xஊரடங்கு நீட்டிப்பு: கூடுதல் தளர்வுகள் இல்லை!

politics

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாகத் தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இன்றுடன் ஊரடங்கு முடிவடைவதால் முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜூலை 30) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்படி, கூடுதல் தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், “மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய்த் தொற்றுப் பரவல்; அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட

செயல்பாடுகள் தவிரக் கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி 31-7- 2021 முதல் 9-8-2021 காலை 6.00 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நகரங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதும் அதனால் நோய்த்தொற்றுப் பரவல் அபாயம் ஏற்பட்டு வருவதும் விவாதிக்கப்பட்டது.

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்படாவிட்டால் அதன் விளைவுகள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். எனவே, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

மேலும், சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதி மாவட்ட ஆட்சியர்கள் / மாநகராட்சி ஆணையர்கள், காவல்துறையினர் அப்பகுதியை மூடும் நடவடிக்கைகளைப் பொதுமக்கள் நலன் கருதி முடிவு செய்யலாம்.

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதைச் சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்.

அனைத்துக் கடைகளும், உரியக் காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

மேற்படி விதிமுறைகளைப் பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக / இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நோய்த்தொற்றுக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்

நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களைக் கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகளைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு, நோய்த்தொற்றுப் பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், கீழ்க்கண்ட நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதரச் செயல்பாடுகள் அனுமதி இல்லை.

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், தீவிரமாக நோய்த்தொற்று பரவலை, வீடு வீடாகக் கண்காணிக்கக் குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படும்.

அனுமதிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகள் தொடர்புடைய துறைகளால் கண்டிப்பாக அமல்படுத்தப்படுத்தப்பட வேண்டும்.

கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

மூன்றாம் அலை என்ற ஒன்று தமிழ்நாட்டில் ஏற்படவே முடியாத வகையில் நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்கவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *