மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

புதிய 5 மேம்பாலங்கள்: அமைச்சர் எ.வ.வேலு

புதிய 5 மேம்பாலங்கள்: அமைச்சர் எ.வ.வேலு

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் 5 புதிய மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களுடன், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதில், நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார், முதன்மை பொறியாளர் சாந்தி, முதன்மை இயக்குநர் கோதண்டராமன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, “நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நெடுஞ்சாலைத்துறையின் பங்கு மிகவும் அதிகம். சாலை மற்றும் பாலங்களை கட்டும் பொழுது சில இடங்களில் காலதாமதம் ஏற்படுகிறது. அதற்கான காரணம் என்ன? பணி செய்யும் பொழுது ஏற்படும் சங்கடங்கள் என்ன? என்பதை ஒப்பந்ததாரர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டோம்.

மணல் கிடைப்பதில்லை, எம்.சாண்ட் பயன்படுத்த வேண்டும் என்றால் திட்ட மதிப்பீட்டை திருத்த வேண்டும், சென்னையில் நெடுஞ்சாலை பணிகளை செய்திட காவல்துறையின் அனுமதி பெற வேண்டும், காலதாமதத்தை தவிர்க்க துறையே அனுமதி பெற்று தர வேண்டும், ஒப்பந்ததாரர் உரிமம் புதுப்பித்தலில் உள்ள சில பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும்,

தார் மற்றும் சிமெண்ட் விலையேற்றம், பணி துவங்கும் பொழுது ஒரு விலை, முடிக்கும் பொழுது ஒரு விலை, இடையுள்ள வித்தியாசத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டது. மேலும், டெல்டா மாவட்டங்களில் கட்டுமான பொருட்கள் கிடைப்பதில்லை. கரூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து எடுத்து வருவதால் போக்குவரத்து செலவு கூடுகிறது.

டெல்டா மாவட்டத்தில் பணிக்கு மதிப்பீடு தயார் செய்யும் முன்பு கண்காணிப்பு பொறியாளர் நிலையில் கள ஆய்வு செய்து பின்னர் மதிப்பீடு தயாரிக்க வேண்டும்

சாலை விரிவாக்கத்தின்போது, நிலம் கையகப்படுத்துவதற்கு தனி அலுவலர் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஒப்பந்ததாரர்கள் விடுத்த கோரிக்கைகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று, நிறைவேற்ற முடிந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

10 ஆயிரம் கி.மீ சாலைகளை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க உள்ளாட்சித்துறையிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது. உள்ளாட்சி துறை சாலைகளை ஒப்படைத்ததும் நெடுஞ்சாலைதுறை தரத்திற்கு ஏற்ப கிராமப்புறங்களில் சாலைகள் அமைக்கப்படும். கடந்த ஆட்சியில் அறிவித்தபடி, சென்னையில் மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை 5 புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கான பணிகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தார் சாலைகள் அமைக்கும்போது உயரமாக போடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்குவது தொடர்பான அறிக்கை ஏற்கனவே தயார் செய்து தலைமை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மணல் கிடைக்காமல் இருக்கும் இடங்களில் எம்.சாண்ட் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எட்டு வழிச்சாலை குறித்து அரசின் நிலையை சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

புதன் 30 ஜுன் 2021