qகொரோனாவை விலை கொடுத்து வாங்குவதா? ராமதாஸ்

politics

கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாகத் தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மே 24ஆம் தேதி முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு அது, மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது.

அதே சமயத்தில் ஊரடங்கு காலத்தில் ஏற்றுமதி செய்யப்படும் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து நேற்று தமிழக

அரசு அரசாணை பிறப்பித்தது. அதில், ‘கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம் மற்றும் மதுரை மாவட்டங்களைத் தவிரப் பிற மாவட்டங்களில் உள்ள 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தது.

இந்நிலையில், ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படத் தமிழக அரசு அனுமதித்திருப்பது, கொரோனா பெருகுவதற்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ள ராமதாஸ், “கொரோனா தொற்று ஒருசில மாவட்டங்களில் குறைந்தால், வேறு சில மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சென்னையில் கூட கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, தினமும் 500, 600 என்ற அளவிலிருந்தது. ஆனால், குறையும்போது 28ஆம் தேதி 17, 29ஆம் தேதி 57 என்ற அளவில்தான் குறைந்து கொண்டிருக்கின்றன. இது அடுத்தடுத்த நாட்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

தமிழ்நாடு இன்னும் ஆபத்தான காலகட்டத்தைத் தாண்டவில்லை. இத்தகைய சூழலில் அவசர, அவசரமாக ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படத் தமிழக அரசு அனுமதித்தது ஏன்? எனத் தெரியவில்லை. அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கூட இதுகுறித்து விவாதிக்கப்படாத நிலையில், இந்த அரிய யோசனையை யார் வழங்கியது? என்றும் தெரியவில்லை. கொரோனாவை ஒழிப்பதற்காக மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் போராடி வரும் நிலையில், அதைச் சீர்குலைக்கும் வகையில் இப்படி ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தவறு.

அனைத்து வகையான ஏற்றுமதி நிறுவனங்களிலும் நூற்றுக்கணக்கானோர் முதல் ஆயிரக்கணக்கானோர் வரை பணியாற்றுவார்கள். அவர்களில் 50சதவிகித பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வருவதாக வைத்துக் கொண்டாலும் கூட பணியிடத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது சாத்தியமில்லை. அதனால் ஏற்றுமதி நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கினால், அவை கொரோனா பரப்பும் மையங்களாகவே இருக்கும். அதுமட்டுமின்றி, ஏற்றுமதி நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். ஏற்றுமதி நிறுவனங்கள் திறக்கப்பட்டால் சொந்த ஊர் சென்றுள்ள தொழிலாளர்கள் மீண்டும் பணியாற்றும் இடத்திற்குத் திரும்ப வேண்டியிருக்கும். அது கொரோனா பரவலை விரைவுபடுத்தும். இப்படிப்பட்டதொரு ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு அரசு முயலக்கூடாது.

அத்தியாவசிய சேவைகள், என்ற பெயரில் ஏராளமாக ஆலைகள் முழு ஊரடங்கு காலத்திலும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆலைகளில் மிக அதிக அளவில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. இந்த ஆலைகளில் பணியாற்றிய பல தொழிலாளர்கள் கடந்த சில நாட்களில் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்து தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களின் காரணமாக ஹூண்டாய், ரெனால்ட் நிசான், என்ஃபீல்டு ஆகிய தொழிற்சாலைகள் கடந்த சில நாட்களில் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்திகள் தமிழக அரசுக்குத் தெரியாமல் இருக்காது. தெரிந்தும் கூட ஏற்றுமதி நிறுவனங்களைத் திறக்க அரசு அனுமதி அளித்திருப்பது கொரோனா பெருகுவதற்கே வழி வகுக்கும்.

எனவே, தமிழ்நாட்டில் கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கக் கூடாது; பெரிய தொழிற்சாலைகளையும் மூடத் தமிழக அரசு ஆணையிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *