�பாஜகவின் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள்!- புதுச்சேரி கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி!

politics

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைச்சர்கள், பதவியேற்காத நிலையில் அவசரமாக மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக நியமித்திருக்கிறது. இதனால் முதல்வர் ரங்கசாமி அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியில், தேஜ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் பத்து இடங்களிலும், பாஜக ஆறு இடங்களிலும் வெற்றிபெற்று கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது. முதல்வர் உட்பட ஆறு அமைச்சர்கள் பதவியை தலா மூன்று என்ற விதமாகப் பிரித்துக்கொண்டது பாஜகவும் என்.ஆர்.காங்கிரஸும்.

தேர்தலுக்கு முன்பு கூட்டணி பேச்சு வார்த்தையில் அதிமுக மேலிட பொறுப்பாளரும் அமைச்சராகவும் இருந்த எம்.சி.சம்பத், பாஜக மேலிடப் பொறுப்பாளரான நிர்மல் குமார் சொரானா, என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி ஆகியோர் தொகுதிப் பங்கீடுகள் பற்றிப் பேசினர். அப்போது பாஜக தலைமை அதிமுகவைக் கண்டுகொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் மேலிடப் பொறுப்பாளரான எம்.சி.சம்பத்தும் பட்டும் படாததுமாக கலந்துகொண்டார், பேச்சளவில் மட்டும் நியமன எம்.எல்.ஏ பதவி ஒன்று அதிமுகவுக்கு வழங்கப்படும் என்று பேசியதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மட்டும் நியமன எம்.எல்.ஏ பதவி மீது குறியாக இருந்தார். மூன்று நியமன எம்.எல்.ஏ,க்களில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக மூன்று கட்சிக்கும் தலா ஒன்று என்று வாய்மொழி ஒப்பந்தம் போட்டுக்கொண்டதாகச் சொல்கிறார்கள் என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரத்தில்.

அதிமுக ஐந்து இடங்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தது. இந்நிலையில் ஒரு நியமன எம்.எல்.ஏ பதவியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையிருந்த நிலையில், அந்த நம்பிக்கை கானல் நீராகப் போய்விட்டது என்கிறார் அதிமுக பிரமுகர் ஒருவர்.

இதனிடையே, துணை முதல்வர் பதவிக்கான வழிகாட்டுதல்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து வருவதற்குக் காலதாமதமாவதால் முதல்வர் பதவியை மட்டும் ஏற்றுக்கொண்டார் ரங்கசாமி.

மற்ற அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் இன்னும் பதவி ஏற்றுக்கொள்ளாமலும், வெற்றி பெற்ற எம்.எல்.ஏ,க்கள் பதவி பிரமாணம் செய்துகொள்ளாமலும் காத்திருக்கிறார்கள்.

முதல்வர் ரங்கசாமி பதவியேற்றுக்கொண்ட மூன்றாவது நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நேற்று முன்தினம் (மே 10), இரவு மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு நியமன எம்.எல்.ஏக்கள் பதவி தொடர்பாக உத்தரவு வந்திருக்கிறது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்து பாஜகவில் இணைந்த சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கத்துக்கும், திமுகவிலிருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர்ந்த வெங்கடேசனுக்கும், பாஜக நகரச் செயலாளர் அசோக் பாபுவுக்கும் நியமன எம்.எல்.ஏ. பதவி கொடுக்க உத்தரவு வந்திருக்கிறது.

புதுச்சேரி அரசும் அதை ஏற்றுக்கொண்டது, அவர்கள் எப்போது வேண்டும் என்றாலும் எம்.எல்.ஏ பதவியேற்றுக்கொள்ளலாம் என்கிறார்கள் துணை நிலை ஆளுநர் மாளிகை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமாக ஆளும் கட்சியைச் சேர்ந்த முதல்வர்தான், நியமன எம்.எல்.ஏக்கள் பட்டியலை துணைநிலை ஆளுநருக்குப் பரிந்துரை செய்வார், அவர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரை செய்ததும் அவர்கள் ஒப்புதல் வழங்குவார்கள். ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் துணை நிலை ஆளுநராகவிருந்த கிரண்பேடி பாஜக நிர்வாகிகளை மூன்று பேரைப் பரிந்துரை செய்து அவர்களுக்கு தனது மாளிகையிலே நியமன எம்.எல்.ஏவாக பதவிபிரமாணம் செய்துவைத்தார்.

தற்போது நடக்கும் சட்டப்பேரவைக்கான நியமன எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேரையும், முதல்வர் பரிந்துரை இல்லாமலே பாஜக நியமித்துள்ளது. இது கூட்டணி கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர். அதுவும் முதல்வர் மருத்துவமனையில் இருக்கும்போது மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டது கூட்டணிக்குள் தொடக்கத்திலேயே சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

**-வணங்காமுடி**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *