டெல்டாவுக்கு வாய்த்த கொறடா: அமைச்சர்கள் மறுக்கப்பட்டது ஏன்?

politics

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார் ஸ்டாலின். முன்னதாக மே 6 ஆம் தேதி மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைப் பட்டியல் ஆளுநர் மாளிகையால் வெளியிடப்பட்டது, யார் யாருக்கு அமைச்சர்கள் பதவி என்ற தேடல் ஒருபக்கம் என்றால்…இன்னொரு பக்கம் எந்தெந்த மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி என்ற தேடல் மறுபக்கம்.

பட்டியலை திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்த காவேரி டெல்டா திமுகவினரும் சரி, டெல்டா மக்களும் சரி. கடுமையான ஏமாற்றம் அடைந்தனர். காரணம், அமைச்சரவைப் பட்டியலில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை என காவேரி டெல்டாவின் கரு என்று அழைக்கப்படுகிற இந்த கீழ்த் தஞ்சை மாவட்டம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது.

சமூக தளங்களில் டெல்டா மாவட்ட மக்கள், மாவட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல பல திமுக தொண்டர்களும் காவேரி டெல்டாவுக்கு ஏன் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை என்ற கேள்வியை முன் வைத்தார்கள். இதுகுறித்து திமுகவினர் ஏதோ சமாளிப்பான பதில்களைச் சொன்னாலும் அவர்களிடத்திலும் இந்த ஆதங்கம் இருக்கத்தான் செய்தது.

காவேரி டெல்டா தமிழகத்தில் மிக முக்கியமான பகுதி. விவசாயத்துக்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் இது முக்கியமானது. அதிலும் கடந்த தேர்தலில் விவசாயி என்று கூறி வாக்குகள் கேட்ட அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவை பெரும்பாலான தொகுதிகளில் தோற்கடித்து திமுக கூட்டணிக்கே வாக்களித்திருந்தனர் டெல்டா மக்கள். குறிப்பாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 15 தொகுதிகளில் 12 தொகுதிகளை திமுக கூட்டணிக்கே கொடுத்தனர் மக்கள். இதனால் டெல்டாவின் அரசியல் அதிகாரம் இந்த அமைச்சரவையிலும் தொடரும் என்று டெல்டா மக்கள் எதிர்பார்த்தனர்.

கடந்த அதிமுக அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் என்று மூன்று அமைச்சர்கள் காவேரி டெல்டாவுக்கு கிடைத்தார்கள். ஆனால் இம்முறை எதுவும் இல்லாத நிலையில் இது ஒரு பெரும் உரிமைப் போராட்டமாக வெடித்த நிலையில்தான் தமிழக முதல்வர் ஸ்டாலினே, இதற்கு மறைமுகமாக தானே பதில் அளித்து ஒரு ட்விட்டர் பதிவை நேற்று (மே 7) வெளியிட்டார்.

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்! காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் – திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!”என்று நேற்று பிற்பகல் 2.17 மணிக்கு பதிவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

இதன் மூலம், “நானே டெல்டா காரன் தான். அதனால் அமைச்சரவையில் டெல்டாவுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்று குறை சொல்லாதீர்கள்” என்று பதில் சொல்வது போல் அமைந்திருந்தது முதல்வரின் பதிவு.

மேலும், ஒரு அறிவிப்பாக டெல்டா பகுதியைச் சேர்ந்த திருவிடை மருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியனுக்கு அரசு தலைமைக் கொறடா பதவி அளித்து நேற்று இரவு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இப்போது திருப்தியா என்று டெல்டா அரசியல் பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம்.

“காவேரி டெல்டா தமிழ்நாட்டு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது. கலைஞருக்கு முன் காங்கிரஸ் ஆட்சியிலேயே டெல்டாவுக்கு முக்கியத்துவம் உண்டு. மன்னை நாராயணசாமி, கலைஞர், நெடுஞ்செழியன், எஸ்டி.சோமசுந்தரம், கோசி.மணி, வேதரத்தினம் டெல்டாவின் அரசியல் பிரமுகர்கள் முக்கிய இடங்களைப் பிடித்தார்கள். மத்திய அமைச்சரவையில் கூட டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம் என்று சமீபத்திய வருடங்களில் டெல்டா இடம் பிடித்தது.

இப்போது திமுக அமைச்சரவையில் டெல்டாவுக்கு இடம் கொடுப்பது என்பது முன்னுரிமையாக செயல்படுத்தபப்ட்டிருக்க வேண்டும். தஞ்சையில் சீனியர் துரை சந்திரசேகர் இருக்கிறார். ஆனால் திருச்சி அன்பில் மகேஷ் என்ற கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவருக்குக் கொடுத்துவிட்டதால் துரை சந்திரசேகருக்கோ, பூண்டி கலைவாணனுக்கு கொடுக்க முடியாத நிலை என்று கூறுகிறார்கள். அப்படியென்றால் அகமுடையார் சமூகத்தில் அமைச்சரவையில் யாருக்குமே கொடுக்கவில்லையே…அப்படியாவது டெல்டாவின் மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜாவுக்குக் கொடுத்திருக்கலாமே என்ற கேள்வி எழுகிறது. அன்பில் மகேஷை விட சட்டமன்றத்தில் டி.ஆர்.பி. ராஜா சீனியர். ஆனால் அவருக்கு அமைச்சரவை வாய்ப்பு மறுக்கப்பட்டது.

கும்பகோணம் சாக்கோட்டை அன்பழகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த எ.வ. வேலு, ராணிப்பேட்டை காந்தி, சேகர் பாபு போன்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டதால் மீண்டும் இன்னொருத்தருக்கு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள். டெல்டாவின் பிரதிநிதி என்ற உரிமை இருந்தாலும் சமுதாயப் பிரதிநிதியாக ஏற்கனவே அமைச்சவையில் சிலர் செலக்ட் செய்யப்பட்டுவிட்டதால் அமைச்சர் ஆக்க முடியவில்லை என்கிறார்கள்.

டெல்டா மக்கள் மட்டுமல்ல, டெல்டா திமுகவினரின் கொந்தளிப்பும் தலைவருக்குப் போனதால்தான், நானே காவேரி டெல்டா காரன் என்று ட்விட் போட்டிருக்கிறார். ஆனால் இது சரியான பதிலாகத் தெரியவில்லை. அப்படி என்றால் கலைஞர் அமைச்சரவையில் கோசி.மணி எதற்காக இடம்பெற்றார்? உபயதுல்லா எப்படி இடம்பெற்றார்? மதிவாணன் எப்படி இடம்பெற்றார்? கலைஞரே காவிரி டெல்டா காரர்தானே ஏன் இவர்களை அமைச்சர் ஆக்கினார்? தமிழகத்தின் ஒரு பெரு நிலத்துக்கு உரிய பங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது”என்றவர்கள் இன்னொரு முக்கியக் காரணத்தையும் கூறினார்கள்.

“முதல்வர் ஸ்டாலினுக்கு பொருளாளர் டி.ஆர்.பாலு மீது ஏதோ வருத்தமும் கோபமும் இருக்கிறது. டெல்டாவுக்குக் கொடுத்தால் அவரது மகன் டி.ஆர்.பி.ராஜா தவிர்க்க முடியாதவர் ஆகிவிடுவார் என்பதால் டெல்டாவையே தவிர்த்துவிட்டார் என்று சொல்கிறார்கள். அமைச்சரவைப் பட்டியல் வெளியானதில் இருந்தே டி.ஆர்.பாலுவை ஸ்டாலினுக்கு நெருக்கமாக காணமுடியவில்லை. என்னதான் டெல்டா அரசியல் மோதல் இருந்தாலும் அமைச்சரவையில் டெல்டாவை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது”என்கிறார்கள்.

**-ராகவேந்திரா ஆரா**

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *