Nஆக்ஸிஜன் நிலவரம்: மோடி ஆய்வு!

politics

கொரோனா இரண்டாம் அலையின் போது நாடு முழுதும் மருத்துவ ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, அதன் விளைவாக பல உயிர்கள் பறிபோயின. நாடு முழுதும் நிலவிய ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க, ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி என்று ஒன்றிய அரசு தீவிரம் காட்டியது. மேலும் ஆக்ஸிஜன் உற்பத்தியைக் காரணம் காட்டியே தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டது.

இரண்டாம் அலை இன்னும் முழுதாக முடியாத நிலையில், இந்தியாவில் ஆக்ஸிஜன் நிலவரம் பற்றி இன்று (ஜூலை 9) பிரதமர் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

நாடு முழுவதும் ஆக்ஸிஜன் ஆலைகள் அமைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர். நாடு முழுவதும் 1500க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் ஆலைகள் வரவுள்ளன. இவற்றில் பிரதமர் நல நிதி, பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பிலிருந்து வாங்கப்படும் ஆக்ஸிஜன் ஆலைகளும் உள்ளடங்கியுள்ளன.

பிரதமரின் நல நிதியில் இருந்து வாங்கப்படும் ஆக்ஸிஜன் ஆலைகள், நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் வரவுள்ளன. பிரதமரின் நலநிதியில் இருந்து வாங்கப்படும் ஆக்ஸிஜன் ஆலைகள் செயல்பாட்டுக்கு வந்தவுடன், அவை 4 லட்சம் படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்கும் என பிரதமரிடம் தெரிவி்க்கப்பட்டது.

இந்த ஆலைகள் விரைவில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், இதற்காக மாநிலங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

ஆக்ஸிஜன் ஆலைகளை விரைவில் செயல்படுத்துவது தொடர்பாக, மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆக்ஸிஜன் ஆலைகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பில், மருத்துவமனை ஊழியர்களுக்கு போதிய பயிற்சியை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளை பிரதமர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சி பெற்ற ஊழியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆக்ஸிஜன் ஆலை பராமரிப்பு குறித்த பயிற்சி மாதிரி நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் 8000 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூர் மற்றும் தேசிய அளவில் ஆக்ஸிஜன் ஆலைகள் செயல்பாட்டை கண்காணிக்க, இணையதளம் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தை நாம் ஈடுபடுத்த வேண்டும் என பிரதமர் கூறினார். ஆக்ஸிஜன் ஆலைகளின் செயல்பாட்டை கண்காணிக்க இணையதளம் போன்ற முன்மாதிரி திட்டத்தை பயன்படுத்தி வருவது பற்றி பிரதமருக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

**- வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *