மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

சபாநாயகர் தேர்தலில் போட்டி?: பாண்டியில் திமுக திடீர் மூவ்!

சபாநாயகர்  தேர்தலில் போட்டி?: பாண்டியில் திமுக திடீர் மூவ்!

புதுச்சேரியில் பாஜகவுக்கும் -என்.ஆர்.காங்கிரஸுக்கும் அமைச்சர் பதவி பங்கீட்டில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. பாஜகவினரும், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் நடத்திய ஆலோசனையில் பாஜகவுக்குச் சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவி கொடுக்க உடன்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் அமைச்சர்கள், சபாநாயகர் யார் யார் என்பதைக் கட்சி மேலிடம் அறிவிக்கும் என்று பாஜக மாநில தலைவர் சாமிநாதன் அறிவித்தார். இதற்காக சாமிநாதன், பாஜக எம்.எல்.ஏ நமச்சிவாயம் உள்ளிட்டோர் கர்நாடகாவுக்குச் சென்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவியை சந்தித்துப் பேசிவிட்டு வந்தனர். அப்போது, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சொரானாவையும் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு வந்தனர்.

சி.டி.ரவியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் அவர் தனது பிரதிநிதியாக பாஜக எம்.பி. ராஜீவ் சந்திர சேகரை புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தார். ராஜீவ் சந்திர சேகர் முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அப்போது, பாஜக அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பட்டியலை ரங்கசாமி கேட்டதும், ‘பட்டியல் இன்னும் தயாராகவில்லை. நாளை வந்து கொடுக்கிறேன்’ என்று கூறிவிட்டு வந்துள்ளார் ராஜீவ் சந்திர சேகர். இன்று மீண்டும் முதல்வரை அவர் சந்திக்கவுள்ளார்.

ஏற்கனவே, பாஜகவுக்கும் என்.ஆர்.காங்கிரஸுக்கும் இடையே நடந்த பிரச்சினை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது சபாநாயகர் யார் என்று பாஜகவுக்குள்ளே உட்கட்சி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஏம்பலம் செல்வம் எம்எல்ஏவுக்கு சபாநாயகர் பதவி வழங்கலாம் என பாஜக தரப்பில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், சபாநாயகர் பதவியை ஏற்க ஏம்பலம் செல்வம் தயக்கம் காட்டியதோடு, அமைச்சர் பதவி அல்லது கட்சி தலைவர் பதவி கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

இதனால் நியமன எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான அசோக் பாபுக்கு சபாநாயகர் பதவி கொடுக்கலாம் என பாஜக ஆலோசித்தது. இதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களில் ஒருவருக்குச் சபாநாயகர் பதவி கொடுக்காமல், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு எப்படி கொடுக்கலாம் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவ்வாறு சபாநாயகர் பதவியை யாருக்கு அளிப்பது என முடிவு எட்டப்படாமல், உட்கட்சிக்குள் நடக்கும் பிரச்சினையை தீர்ப்பதற்கு பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தான், சபாநாயகர் பதவிக்குக் காய் நகர்த்தியுள்ளது திமுக. உருளையான்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. நேருவை சபாநாயகராக ஆக்குவதற்கு முயற்சி எடுத்துள்ளது. இதுதொடர்பாக புதுவை திமுக தெற்கு மாநில செயலாளர் சிவா, முதல்வர் ஸ்டாலினிடம் பேசியுள்ளார். இதுசம்பந்தமாக ஸ்டாலினும் ஆலோசித்து வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

சனி 5 ஜுன் 2021