pபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா?

politics

புதுச்சேரியில் புதிதாகப் பொறுப்பேற்ற முதல்வர் ரங்கசாமியுடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு நேற்று (மே 7) துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதனிடையே முதல்வர் ரங்கசாமி மூன்று நாட்களுக்கு முன்பு சேலம் அப்பா பைத்திய சாமி கோயிலுக்குச் சென்று வந்தார். இந்நிலையில், அவருக்கு லேசான காய்ச்சல் உடல் சோர்வு ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை ஃபுட் பாய்சனாக இருக்கலாம் என முதல்வருடன் இருந்தவர்கள் கூறியிருக்கின்றனர்.

இதனிடையே ரங்கசாமியுடன் தொடர்பிலிருந்த புவனா என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தன்னுடன் தொடர்பிலிருந்தவருக்கு தொற்று உறுதியான நிலையிலும் ரங்கசாமி, கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை அறிந்த அமமுக பிரமுகர் முரளிதரன், “ரங்கசாமிக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம், எனவே பதவி ஏற்பு விழாவைத் தள்ளி வைக்க வேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்தச்சூழலில் தான் நேற்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. பதவியேற்பு விழாவிற்கு வருபவர்கள் கொரோனா டெஸ்ட் நெகட்டிவ் ரிப்போர்ட் எடுத்து வரவேண்டும் எனத் துணைநிலை ஆளுநர் மாளிகை அறிவித்திருந்தது.

ஆளுநர் மாளிகையின் அறிவிப்பை மீறி பலர் கொரோனா டெஸ்ட் எடுக்காமல் வந்திருக்கின்றனர். அவர்களுக்கு, ஆளுநர் மாளிகை எதிரில் டெஸ்ட் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல்வர் ரங்கசாமியுடன் வந்த ஜவகர் என்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்குப் பரிசோதனை செய்ததில் இரண்டு போலீசார் உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

முதல்வருடன் வந்தவருக்குத் தொற்று உறுதியான நிலையில், பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட உயர் அதிகாரிகளும் அச்சத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள் துணைநிலை ஆளுநர் மாளிகை வட்டாரத்தில்.

**-வணங்காமுடி**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *