சிறப்புக் கட்டுரை: சும்மா வந்ததா தமிழ்நாடு..? பகுதி 2

politics

கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

தமிழ்நாடு என்று பெயர் மாற்றக்கோரி 1956 பிப்ரவரி 20ஆம் நாள், அனைத்துக்கட்சிகளின் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழரசு கழகம் ம.பொ.சிவஞானம், திமுக தலைவர் சி.என்.அண்ணாதுரை, பாரதிதாசன், கா.அப்பாதுரை, இந்திய பொதுவுடமைக்கட்சி ஜீவானந்தம், சி.பா.ஆதித்தனார் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆதரவோடு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்குப் பொதுமக்களும் பேராதரவு கொடுத்தனர்.

1953 டிசம்பரில் அன்றைய மத்திய அமைச்சர் கோவிந்த வல்லப பந்த் மேற்பார்வையில் நீதிபதி ஃபசல் அலி தலைமையில் மாநில சீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 1955 செப்டம்பர் 30ஆம் நாள் அறிக்கை கொடுத்தது. அதனடிப்படையில் மாநில சீரமைப்புச் சட்டம் (State Reorganisation Act) நாடாளுமன்றத்தில் 1956 ஆகஸ்ட் 31 அன்று நிறைவேற்றப்பட்டது.

அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுகின்ற வகையில் 1956ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் அடிப்படையில், 1956ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் நாள் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பின்னர், இந்தியாவில் 14 மாநிலங்கள், ஆறு யூனியன் பிரதேசங்கள் இருந்தன. பிரிந்து சென்ற மாநிலங்களுக்கு ஆந்திரா, கர்நாடகா என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயர் அப்படியே தொடர்ந்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்பது தமிழ் பேசும் மக்களின் மாநிலமாக இருந்தாலும், எல்லைப் பிரிப்பில் சிக்கல்கள் பல இருந்தன. அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு பகுதிகள் கன்னியாகுமரி மாவட்டமாகவும், செங்கோட்டை பகுதி திருநெல்வேலி மாவட்டத்துடனும் இணைக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டைவிட்டு மலையாளிகள், ஆந்திரர்கள், கன்னடர்கள் பிரிந்து போன பின்பும் கூட தமிழ்நாடு என்ற பெயர் மாற்றுவதற்கு என்ன தயக்கம் என்று 1955 அக்டோபர் பத்தில் திராவிடர் கழகத்தில் ஈவேரா பெரியார் அறிக்கை வெளியிட்டார்.

மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு மாநிலம் என்று அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்து விடுதலைப் போராட்ட வீரரான சங்கரலிங்கனார் 1956ஆம் ஆண்டு விருதுநகரில் உண்ணாவிரதம் இருந்தார். தமிழ்நாடு பெயர் மாற்றம், அரசுப் பணியில் உள்ளவர்கள் கதராடை அணிய வேண்டும், ரயிலில் அனைவரும் ஒரே வகுப்பில் பயணிக்க வேண்டும், வெளிநாட்டு விருந்தினர்களுக்கு ஆடம்பர வரவேற்பு, நடன நிகழ்ச்சிகள், அசைவ உணவுகள் கூடாது, அரசியல்வாதிகள் ஆடம்பர செலவு செய்யக் கூடாது, தேர்தல் சீர்திருத்தம் செய்ய வேண்டும், பிற மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடுவண் அரசு இந்தி மட்டுமே பயன்படுத்தக் கூடாது, நாடு முழுக்க மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கு விளைச்சலில் அறுபது விழுக்காடு லாபம் வேண்டும், மாணவர்களுக்கு தொழிற்கல்வி அளிக்க வேண்டும், பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்ளக் கூடாது ஆகிய 12 கோரிக்கைகளுடன் சங்கரலிங்கனார் பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்தார். 76ஆவது நாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பும், உணவு உண்ண மறுத்ததால், 1956 அக்டோபர் 13ஆம் நாள் கோரிக்கையில் உறுதியாக நின்ற சங்கரலிங்கனார் உயிர் துறந்தார்.

தமிழக மக்களிடம் கோரிக்கையை வலுவாக எடுத்துச் செல்ல தமிழரசு கழகத்தின் ம.பொ.சிவஞானம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தார். சி.பா.ஆதித்தனார் தலைமையில் தமிழ்நாடு பெயர் மாற்ற வேண்டுமென கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, முதல்வர் காமராஜரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தனர். 24.11.1956 அன்று மதராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றிட சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 42 வாக்குகளும், எதிராக 127 வாக்குகளும் கிடைத்ததால் தீர்மானம் தள்ளுபடி ஆனது.

25.12.1960அன்று ம.பொ.சி. தலைமையில் சென்னையில் நடந்த தமிழ்நாடு பெயர் மாற்றச் சிறப்பு மாநாடு பொதுமக்களின் ஆதரவைப் பெற்றதோடு, மாணவர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியது. மாணவர்களும், இளைஞர்கள் போராடி சிறை சென்றனர். 1961 ஜனவரி 30ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டன. தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் காமராஜரின் வாகனம் மறிக்கப்பட்டது. ஒளவை சண்முகம், கிருஷ்ணமூர்த்தி, கவிஞர் ஷெரீப், பாலசுப்பிரமணியம், இயக்குநர் நாகராசன், புலவர் கீரன், கலிவரதன் உள்பட தமிழரசு கழகத்தின் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.

1961ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு பெயர் தொடர்பாக சட்டமன்றத்தில் நல்ல அறிவிப்பு வருமென்று நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் வாக்குறுதி அளித்த பின்பு, போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

மதராஸ் மாகாண சட்டமன்றத்தில் பிரஜா சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.எஸ்.சின்னதுரை தமிழ்நாடு என்று பெயர் மாற்ற தீர்மானம் கொண்டு வந்தார். பேராசிரியர் அன்பழகன், ப.உ.சண்முகம் ஆகியோர் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர். தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது. 1961ஆம் பிப்ரவரி 24ஆம் நாள் மதராஸ் மாகாணம் இனிமேல் தமிழில் குறிப்பிடும்போதும், உள்மாநில கடிதப் போக்குவரத்திலும் தமிழ்நாடு என்றே அழைக்கப்படும், வெளித்தொடர்புகளின்போது ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்பது நீடிக்கும் என்று நிதியமைச்சர் சுப்பிரமணியம் பேரவையில் அறிவித்தார். மறுநாள் வெளியான மாநில நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை என்றே குறிப்பிடப்பட்டது. இது போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மக்களிடையே ஓரளவு ஆறுதலை உண்டாக்கியது.

இதற்கிடையில், ஆந்திரா, கேரளா இரண்டு மாநிலங்களோடும் எல்லை தொடர்பான சிக்கல் நீடித்தது. போராட்டங்கள் தொடர்ந்ததால், தமிழக முதல்வர் காமராஜரும், ஆந்திர முதல்வர்கள் பிரகாசமும், சஞ்சீவ ரெட்டியும் எல்லைப் பிரிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

தமிழ்நாடு, ஆந்திரா மாநில எல்லைப் பிரச்சினைகளைத் தீர்த்திட எச்.வி.படாஸ்கர் (H.V.Pataskar ) ஆணையம் அமைக்கப்பட்டது. படாஸ்கர் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில், தமிழர்கள் அதிகம் வாழ்ந்த திருப்பதி, சித்தூர், நெல்லூர் பகுதிகள் ஆந்திராவுக்கும், தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு பகுதிகள் கேரளாவுக்கும், ஓசூரின் சில பகுதிகளும் கொள்ளேகால், கோலார் பகுதிகள் கர்நாடகாவுக்கும் சென்றன.

திருத்தணி, சித்தூர், புத்தூர் தாலுகாக்களைச் சேர்ந்த 318 கிராமங்கள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டன. திருவள்ளூர், பொன்னேரி தாலுகாக்களைச் சேர்ந்த 148 கிராமங்கள் ஆந்திரத்துடன் இணைக்கப்பட்டன. ஆந்திரப் பிரதேசம் மற்றும் மதராஸ் எல்லை மாற்றியமைப்பு சட்டம் 1959 (Andhra Pradesh and Madras (Alteration of Boundaries) Act, 1959) மூலம் உடனடியாக இவை நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்திய நாடாளுமன்றத்தில், மதராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ராமமூர்த்தி அரசியலமைப்பு சட்டத்திருத்தக் கோரிக்கை வைத்தார். 1961ஆம் ஆண்டு அந்தக் கோரிக்கை விவாதத்துக்கு வந்த போது ராமமூர்த்தி சிறையில் இருந்ததால், தமிழ்நாடு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பூபேஷ் குப்தா நாடாளுமன்ற மாநிலங்களவையில் உரையாற்றினார். இந்தியாவின் பழமை வாய்ந்த வளமையான மொழியான தமிழை நினைவுகூரும் வகையில் தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டுமென குப்தா கோரிக்கை வைத்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை இலக்கியங்களை எடுத்துக்காட்டி, தமிழின் பெருமையை, தமிழ்நாட்டின் சிறப்பை எடுத்துக்கூறி, குப்தாவின் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார்.

1963ஆம் ஆண்டு ஜூலை 23இல் மதராஸ் சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர் இராம.அரங்கண்ணல் மீண்டும் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போதும் போதிய உறுப்பினர்கள் ஆதரவின்றி தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் பக்தவச்சலம் முதல்வராக இருந்தார்.

1967ஆம் ஆண்டு 133 தொகுதிகளில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்தது. முதல்வராக சி.என்.அண்ணாதுரை பொறுப்பேற்றார். 1967 ஏப்ரல் 14ஆம் நாள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பெயரை தமிழக அரசு தலைமைச் செயலகம் என்று மாற்றி அமைத்து முதல் வரலாற்றைப் பதிவு செய்தார் அண்ணா.

1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் சட்டமன்றக் கூட்டத்தில் தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானத்தை முதல்வர் அண்ணாதுரை முன்மொழிந்தார். காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சித் தலைவரான பி.ஜி.கருத்திருமன் தமிழ்நாடு மெட்ராஸ் ஸ்டேட் என்று இணைத்து வைக்கலாம் என்று ஆலோசனை கூறினாலும், தங்கள் கட்சி தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறினார். தமிழரசு கழகத்தின் ம.பொ.சிவஞானம் தீர்மானத்தை ஆதரித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலசுப்பிரமணியம், சுதந்திரா கட்சியின் ஆதிமூலம் உள்ளிட்டோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக உரையாற்றினார்கள். அனைத்து உறுப்பினர்களின் பேராதரவோடு தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் அறிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் அண்ணா, தமிழ்நாடு என்று மூன்று முறை சொல்ல, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாழ்க என்று மூன்று முறையும் முழக்கமிட்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானம் 23.11.1968அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டதை, இன்றைய கலைவாணர் அரங்கமான அன்றைய பாலர் அரங்கில் 01.12.1968 அன்று தமிழ்நாடு அரசு சார்பில் விழா எடுத்துக் கொண்டாடப்பட்டது.

**[சும்மா வந்ததா தமிழ்நாடு..? பகுதி 1](https://www.minnambalam.com/politics/2021/07/13/7/origin-of-Tamil-Nadu-and-its-history)**

முற்றும்

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *