மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 ஆக 2021

‘9 பேரும் குற்றவாளிகள்” : மருத்துவர் சுப்பையா வழக்கில் தீர்ப்பு!

‘9 பேரும் குற்றவாளிகள்” : மருத்துவர் சுப்பையா வழக்கில் தீர்ப்பு!

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 4) தீர்ப்பளித்தது.

2013 ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியிலுள்ள 2.25 ஏக்கர் நிலத்தகராறு தொடர்பாக இந்த கொலை நடந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. தலை, கழுத்து, கை, என்று 20க்கும் மேற்பட்ட வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் மருத்துவர் சுப்பையாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் 2013 செப்டம்பர் 22ஆம் தேதி உயிரிழந்தார்.

டாக்டர் சுப்பையா கொலை செய்யப்பட்ட காட்சிகள் சம்பவம் நடந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை தொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் காவல்துறையினர், அரசு பணியிலிருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐய்யப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், ஐயப்பன் அப்ரூவர் ஆனார்.

கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கை ஜூலை இறுதிக்குள் முடிக்க சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவின் படி, கொரோனா காலத்திலும் நேரடி விசாரணையாகத் தினம் தோறும் நடைபெற்றது.

அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.விஜய ராஜ் ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ண லக்ஸ்மனராஜு, ரகுநாதன், சந்திரசேகர் உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடினர்.

அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.

சாட்சி விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பினை ஜூலை 28 ஆம் தேதி சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி ஒத்திவைத்தார். ஆகஸ்ட் 2ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கு தீர்ப்புக்காக ஆகஸ்ட் 2ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட மேரிபுஷ்பம், பொன்னுசாமி ஆகியோர் உடல் நிலை சரியில்லாததால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என அவரின் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 4 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்தார். அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், பொன்னுசாமி, மேரி புஷ்பம், பாசில், போரிஸ், வில்லியம், ஏசுராஜன், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வ பிரகாஷ் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி அல்லி தீர்ப்பு வழங்கினார்.

இவர்களுக்கான தண்டனை விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-பிரியா

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

புதன் 4 ஆக 2021