மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 ஜுன் 2021

நீட்: முனைவரின் கேள்விகளும், பேராசிரியரின் பதில்களும்!

நீட்:   முனைவரின் கேள்விகளும், பேராசிரியரின் பதில்களும்!

பேராசிரியர் நா. மணி

நீட் தேர்வு என்பது அரசியல் சாசனத்தின் படி பார்த்தால், இந்திய கூட்டாட்சிக்கு எதிரானது. சமூக நீதிக்கு எதிரானது. இந்திய பாராளுமன்ற நிலைக்குழு தீர்மானத்திற்கு எதிரானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீட் நடைமுறைக்கு வந்தது என்று கூறிக் கொண்டாலும், அதே உச்சநீதிமன்றத்தின் மார்டன் மருத்துவக் கல்லூரி தீர்ப்புக்கு எதிரானது. இவ்வளவையும் மீறி தரம், தகுதி, நியாயம் என்று பல பெயர்களில் தொடர்ந்து ஆதரித்து வருவோர் உண்டு. அவர்களில் பெரும்பாலானோர் பாஜக ஆதரவாளர்கள். சமூக நீதிக்கு எதிரானவர்கள். தரம் என்னும் மாயையில் மூழ்கி, சமூக அநீதிக்கு மறைமுக ஆதரவு தருபவர்கள்.

இதில் கடந்த வருடம் சென்னை IIT பெரியசாமி என்பவர் தொடுத்த பல கேள்விகளை பலர் நியாயம் என்று நம்பினர். ஆமாம் அவர் சொல்வது சரிதானே! என்றோ , குறைந்த பட்சம் அவர் கேள்விக்கு பதில் வேண்டும் என்றோ பலர் கோரினர். பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் திரு. பிரின்ஸ் கஜேந்திர பாபு இந்தக் கேள்விகளை அனுப்பி இதற்கு பதில் அளியுங்கள் என்றார். அவர் அனுப்பி வைத்தவுடன் பதில் எழுதி முடித்து விட்டேன். ஆனால் அதனைப் பொது வெளியில் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த சரமாரி கேள்விகளை எழுப்பிய பெரியசாமி 2011ஆம் ஆண்டில் சென்னை IITல் முனைவர் பட்டத்திற்கு படித்துள்ளார். அதன் பின்னர் அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இந்தக் கேள்விகளை தயாரித்து பொது வெளியில் பகிர்ந்து கொள்ளும் போது அவர் சென்னை IITல் இல்லை. அந்தப் பெயரை பயன்படுத்தியிருக்கக் கூடாது.

ஒருவேளை அவர் பணியில் இருந்தாலும் அவரது கேள்விகள் சென்னை IITன் கேள்விகள் அல்ல. அப்போதும் அவர் அந்த அடையாளத்தை பயன்படுத்தி இருக்கக் கூடாது. இதனை பயன்படுத்திய நோக்கம், IIT என்ற பிம்பம் கொண்டு தனது கேள்விகளுக்கு வலு சேர்க்கவே. எது எப்படியோ அவரது கேள்விகளும் அதற்கான பதில்களாக நான் சொல்வதும் இங்கே உங்களுக்காக.

கேள்வி-1 : தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ இடத்தில் சேர முடியாமல் போனதற்கு நீட் தேர்வு மட்டும்தான் காரணமா? 28000 கோடி பணம் வெறும் 19 மாணவர்களை மருத்துவ படிப்பில் சேருவதற்குத்தான் உபயோகிக்கப்பட்டதா?

ஆம், நீட் தேர்வு தான் காரணம். தமிழ்நாடு அரசு கல்விக்காக செலவிடும் தொகை நீட் தேர்வுக்கு மட்டுமே செலவிடும் தொகையாக சுருங்குவது தவறு. ஒருவர் 5ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல், ஏதோ கிடைத்த வேலையை நம்பி வாழ்நாளை கழித்து வருவதாக வைத்துக் கொள்வோம். இந்த வாழ்க்கைக்கு தனது 5ஆம் வகுப்பு ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்குமானால், அந்தப் பயனும் பெரியசாமி சார் கூறும் 28,000 கோடியில் தானே சேரும். இப்படி கணக்கை சரியாக போட்டுப் பழகுங்கள். நீட் தேர்வுக்கு முன்பு 19 பேர் தான் மருத்துவக் கல்லூரிக்கு போனார்கள் என்பது அறியாமையின் வெளிப்பாடு அல்லது உண்மையை மூடி மறைக்கும் வேலை. பத்தாம் வகுப்பில் அரசுப் பள்ளிகளில் முதலிடம் பெறும் அனைத்து மாணவ மாணவிகளும் ஆதிதிராவிடர் நலத்துறை அல்லது பிற்பட்டோர் நலத்துறை மூலம் தனியார் பள்ளியில் சேர்த்துவிடப்பட்டு அதற்கான கட்டணம் முழுவதையும் அரசே செலுத்தியது. இது அனைவரும் அறிந்த உண்மை. வெளிப்படையாக நடந்தவை. அத்தோடு அரசுப் பள்ளிகளில் ஒரு குறிப்பிட்ட விழுகாட்டிற்கு மேல் மதிப்பெண் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் முழுக்கட்டண விலக்கு, அரைக்கட்டண விலக்கு, விடுதி கட்டண விலக்கு, இதுதவிர தனி ரொக்கம் என்பவை கொடுத்து மாணவர்களை தனியார் பள்ளிகள் பிடித்து சென்றது, ஐஐடியில் படிக்கும் பெரியசாமிக்கு தெரியாது. ஆனால் எல்லோருக்கும் தெரியும். இவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து மருத்துவ கல்லூரிகளில் இடம் பிடிக்கும் போது அப்பெருமை தனியார் பள்ளி பதாகையின் கீழ்தான் வருகிறது. வேண்டுமானால் பெரியசாமி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதனை சோதித்து கூறட்டும்.

கேள்வி-2: திறமைவாய்ந்த ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் உள்ளபொழுது அவர்களை விட திறமை குறைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களால் result எப்படி கொடுக்க முடிந்தது? இது அரசின் தோல்வியா? அரசு பள்ளி ஆசிரியர்களின் தோல்வியா?

திறமையான ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் இருப்பதை பெரியசாமி சார் ஒத்துக் கொண்ட வரை மகிழ்ச்சி. அப்படி இருந்தும் தனியார் பள்ளிகள் அளவுக்கு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர இயலாமல் போனதற்கு தனியார் பள்ளிகளின் மோசடிகள் தான் காரணம். இதனை ஆசிரியர்கள் திறமையோடு முடிச்சு போடக் கூடாது. பதினொன்றாம் வகுப்பில் பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்தை நடத்திவிட்டு, பன்னிரெண்டாம் வகுப்பு முழுவதும் தேர்வு, தேர்வு என்று தேர்வு மட்டுமே வைத்து மனப்பாடம் செய்ய வைத்ததே காரணம். இந்த மோசடிகளை தடுக்காமல் விட்ட அரசும் காரணம். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திறமை தனியார் பள்ளிகளின் சூழ்ச்சிகளால் தோற்கடிக்கப்பட்டது.

கேள்வி-3: வெறும் 19 மாணவர்கள் மட்டுமே மருத்துவப்படிப்பிற்கு சென்ற பொழுது நடைபெறாத போராட்டங்கள் நீட் தேர்வை எதிர்த்துமட்டும் நடப்பதன் காரணம் என்ன?

வெறும் 19 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு போனபோது நாங்கள் முன்பே குறிப்பிட்டது போல பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து பின்னர் தனியார் பள்ளிகளில் வழியாக ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து பலன் பெற்று வந்தனர். இது தவிர, தனியார் பள்ளிகளில் இருந்து கூட கிராமப்புறங்களில் இருந்து மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர். நீட் தேர்வு வழியாக இந்த இரண்டு வாய்ப்புகளும் பறிக்கப்பட்டு விட்டன.

கேள்வி-4: NCERT பாடத்திட்டத்தை குறைத்து. தகுதி குறைந்த பாடத்திட்டத்தை தமிழ்நாட்டில் வைத்ததற்கு யார் பொறுப்பேற்பது?

NCERT பாடத்தை குறைத்து தமிழ்நாட்டில் வைத்தனர் என்பதும் இந்த குற்றச் சாட்டை முன் வைப்பவரின் அறியாமையே. தமிழ்நாட்டில் கல்வி வாரியம் இருந்து அதற்கு கல்வியாளர்கள் ஆசிரியர்கள் மெனக்கெட்டு திட்டமிட்டு உழைத்து உருவாக்கியதை NCERT பாடத்தை வெட்டிச் சுருக்கியது என்று களங்கப்படுத்துவது அறியாமைதான். NCERT பாடத்திட்டத்தையும் தமிழ் நாடு பாடத்திட்டத்தையும் நீங்கள் ஒப்பிட்டு பார்த்திருப்பீர்களா? அல்லது ஒப்பீடு ஆய்வுகள் கூட இருக்கிறது. அதையேனும் கண்ணுற்று உள்ளீர்களா? சரி போகட்டும். இப்போதேனும் அப்படியொரு ஆய்வுக்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

கேள்வி 5: 12 வருடங்களாக ஏன் பாடத்திட்டம் தமிழ்நாட்டில் மாற்றப்படவில்லை? Blue print எனப்படும் மோசமான தேர்வுமுறை ஏன் மாற்றப்படவில்லை?

எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டத்தை மாற்றலாம்? அதில் மாற்றத்திற்கான அடிப்படை என்ன? எத்தனை விழுக்காடு மாற்றப்படும் என்று ஏதேனும் தங்களுக்கு வரையறை தெரியுமா? பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படாததே அடிப்படை காரணமா? புளூ பிரிண்ட் முறையில் கேள்வித்தாள் வடிவம் பிரச்சினையா? நீட் தேர்வு நீண்ட கால தனிப் பயிற்சி சார்ந்தது. இதில் Application Analytical Critical என்பதெல்லாம் பசப்பு வார்த்தைகள். எந்த வகை தனியார் பள்ளியாக இருந்தாலும் எந்த மாநிலமாக இருந்தாலும் தனிப்பயிற்சி இல்லையெனில் பெருவாரியான மாணவர்கள் தேர்வு பெற முடியாது என்ற யதார்த்தத்தை மூடி மறைக்காதீர்கள்.

கேள்வி-6: ஏன் அரசுப்பள்ளிகளின் தரத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறவில்லை? 28000 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணாக்கப்பட்ட பொழுது ஏன் போராட்டங்கள் நடைபெறவில்லை?

இந்தக் கேள்வி சரியானதே. தமிழ்நாடுஅரசு இந்த இரண்டையும் கருத்தில் கொண்டு செயல்பட்டு இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் தரத்தை எதிர்த்து யார் போராட வேண்டும் என்று நினைக்கிறீர்கள் பெரியசாமி? அரசு பள்ளிகள் தாழ்ச்சி அடைந்து இருந்தால் அது உங்களின் மனதை பாதிக்கவில்லையா? சரி தரம் என்பது பற்றி தங்கள் கணிப்பு என்ன சார்? நீட் தேர்வில் வெற்றி பெறுவதே தரம் என்றால் ஆகாஷ், சைத்தன்யா, நாராயணா போன்ற தனிப் பயிற்சி நிறுவனங்களே அதிக ரிசல்ட் கொடுக்கிறது. நீட் பயிற்சி கூடங்களை மட்டுமே வைத்துக் கொண்டு மீதமுள்ள தனியார் பள்ளிகள் உட்பட எல்லா பள்ளிகளையும் இழுத்து மூட இதே போன்ற ஒரு பிரச்சாரம் செய்ய முன் வருவீர்களா?

கேள்வி-7: 11ம் வகுப்பு பாடத்தையே கற்று தராமல் மாணவர்களால் எப்படி நீட் தேர்வு எழுத முடியும்? 11ம் வகுப்பு பாடங்கள் கற்றுத்தரப்படாமல் போனதற்கு நாமும் நமது ஆசிரியர்களும் காரணமாக இருந்துகொண்டு நீட் தேர்வின் மேல் பழி போடுவது எவ்வகையில் நியாயம்? அவ்வாறு கற்றுத்தரப்படாமல் போனதற்கு ஏன் இங்கு யாரும் போராடவில்லை? இங்கு ஆசிரியர்களின் வசதிக்காக பாடத்திட்டத்தை குறைத்துவிட்டு எங்களுக்கு வேறு பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி வந்தது என்று கேள்வி எழுப்புவது எந்த வகையில் நியாயம்?

11ஆம் வகுப்பு பாடத்தை நடத்தாமைக்கு காரணம் நெறிமுறை அற்ற வகையில் இலாபம் ஈட்டத் துணிந்த தனியார் பள்ளிகள். அதனை கண்டுகொள்ளாமல் இருந்த அரசு காரணம். மீண்டும் அதே பதில் தான். இப்போது இத்தனை கேள்விகள் எழுப்பும் நீங்கள் ஏன் போராடவில்லை? பாடத்திட்டம் வெட்டிக் குறைக்கப்பட்டது என்பது பச்சை பொய் என்று சொல்லித் தான் ஆக வேண்டும். அப்படி ஏதும் நடைபெறவில்லை. நீட் தேர்வை மட்டுமே முன் வைத்து கல்வி கற்றுத் தரப்படும் பள்ளிகள் பல உள்ளன. அங்கு பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ ஆகிய தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறார்கள் என்று தங்களுக்கு தெரியுமா? வெறும் குறைந்த பட்ச மதிப்பெண் எடுத்து ஆக வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக பிளஸ் டூ தேர்வை எழுதுகின்றனர். இது சரியா? இந்த மோசடி பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்?

கேள்வி-8: ஒவ்வொரு ஆண்டும் மாநில பாடத்திட்ட தேர்வு முடிவுகள் வரும்பொழுது குறைந்தது 5 மாணவர்களின் தற்கொலை செய்தியை கடக்க நேரிடுகிறது. மிகவும் வருத்தமான விஷயம். ஆனால் நாம் மாணவர்களின் குறைகளை களைந்து அவர்களுக்கு மன உறுதி கொடுக்க வேண்டுமா? அல்லது அவர்களின் தற்கொலையை காரணம் காட்டி தேர்வை ரத்து செய்ய வேண்டுமா?

மாநில பாடத்திட்ட தேர்வு முடிவுகள் வரும் போது சராசரியாக 5 பேர் தற்கொலை என்ற புள்ளி விவரங்களுக்கு சரியான சான்றுகள் கொடுங்கள். இதுபற்றி பேசலாம். நீங்கள் அடித்து விடும் எல்லாவற்றையும் நம்பவும் முடியாது. பதில் கூறவும் முடியாது. நீட் தேர்வு பயிற்சி தாங்க முடியாமல் நீட் தேர்வு மையங்களில் படும் கஷ்டங்களை தாங்க முடியாமல் எத்தனை பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என தெரியுமா உங்களுக்கு? ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா என்ற சிறு நகரத்தில் மட்டுமே 1.75இலட்சம் பேர் நீட்/ ஜேஈஈ தேர்வுக்கான பயிற்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஈடுபடுகின்றனர். இங்கு நடக்கும் தற்கொலைகளை தடுக்க "தற்கொலை தடுப்பு மின்விசிறிகள்” (Suicide proof fan) உள்ளது. தெரியுமா உங்களுக்கு? அதையும் தாண்டி தற்கொலைகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் 60 நாட்களில் 50 தற்கொலைகள் நடந்துள்ளன. இதற்கு என்ன பதில் இருக்கிறது உங்களிடம்?

கேள்வி-9: அனிதாவின் மரணம் என்னை மிகவும் பாதித்த ஒரு விஷயம் அந்த குழந்தையின் மரணத்தை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. தெளிவு பெறுவதற்காக சில விஷயங்களை நாம் இதில் விவாதிக்க வேண்டியுள்ளது.

(அ) அனிதா அரசுப்பள்ளியில் படிக்கவில்லை: பெரம்பலூர் மாவட்டத்தில் மேலமாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார்.

அரசுப் பள்ளியில் படித்தாரா இல்லையா ?என்பது இங்கு பிரச்சினை அல்ல. அவர் மாநில தேர்வு வாரியத்தில் நல்ல மதிப்பெண் எடுத்து இருந்தார். "நீட் இல்லாமல் இருந்திருந்தால் நமக்கு கிடைத்திருக்கும்" என்ற மன உளைச்சல் தான் அவரை பிடுங்கி தின்றிருக்கும். நீட் தேர்வு தவிர, இதர உயர்கல்வி சேர்க்கை முழுவதும் மாநில பாடத்திட்டத்தில் இருந்து தான் நடக்கிறது. அதற்கும் தயாராக வேண்டும். நீட் தேர்வை மட்டுமே வருடம் ஒரு இலட்சம் செலவு செய்து 25 வயது அடையும் வரை படித்துக் கொண்டு இருக்கும் அளவுக்கு அவர் குடும்பம் வசதியானது அல்ல.

(ஆ) தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான பள்ளிகள் போல் அங்கும் 11ம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படவில்லை:

தமிழ் நாட்டில் மட்டுமல்ல. நீட்/ ஜேஈஈ தேர்வுக்காக தொழிற்சாலை போல் அல்லது கரும்பு ஆலை போல் மாணவர்களை சக்கையாக பிழியும் எங்கும் உரிய பாடங்கள் உரிய முறையில் நடத்தப்படுவது இல்லை. இதை ஏன் மூடி மறைக்கிறீர்கள்?

(இ) 2016ம் ஆண்டே அடுத்த வருடம் நீட் தேர்வின் மூலம்தான் சேர்க்கை நடக்கும் என்று மத்திய அரசாங்கமும் உச்ச நீதிமன்றமும் அறிவித்த நிலையில் அதை சரியாக மாணவர்களுக்கு கொண்டு செல்லாதது யார் தவறு?

நீட் தேர்வு முறையே கல்வியை மத்தியத்துவம் ஆக்கும் ஓர் முயற்சி. அந்த முயற்சியில் ஈடுபட்டது நடுவண் அரசு. அதனை தரத்தின் பெயரில் ஆதரித்தது உச்சநீதிமன்றம். இதனை தடுத்து நிறுத்தி அரசியல் சாசனத்தின்படி நாட்டின் கல்வியை காக்க வேண்டும் என்று கோருவதற்கு பதிலாக உச்சநீதிமன்றம் உடனடியாக பின்பற்றி நடக்க வேண்டும் என்ற வாதம் சரியா? சமமான கல்வி முறைகள் இல்லை. சமமான கற்றல் வாய்ப்புகள் இல்லை. இதில் சமமான தேர்வுகள் வேண்டும் என்று வலியுறுத்துவது சமூக நீதியை காவு கொடுப்பதை சரியென்று வாதிடுவது கூட்டாட்சி முறைக்கு கேடு விளைவிப்பவை ஊக்குவிப்பது தான் உங்கள் படிப்பு உங்களுக்கு கற்றுத் தந்த அறமா?

(ஈ) அனிதாவுக்கு தவறான நம்பிக்கையை கொடுத்தது யார்?? 11ம் வகுப்பில் 50% கேள்விகள் கேட்கப்படும் நிலையில் 11ம் வகுப்பு பாடத்தையே படிக்காமல் அவரால் எப்படி நீட் தேர்வில் மதிப்பெண் பெற முடியும்?

அனிதாவிற்கு தவறான நம்பிக்கை யாரும் தரவில்லை. நீங்கள் இப்போது வாதிடுவது கூட சரியான பார்வையில் இருந்து இல்லை. ஒரே கேள்வியை எத்தனை வடிவங்களில் கேட்பீர்கள்?

(உ) நீட் 2017 தேர்விற்கு அவர் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில் மிகத்தெளிவாக அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நீட் மூலமாகத்தான் நடக்கும் என்று குறிப்பிட்டிருந்த நிலையில் அந்த தகவலை அவருக்கு உறுதியாக தெரிவிக்காதது யார் தவறு?

இதுவும் ஒரே கேள்வியை வேறு ஒரு பரிமாணத்தில் கேட்கும் சூட்சமம். இது ஒரு மேட்டுக்குடி வாதம். அதற்கு முந்தைய ஆண்டும் அதே விளம்பரம் அதே அறிவிப்பு ஆனால் விதிவிலக்கு பெற்று மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்கள்.

(ஊ) அந்த விண்ணப்பத்தில் நீட் தேர்வில் இப்படித்தான் கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அதை அவருக்கு கற்றுக்கொடுக்காதது யார் தவறு?

கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் விலக்கு கிடைக்கும் என்று நினைத்து கொண்டு இருந்த அப்பாவி பெண்ணிடம் வளைத்து வளைத்து ஆயிரம் கேள்விகள் கேட்கிறீர்கள். அனிதாவை முன் வைத்து மற்ற இது போன்ற ஏழை எளிய மாணவர்களிடம் நீங்கள் கேட்கும் அகம்பாவமான கேள்வி.

(எ)நீட் தேர்வை எத்தனை முறை வேண்டுமென்றாலும் 25 வயதிற்குள் எழுதலாம் என்ற வாய்ப்பு உள்ள பொழுது அவருக்கு நம்பிக்கையை கொடுத்து மீண்டும் படிக்க வைக்காதது யார் தவறு?

இதுவும் ஒரு வக்கிரமான கேள்வி தான். சராசரியாக ஒருவர் 17 வயதில் பிளஸ் டூ படித்து முடிக்கிறார். அரசுப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடிப்பதே பெரிய சவால். இவர்கள் 17 வயது தொடங்கி 25 வரை சீட்டு கிடைக்கும் வரை அல்லது வயது முடியும் வரை வருடம் ஒன்றுக்கு 70,000 முதல் 90,000 ரூபாய்கள் செலவு செய்து (இதுவே நீட் தேர்வின் ஆண்டு சராசரி பயிற்சி கட்டணம்) படிக்க வேண்டும் என்கிறீர்கள்?

(ஏ)அவரை உச்ச நீதிமன்றம் அழைத்து சென்ற செலவில் 10ல் 1 மடங்கு செலவு செய்திருந்தால் அவரை மீண்டும் படிக்க வைத்து மருத்துவராக்கி இருக்கலாமே? அதை செய்யாதது யார் தவறு?

தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று ஒருவர் அதனை எதிர்த்து போரிடத் துணிந்தால் அவரை பார்த்து "பேசாமல் நீங்கள் அநீதியை ஏற்றுக் கொள்ளுங்கள். இதற்கு போய் போராட வந்து விட்டீர்களா? உங்களால் போராட முடியாது” என்று சொல்வதற்கு ஒப்பானது.

(ஐ) இப்படி அனைத்து தரப்பிலும் தவறு உள்ள பொழுது நீட் தேர்வின் மீது மட்டும் பழிபோட்டு மாணவர்களுக்கு அந்த தேர்வின் மீது வெறுப்பு வருமாறு செய்வது எந்த வகையில் நியாயம்???

நீட் தேர்வின் மீது எக்காரணம் கொண்டும் பழிபோடக் கூடாது. அது குற்றம் குறை ஏதும் அற்றது. புனிதமானது என்று கூறுங்கள். "அனைத்து தரப்பினர்" என்று ஒரு தரப்பினரையே குற்றம் சாட்டுகிறீர்கள். நீட் தேர்வே ஒரு கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரான முறை. சமூக நீதிக்கு எதிரானது. அரசியல் சாசனத்தின் சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது. உச்ச நீதிமன்றம் மார்டன் மருத்துவக் கல்லூரி வழக்கில் கொடுத்த தீர்ப்புக்கு கூட எதிரானது. இதனை சரிசெய்ய வேண்டும் என்ற கேட்பதை விடுத்து நீட் வந்து விட்டது. அதனை ஏற்று நட என்பது முறையா?

கேள்விகள்: Dr. T. பெரியசாமி., M.Tech., Ph.D(IIT Madras) என்று கூறப்படுகிறது.

பதில்கள்: பேராசிரியர் நா. மணி, மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.

(மீதி கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் மாலை 7 மணி பதிப்பில்)

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

ஞாயிறு 20 ஜுன் 2021