மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: டெல்லியில் வெள்ளைக்கொடி திட்டமா?

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: டெல்லியில் வெள்ளைக்கொடி திட்டமா?

அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் நேற்று (ஜூலை 25) காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்ற நிலையில், நேற்று இரவு அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து இரவு டெல்லிக்குப் புறப்பட்டுள்ளார்.

இன்று இருவரும் டெல்லியில் பாஜக தலைவர் நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகின்றன. நேற்று டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அமைச்சராகியிருக்கும் முன்னாள் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில் நேற்று இரவு எடப்பாடி பழனிசாமியும், அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய கொறடாவுமான எஸ்.பி.வேலுமணியும் கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டனர்.

இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“ஏற்கனவே மின்னம்பலத்தில் மோடி - ஸ்டாலின் சந்திப்பு காத்திருக்கும் சசிகலாஎன்று ஒரு செய்தி போட்டிருந்தீர்கள். அதன்படி மோடியை நேருக்கு நேர் சந்தித்துவிட்டு வந்த பிறகு தமிழகத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஆபரேஷனை தொடங்கியிருக்கிறார் ஸ்டாலின்.

முதல்கட்டமாக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ரெய்டு நடத்தி, அதன் அடிப்படையில் சொத்துக் குவிப்பு வழக்கும் பதியப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து பல முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கை சூடுபிடிக்கத் தொடங்குகிறது. நேற்றுகூட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய வேலுமணி திமுக அரசு முன்னாள் அதிமுக அமைச்சர்களை பழிவாங்குவதாகப் பேசியிருக்கிறார். மேலும், நான்தான் முதலில் பழி வாங்கப்படுவேன் என்று நினைத்தேன் என்றும் கூறியிருக்கிறார்.

சற்றேறக்குறைய இதற்காகவே காத்திருந்தது போல் சசிகலாவும் தனது அடுத்தடுத்த அதிரடிகளைத் தொடங்கிவிட்டார். ஆடி மாதம் முடிவதற்காகவும், அரசின் முழு ஊரடங்கு முடிவதற்காகவும் காத்திருக்கும் சசிகலா அலைபேசி உரையாடலோடு சேனல்களுக்கு சிறப்புப் பேட்டியளித்துள்ளார். அதில் ஜெயா டிவிக்கு அளித்த பேட்டியில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு என்னையே பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கும் என்றும் கூறியிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்யும் விதமாகத்தான் அவர் அவைத் தலைவர் மதுசூதனனை அப்போலோவில் சென்று நலம் விசாரித்தார் என்றும் சொல்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வம், அடுத்து எடப்பாடி பழனிசாமி இருவரும் டெல்லி புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள். அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது அதன் உட்கட்சிப் பிரச்சினைகளில் கவனம் செலுத்திய அளவுக்கு இப்போது ஆர்வம் செலுத்த பாஜக தயாராக இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

ஆனாலும் ஓ.பன்னீர் தொடர்ந்து டெல்லியிடம் முறையிட்டு வந்திருக்கிறார். அதிமுகவில் சசிகலாவின் ஆதிக்கம் தொடர்வது பற்றி அவர் டெல்லிக்குத் தகவல் சொல்லி வந்திருக்கிறார். இந்த அடிப்படையில்தான் தமிழக பிரச்சினைகளுக்காக டெல்லியில் பேசுவதுபோல போய், அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சினைகளைப் பேச இருக்கிறார்களோ என்று அதிமுக நிர்வாகிகளிடத்தில் பேச்சாக இருக்கிறது” என்கிறார்கள் அதிமுக தரப்பில்.

பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானம் செல்லாது என்று சசிகலா தொடுத்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வர இருக்கிற நிலையில் பன்னீர், எடப்பாடியின் டெல்லி பயணம் அதிமுகவில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

சசிகலா ஆதரவாளர்களிடம் இதுகுறித்து நாம் பேசுகையில்,

“அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நிலை, வயது மூப்பு காரணமாக அவரது பதவியை இன்னொருவருக்கு இப்போது மாற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் செயற்குழுவையோ, பொதுக்குழுவையோ கூட்ட வேண்டுமென்றால் அவைத் தலைவர்தான் கூட்ட வேண்டும்.

சசிகலா பல தொண்டர்களிடம் போனில் பேசும்போது, ‘அதிமுகவில் எல்லாரும் சமம், எல்லாரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும், அம்மாவை கூட பலர் கருத்து வேறுபாடு காரணமாக திட்டினார்கள். ஆனால், அம்மா அவர்களையும் சேர்த்துக் கொண்டார்’ என்றெல்லாம் பேசினார். ஒரு நிர்வாகி, ‘எடப்பாடியை ஜெயில்ல போடணும்மா’ என்றபோது, ‘அப்படியெல்லாம் பேசக் கூடாது’ என்றும் கூறினார். அவர் இப்போதைய நிலையில் எடப்பாடியை பழிவாங்கும் மன நிலையில் இல்லை. இப்போதைய நிலையில் அதிமுக ஒருங்கிணைந்து செயல்பட்டால் திமுக கைவைக்கத் தயங்கும். எனவே அதன்படி ஓ.பன்னீர்செல்வம் அவைத் தலைவர், எடப்பாடி பழனிசாமி பொருளாளர், சசிகலா பொதுச் செயலாளர் என்ற நிலையை நோக்கிய காய்கள் நகர்த்தப்படுவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் ஓபிஎஸ், எடப்பாடி டெல்லி அழைக்கப்பட்டதுபோல் எங்கள் தரப்பில் யாரும் அழைக்கப்படவில்லை. எனவே என்ன நடக்கிறது என்பது புரியாமல்தான் இருக்கிறார். ஆனால் சசிகலா அமைதியாக இருக்கிறார். அவருக்கு சில சிக்னல்கள் கிடைக்காமல் இவ்வளவு விரிவான பேட்டிகளைக் கொடுத்திருக்க மாட்டார்” என்கிறார்கள் பட்டும்படாமலும்.

இது அதிமுகவைப் பற்றிய இன்றைய விவாதம்!

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

திங்கள் 26 ஜூலை 2021