி செய்ததோடு புதிய தகவல் தொழில்நுட்பப் பொருட்களை உற்பத்தி செய்தது. இருக்கும் தொழிற்சாலைகளை நவீனமாக்கி பொருட்களை மலிவாக்கியது. புதிய பொருட்களின் தேவைக்கு இன்னும் பல தொழிற்சாலைகளை உருவாக்கியது. அது மரபான தொழில்களில் ஈடுபட்டு வந்தவர்களே இந்தியாவில் தொடர்ந்து கோலோச்சுவதை உடைத்து புதியவர்கள் தொழிற்துறையில் ஈடுபடும் வாய்ப்பை உருவாக்கியது. குறைந்த அளவே இருந்தாலும் தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்கியது.

இந்த புதிய பொருளாதார முறை அடிப்படையில் இருக்கும் பொருட்களைத் தொழில்களைப் பதிலீடு செய்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கிறது. இருக்கும் வேலைவாய்ப்புகளை இயந்திரமயமாக்குகிறது. இந்த உற்பத்திக்கு அடிப்படையான பெட்ரோலிய எரிபொருளுக்கான சார்பை உடைத்து இதுவரையிலும் அதனடிப்படையில் கட்டப்பட்ட உலக ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கி வருகிறது. உலகமயம் செயல்பாட்டில் இருக்கும் இந்தியாவிலும் இப்போது இருக்கும் பார்ப்பனிய சமூக ஒழுங்கை இது மேலும் கேள்விக்குள்ளாகி உடைப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

உலகம் மாறும்போது இந்தியா மட்டும் மாறாமல் இருப்பது ஏன்?

தற்போது தகவல் தொழில்நுட்பத் தொழில்துறையில் ஈடுபட்டு வருபவர்கள் மரபான தொழில்களைச் செய்து வருபவர்களை பின்னுக்குத் தள்ளி இந்த தொழிற்துறையினர் முன்னுக்கு வந்து வலுவடைந்திருக்க வேண்டும். மாறாக இதுவரையிலும் மரபான பெட்ரோல் மற்றும் நிலக்கரி எரிபொருளை உற்பத்தி செய்து வந்தவர்கள் இந்தத் துறைகளில் திடீர்ப் பிரவேசம் செய்து கோலோச்சுகிறார்கள். மற்றவர்களை எதேச்சதிகார பாசிச அரசியலைக் கொண்டு வாய்மூடி மௌனித்திருக்க செய்திருக்கிறார்கள். இதன் பலன்கள் முழுவதையும் இவர்கள் மட்டுமே அறுவடை செய்து வருகிறார்கள். இந்த முப்பது ஆண்டுகளில் நடந்த மொத்த மாற்றங்களையும் இல்லாமல் செய்து இதற்கு முன்பிருந்த நிலையை நோக்கி சமூகத்தை இழுத்து செல்கிறார்கள். இதற்கு புதிய தொழில்நுட்பங்களையும் சாதகமான பார்ப்பனிய சாதிய கட்டமைப்பையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இது பார்ப்பனரல்லாதார் கூட்டமைப்பான மௌரிய ஆட்சியின்போது விவசாயப் பெருக்கமும் மற்ற தொழில்களில் வளர்ச்சியும் அதன் வளர்ச்சிப்போக்கில் ஏனைய உலக நாடுகளில் நடந்ததைப்போல வர்க்க சமூகமாக மாற காத்திருந்த நேரத்தில் பார்ப்பன தளபதி புஷ்யமிங்கன் மௌரிய அரசனை படுகொலை செய்து பார்ப்பனியத்தை நிலைநாட்டியதற்கு ஒப்பானது. சுதந்திரமாக தொழில்கள் வளர்ந்து உற்பத்தியைப் பெருக்கி சந்தைப்படுத்தி அதன் தேவைக்கு மனிதர்களின் இடப்பெயர்வை ஏற்படுத்தி, இடம் சார்ந்த இனக்குழுக்களின் கட்டமைப்பை உடைத்து அதன் வளர்ச்சிப்போக்கில் சமூக மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும். அதற்குப் பதிலாக அதன் சிறகுகளை உடைத்து செயற்கையாக இவர்களின் நலனுக்கு ஏற்ப சேவை செய்யும் சிறைப்பறவை ஆக்கியதன் மூலம் இந்தியச் சமூகம் அதற்கு மேல் வளராமல் தடுத்து நிறுத்தினார்கள்.

விவசாய உற்பத்திக்கு எந்த உறவும் அற்ற அதன் வளர்ச்சிக்கு எந்த பங்கும் ஆற்றாத இவர்கள், அதன் மொத்த பலன்களையும் தன்னிடம் குவிக்கும் இந்த பார்ப்பனியப் பொருளாதார முறையைக் கண்டறிந்தார்கள். அது இங்கிருப்பவர்கள் ஒன்றிணைந்து சமூகமாகச் செயல்படாமல் சிறு குழுக்களாக சிதறுண்டு ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு இவர்களின் ஆதிக்கத்தை கேள்வி எழுப்பாத சாதிய கட்டமைப்பாக வளர்ந்தது. இந்த ஒன்று குவிக்கப்பட்ட செல்வமும் ஒற்றுமையின்றி சிதைக்கப்பட்ட சமூகமும் வெளியில் இருந்து யார் படையெடுத்து வந்தாலும் எளிதாக எல்லா செல்வத்தையும் அபகரித்துக்கொள்ளவும், இங்கிருக்கும் உற்பத்தி முறையை எந்த எதிர்ப்பும் இன்றி கைப்பற்றவும் சாதகமான சூழலை உருவாக்கியது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு அணுக்கமாக விளங்கும் பார்ப்பனியம்

இந்த பாதகமான விளைவுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்தக் கட்டமைப்பை மாற்றி இந்த மக்களுடன் இணைந்து வெளியில் இருந்து வரும் ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்கு அவர்களின் பிறப்பின் அடிப்படையிலான வெள்ளை இனவாதம் தடையாக இருந்து வருகிறது. அது வெளியில் இருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்களை ஏற்றுக்கொண்டு தன்னினம் என்று அடையாளப்படுத்திக்கொண்டு, இந்த மக்களைக் காட்டிக்கொடுத்து அவர்களுக்கு சேவை செய்து வாழும் கீழான நிலைக்குத் தள்ளுகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் ஆள ஏதுவாக அனைத்து உற்பத்தியையும் எந்த எதிர்ப்பும் இன்றி கைப்பற்ற சாதகமாக இருக்கும் இந்த அழகான பார்ப்பனிய தேன்கூட்டை சாதிய கட்டமைப்பைக் கலையாமல் காக்கிறார்கள். தேன் வேண்டும்போதெல்லாம் பார்ப்பன ராணித்தேனீயைக் கையில் எடுத்துக் கொண்டு தேன்கூடு கலையாமல் தேனை எடுத்துக்கொள்கிறார்கள்.

பார்ப்பனியம் நிலைப்படுத்தப்பட்ட குப்தர்களின் ஆட்சிக்குப் பிறகு தொடங்கிய ஆக்கிரமிப்பு இன்றுவரை தொடர்ந்தாலும் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு பிறகுதான் இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு சமூகத்தை இணைக்கக் கோரும் குருநானக்கின் குரலாகத் தோன்றுகிறது. இந்து - முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்தி சமூகமாக ஒன்றிணையும் நோக்கம் கொண்ட சீக்கியமாக அது பஞ்சாப் பகுதியில் மலர்கிறது. வரலாற்றில் இனக்கலப்புக்கு வித்திட்ட சத்திரிய சாதியில் பிறந்த புத்தருக்கும் நானக்குக்கும் இது தோன்றியதில் ஆச்சரியம் இல்லை. அதேபோல ஆக்கிரமிப்பாளர்களின் நுழைவு வாயிலான பல்லின மக்கள் குடியேறி சாதியத்தை அதன் பொருளாதார அடித்தளத்தை நீர்க்க செய்திருந்த பஞ்சாப்பில் இது பரவி வளர்ந்ததிலும் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

ஆனால், வெள்ளையின மேலாதிக்க உணர்வுடன் இனக்கலப்புக்கு எதிராக இருந்த பார்ப்பனர்கள் காலனியத்துக்கு முன்புவரை ஆங்காங்கே இருந்த ராஜாக்களுக்கும் ஆங்கிலேயர்களால் இந்தியா ஒன்றிணைக்கப்பட்ட பிறகு அவர்களுக்கும் பார்ப்பனிய ராணித்தேனீயாக இருந்து தேன்கூட்டை கலையாமல் காத்து வந்தார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு இறுதியாக இதை உருவாக்குவதில் வளர்த்தெடுப்பதில் எந்த உழைப்பும் செலுத்தாத இவர்கள் தமது குயுக்தி அரசியல் தந்திரத்தை மட்டும் மூலதனமாகக் கொண்டு ராஜாவாக முடிசூட்டிக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்கள்.

எல்லா மாற்றத்தையும் செரித்து எல்லா சூழலிலும் வாழும் பார்ப்பனியம்

தமிழகத்தில் அப்படியான ஆதிக்கத்துக்கு முயன்றதில் எழுந்த எதிர்ப்பில் வாலை சுருட்டிக்கொண்டு வாழவேண்டி வந்தது. உலகம் இருவேறு முகமாகப் பிரிந்திருந்த நேரத்தில் இந்த உழைப்பை பொதுவாகவும் பலனை தனியாகவும் எடுத்துச் செல்லும் பார்ப்பனியம் தமக்கு சாதகமான பொருளாதார கட்டமைப்பைத் தரும் போலி சோசலிசம் பேசி இதைக் கலையாமல் காத்தது. தொண்ணூறுகளில் ஏற்பட்ட சோசலிச முகாமின் தோல்வி இவர்களை பலகீனப்படுத்தி, உலகமயத்தை ஏற்றுக்கொண்டு தனது ஆதிக்கத்தை இழந்து மீண்டும் பழைய சேவை செய்யும் நிலைக்குத் தள்ளியது. இப்போது உலகம் மீண்டும் இருதரப்பாக முட்டி மோதிக்கொண்டு நிற்கும் சூழலில் இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த பொருளாதார அரசியல் மாற்றங்களைக் குழிதோண்டி புதைத்து மீண்டும் பழைய பார்ப்பனிய கட்டமைப்பைக் கட்டிக்காக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

அப்போதைய மௌரிய ஆட்சியின்போது சமூக பொருளாதார கட்டமைப்பு கோரிய வளர்ச்சியை மறுத்து எப்படி இந்தியாவை ஈராயிரம் ஆண்டுகள் எந்த முன்னேற்றமும் இன்றி தேங்க வைத்ததோ இப்போதும் இந்த சமூக பொருளாதார கட்டமைப்பு கோரும் வளர்ச்சியைப் பரவலாக்கத்தை மறுத்து தனது தேவைக்கேற்ப குறுக்கும் வேலைகளைச் செய்து இந்த சமூகம் மேற்கொண்டு முன்னேறாமல் தடுக்கிறது.

தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

<பகுதி 1 > / < பகுதி 2 > /

< பகுதி 3 > / < பகுதி 4 > /

< பகுதி 5 > / < பகுதி 6 > . /

< பகுதி 7 > / < பகுதி 8 >

ஆய்வின் தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில்

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

.

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

புதன் 5 மே 2021